நெற்றிக்கு அழகு திருநீறு: அதன் ஆன்மிக ரகசியங்கள் தெரியுமா?

Spiritual Secrets of Thiruneeru
Thiruneeru, Thirunavukkarasar
Published on

நெற்றிக்கு அழகு திருநீறே. அதனால்தான் ‘நீறில்லா நெற்றி பாழ்’ என்றார்கள். இதனால் ஏற்படும் நன்மைகளும், அவற்றை எவற்றில் இருந்தெல்லாம் பெறலாம் என்பதை இந்தப் பதிவில் காண்போம்.

சாதாரணமாக, திருநீற்றை எல்லாவிதமான சமய, சந்தர்ப்பங்களிலும் நம் முன்னோர்கள் அணிந்து வந்துள்ளனர். வெளியிடங்களுக்குச் செல்லும்பொழுதும், வீட்டில் சாமி கும்பிடும்பொழுதும், கோயில்களுக்குச் சென்றதும் முக்கியமான பிரசாதமாக நமக்கு வழங்கப்படுவது திருநீறுதான். சிலர் நெற்றியில் அவற்றை அணிந்து விட்டு கோயிலில் கொடுக்கும் அந்தத் திருநீற்றுப் பிரசாதத்தை வீட்டிற்கு எடுத்து வந்து தினசரி பூசிக்கொள்வதும் உண்டு. இது பக்தியினால் ஏற்படுவது.

அதேபோல், எந்த துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வந்தாலும் எல்லோரும் துணியை துவைத்து குளித்துவிட்டு, திருநீற்றை பூசிக்கொண்டுதான் வீட்டிற்குள்ளே நுழைய முடியும். இது எல்லோர் வீட்டிலும் நடக்கும் மரபு. திருநீறு உள்ளத்தையும், உடலையும் வெண்மையாக்குவது. ஆதலால், அதற்கு வெண்ணீறு என்றும் சிறப்பிக்கப்பட்ட பெயர் உண்டு. மாட்டுச் சாணத்திற்கு நச்சுக்களை அளிக்கும் பண்பு இதற்கு உண்டு. அந்தப் பண்பு அதிலிருந்து செய்யப்பட்ட திருநீற்றுக்கும் உண்டு. அதனால் இதன் சாம்பலாகிய திருநீறும் நமக்குக் கவசமாகப் பயன்படுகிறது. அதனால்தான் நமது திருமந்திரம், 'கவசத் திருநீறு' என்று இதனை சிறப்பித்துக் கூறுகிறது.

இதையும் படியுங்கள்:
குழந்தைகளின் எதிர்காலத்தை அற்புதமாக்கும் 5 மந்திரங்கள்!
Spiritual Secrets of Thiruneeru

இன்னும் சிலர் விரத நாட்களில் சமைக்கும் பாத்திரங்களுக்கு மூன்று பட்டை வைத்து, அதன் நடுவில் குங்குமம் வைத்து பிறகுதான் அந்தப் பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி சமைக்க ஆரம்பிப்பார்கள். அதைப் பார்த்தாலே சிவலிங்கத்திற்கு அலங்காரம் பண்ணியது போல் இருக்கும். அதைப் பார்த்தாலே நம்முடன் ஏதாவது பேச வரும் அக்கம் பக்கத்தினர் கூட இன்று ஏதோ முக்கிய நாள் என்று நினைத்துக்கொண்டு, எதுவும் பேசாமல் சென்று விடுவார்கள். அப்படி ஒரு மரியாதை தருவார்கள் அந்த திருநீறுக்கு.

மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை இவற்றை நீக்கிக் கொள்பவருக்கு இறைவனின்  திருவருள் கிட்டும் என்பதன் விளக்கமே முப்பட்டைத் திருநீறு உணர்த்தும் செய்தி. இறைவன் தலைவன்; ஆன்மா அவன் நேசிப்பவள்; நேசிப்பவள் தலைவனை அடையத் தடையாக இருப்பது ஆணவம், கன்மம், மாயை என்னும் அழுக்குகள். இந்த அழுக்குகள் சாம்பலாகும்போது இறைவனை அடையும் ஞான வாசல் திறந்துகொள்ளும். இதுவே நெற்றியில் நீறு அணிவதற்கு விளக்கம்.

விதிப்படி செய்யப்படுகின்ற வேள்விகளின் முடிவில் ஏற்படும் பொடிப்பட்ட சாம்பலும் நீறு ஆகும். இது புத்தியைத் தரும். ஆதலால் இது வைதீகத் திருநீறு என்று அழைக்கப்படுகிறது. வழிபட்டு செய்யப்படுகின்ற நீறு, 'சைவத் திருநீறு' எனப்படும். இது பக்தியுடன் செய்யப்பட்டு புத்தியையும் முக்தியையும் தருவதாகும்.

இதையும் படியுங்கள்:
ஸ்ரீ கிருஷ்ணனும் பட்டத்ரியும் நூறு நாட்கள் நடத்திய சம்பாஷணை பின்னணியில் உள்ள அற்புதம்!
Spiritual Secrets of Thiruneeru

பசுவின் சாணத்தை வளர்பிறை, முழு நிலவு ஆகிய நாட்களில் தாமரை இலையில் ஏந்தி அதனுடன் பால், தயிர், நெய், கோ நீர் விட்டு கலந்து பிசைந்து உருண்டைகள் செய்து அவற்றை சம்பா நெற்பதரை விரித்து, நெருப்பில் வேக வைத்து எடுப்பார்கள். அந்த வெண்ணிற உருண்டைகளை பூசுவது சிறப்புடையதாகும். தூய்மையான திருநீறு என்றால் இதுதான். கிராமத்தில் கற்சூளையில் எரிந்த சாம்பலை எடுத்து சுத்தம் செய்து அதைப் பயன்படுத்துவதை பார்த்திருக்கிறோம்.

இடி விழுந்தால் மரம் எரிந்து உண்டாகிய சாம்பலையும் திருநீறாகப் பயன்படுத்துகிறார்கள். எதிர்பாராதவிதமாக வாசனை தரக்கூடிய மரங்கள் எரிந்து பஸ்பமானால் அதையும் எடுத்து திருநீறாகவும் உபயோகிப்பது உண்டு. கிராமங்களில் பசுவின் சாணத்தை நன்றாக எரித்து அதை பஸ்பமாக்கி உபயோகிப்பதுதான் வழக்கத்தில் உள்ளது.

கிறிஸ்தவர்கள் கல்லறைத் திருநாள், குருத்தோலைத் திருநாள், விபூதி திருநாள் என்று பனையின் குருத்தோலையை எரித்து அதை குருத்தோலைத் திருநாளின்போது நெற்றியில் அணிந்து கொள்வார்கள். தேவாலயங்களில் மதகுரு அணிவித்து விடுவார். அதன் பிறகு ஈஸ்டர் தொடங்கிவிடும். அந்த நாற்பது விரத நாட்களில் நெற்றியில் பொட்டு வைக்கும் பெண்மணிகள் எந்தவித அலங்காரமும் இன்றி இருப்பார்கள். அவர்களுக்கு அது ஒரு சமயச் சடங்கு.

இதையும் படியுங்கள்:
பதவி, புகழ் தரும் அதிகார கோல ஆண்டார்குப்பம் முருகன்!
Spiritual Secrets of Thiruneeru

‘உன்னிடம் உள்ள மதிப்புமிக்க உயர்ந்த பொருளை பிறருக்கு அளித்துவிடு. உலகில் அந்நியனைப் போல் வாழ்க்கை நடத்து’ என்று நபிகள் நாயகம் கட்டளை இடுகிறார். அதற்கு முன்பே நம் முன்னோர்கள் பெருமைகள் பல வாய்க்கப்பட்ட பசுவை கோ தானமாக வழங்கியது உண்டு. அதேபோல், இன்றும் கிராமப்புறங்களில் முதன்முதலாக வளைகாப்பு நடத்தும் பெண்களுக்கு பசுவை தானமாக விலை உயர்ந்த சீதனமாகப் பெண்ணைப் பெற்றோர்கள் வழங்குவது உண்டு. இதனால் அந்தக் குடும்பம் பெருகும் என்பது அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. இது மிகப்பெரிய அறச்செயலும் கூட. பசு தானம் இல்லை. அதைவிட உயர்ந்தது என்று கூறுவது உண்டு.

‘பூச இனியது நீறு புண்ணிய மாவது நீறு
பேச இனியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம்
ஆசை கெடுப்பது நீறு வந்தம தாவது நீறு
தேசம் புகழ்வது நீறு திருஆல வாயான் திருநீறே.’

என்கிறார் ஞானசம்பந்தர்.

எந்த முறையில் தீ உண்டாகினும் உலகும், உலகப் பொருட்களும், உலக உயிர் உடல்களும் எரிந்து இறுதியில் சாம்பல் ஆவது திண்ணமே. நம் உடலும் சாம்பலாவது திண்ணம். ‘நீரும் நீறே’ என்று திருநீறு நமக்கு அறிவித்துக்கொண்டே இருக்கின்றது. இந்த உடலில் தங்கி உள்ள உயிரோ, அழிவற்ற உயிர், அழிவுறும் உடலும் நீக்கி, மீண்டும் பிறவா நிலை அடைந்து, இறைவழி என்னும் நிலையான மகிழ் நிலையைப் பெற திருநீறு அணிந்து, 'பிறவா யாக்கைப் பெரியோன்' ஆகிய இறைவனடிகளைச் சேர்ந்து உய்வோமாக!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com