

‘தை பிறந்தால் வழி பிறக்கும்!’ என்பது பெரியோர் வாக்கு. அதற்கு முன்னேற்பாடாகப் பணி நிறைந்த மார்கழியிலேயே விழாக்கோலம் பூண்டு விடுகிறது. குளிரே பயந்தோடும் அளவுக்குக் குதூகலம் விண்ணை முட்டுகிறது. பிரம்ம முகூர்த்தத்திலேயே ஆலயங்கள் அதிரடி காட்டி உலகை விழிப்படையச் செய்து விடுகின்றன. தை முதல் நாளே பொங்கல் பண்டிகை புவியைப் புளகாங்கிதப்படுத்தி விடுகிறது. போகியில் ஆரம்பித்துக் காணும் பொங்கல் வரை களை கட்டிவிடுகிறது. அதே தையில்தான்
27 நட்சத்திரங்களில் எட்டாவது நட்சத்திரமான பூச நட்சத்திரம் வரும் தினம், தைப்பூசத் திருநாளாக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
தைத் திங்கள் பௌர்ணமியும் பூச நட்சத்திரமும் இணையும் இந்த நாள், அழகன் முருகன் அசுரர்களை அழிக்க அன்புத்தாய் பார்வதி தேவியிடம் ஞானவேல் பெற்றதன் சிறப்பை உணர்த்துவதாக ஒரு சில செய்திகள் கூறுகின்றன.
மயில் வாகனத்தில் உலகைச் சுற்றி வந்த முருகன், அண்ணன் கையில் ஞானப் பழத்தைக் கண்டதும் தன் குடும்பத்தார் மீதே வெறுப்புற்றுக் கைலாயத்தை விலக்கிக் கழனிகளின் நடுவில் கம்பீரமாக நின்ற பழனி மலையில் குடியேறிய நாளே இந்தத் தைப்பூசத் திருநாளின் சிறப்பென்றும், அதற்காகவே விழாவென்றும் வேறு சில செய்திகள் கூறுகின்றன.
தீமைகளை அழித்து நன்மைகள் வளரவும் வாழவும் வழி வகுப்பதே இந்த நாள் என்பது தொன்று தொட்டு வரும் நம்பிக்கை. தமிழ்க் கடவுளான இளமுருகன் வீற்றிருக்கும் எல்லா இடங்களிலும் இந்த விழா சீரோடும் சிறப்போடும் கொண்டாடப்பட்டு வருகிறது.
நமது நாடு மட்டுமல்லாது இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலும், மேலும் முருக பக்தர்கள் வாழும் அனைத்து இடங்களிலும் தைப்பூச விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுவதே இதன் சிறப்பை உணர்த்தும்.
பூச நட்சத்திரத்தின் அதிபதி சனி என்றும், ராமனின் இளவல் பரதன் பிறந்த நட்சத்திரமென்றும், இஷ்ட தெய்வம் குரு பகவான் என்றழைக்கப்படும் தட்சணாமூர்த்தி என்றும் பழம் நூல்கள் கூறுகின்றன.
காவடி எடுப்பது, பால் குடம் தூக்குவது, விரதம் இருப்பது, புனித நீராடுவது என்று இந்த நாளின் சிறப்புக்கள் பல.
மனித சக்தி மேலோங்க வேண்டுமென்றால், உடலும் உள்ளமும் உறுதி பெறவேண்டும். மனதில் நம்பிக்கை ஆலமரம் போன்று தழைக்க வேண்டும். இவை அனைத்தையும் ஒரு சேர அளிப்பது இந்தத் தைப் பூசத் திருநாள்!
காவடியைத் தோளில் வைத்து ஸ்டெப் போட ஆரம்பித்ததும் உடலில் ஓர் உறுதி தலையெடுத்துவிடும். சிலர் நாக்கில் மட்டும் அலகு குத்திக்கொண்டு காவடி எடுப்பர். சிலரோ உடல் முழுவதும் அலகு குத்தியபடி கழுத்தில் காவடியோடு சிறு தேரையும் இழுத்து வருவர். அலகு குத்துகையில் ஏற்படும் வலியைத் தாங்க உடலில் தெம்பும் மனதில் வலுவும் வேண்டும். மனதிலுள்ள முருக நம்பிக்கை இவை எல்லாவற்றுக்கும் உதவும். அடித்தளம் வகுக்கும்.
புனித நதிகளில் நீராடுவது இந்த நாளின் சிறப்பு என்றாலும், முடியாதவர்களும், முதியோர்களும் வீட்டிலேயே புனித நீராடலாம்.
செல்போனுக்கு, லேப் டாப்புக்கு சார்ஜ் ஏற்றுவதைப் போல், ஆண்டுக்கு ஒரு முறை முருகன் தன் தைப்பூசத்தால் தன் பக்தர்களுக்கு சார்ஜ் என்ற வலுவேற்றும் நிகழ்வே இது.
சூரபத்மன் வதம் என்பது ஓர் உயிரைப் போக்குவதல்ல. அநீதியை அழிப்பது! தீயவற்றை விலக்குவது! உலகை உய்விப்பது! அமைதியை நிலை நாட்டுவது! மண்ணில் வாழும் மக்களுக்கு வழி காட்டுவது!
‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்றார்கள் முற்றுமறிந்த நம் மூதாதையர்கள். அனைத்து மதங்களும் போதிப்பது அன்பையும் அமைதியையுந்தான்! அந்த அன்பையும் அமைதியையும் ஒவ்வொருவருக்கும் வழங்குவதே தைப் பூசத் திருநாளின் தலையாய
நோக்கம்! அதனால்தான் அழைக்கிறோம்! வாருங்கள் அனைவரும் ஒன்றாய்ச் சேர்ந்து தைப்பூச நாளை ஆனந்தமாயக் கொண்டாடுவோம்!