தஞ்சை பெரிய கோயில் வாராகி அம்மன் அலங்கார ரகசியங்கள் மற்றும் ஆஷாட நவராத்திரி பலன்கள்!

நவதானியம் மற்றும் மாதுளை முத்துகளால் அலங்கரிக்கப்படும் வாராகி அன்னை வழங்கும் ஆஷாட நவராத்திரி அருள்.
ஆஷாட நவராத்திரி - Thanjavur Varahi Amman
ஆஷாட நவராத்திரி - Thanjavur Varahi AmmanAI Image
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

மஸ்கிருதத்தில் குப்த என்பதற்கு 'ரகசியம்' என்று பொருள். பழங்காலத்தில் இரண்டு நவராத்திரிகள் - சாரதா மற்றும் வசந்த நவராத்திரிகளை மட்டுமே மக்கள் அதிகம் அறிந்திருந்தனர். பண்டைய வேதகாலத்தில் குப்த நவராத்திரி (ஆஷாட குப்த நவராத்திரி) ஒரு சில தேர்ச்சி பெற்ற சாதகர்களுக்கு மட்டுமே தெரிந்திருந்தது.

தாந்திரீகர்களுக்கும் சாதகர்களுக்கும் குப்த நவராத்திரி ஒரு சிறப்பு முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. இந்த காலகட்டத்தில் துர்கா தேவி மற்றும் தசமஹா வித்யா தேவியர்களை சாதனை செய்வதன் மூலம் ஒருவரின் விருப்பங்கள் நிறைவேறுவதோடு, சக்தியின் அருளும் சக்திகளும் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. எனவே குப்த நவராத்திரி பெரும்பாலும் தாந்திரீக சாதனை மற்றும் பூஜைகளுக்கு பிரபலமாக உள்ளது.

தந்திர வித்யாவில் ஆர்வம்கொண்ட பக்தர்கள் தங்கள் ஆழ்மன விருப்பங்கள் நிறைவேறுவதற்கு தேவியின் ஆசிகளை பெறுவதற்காக இந்த குப்த நவராத்திரி என்ற விரதத்தை கடைப்பிடிக்கின்றனர்.

இந்த குப்த நவராத்திரியின்போது (ஆஷாட நவராத்திரி, வாராகி நவராத்திரி என்றும் அழைக்கப்படுகிறது.) ஜூலை 15 முதல் ஜூலை 23 வரை இந்த நவராத்திரி விழா வளர்பிறை பிரதமையில் தொடங்கி 9 நாட்கள் கடைபிடிக்கப்படுகிறது. மா காளி, தாராதேவி, திரிபுரசுந்தரி, புவனேஸ்வரி, பைரவி, தூமாவதி, பகளாமுகி, மாதங்கி, சின்னமஸ்தா மற்றும் கமலாதேவி ஆகியோரை வழிபடுகின்றனர். இந்த ஒன்பது நாட்களும் துர்கா சப்தசதி, தேவி மகாத்மியம், துர்கா சப்தஸ்லோகி போன்றவற்றை பாராயணம் செய்வது வழக்கம்.

ஆஷாட குப்த நவராத்திரி பூஜை விதிமுறை:

பூஜை அறையில் ஒரு மரப்பலகையை வைத்து அதில் சிவப்பு அல்லது மஞ்சள் துணியை பரப்பி அதன் மீது துர்கா தேவியின் படத்தை வைக்கவும். ஒரு மண்பானையில் பார்லி விதைகளை விதைக்கவும்.

ஒரு செம்பு கலசத்தில் தண்ணீரை நிரப்பி அதில் பாக்கு, உடையாத அரிசி (அட்சதை), அருகம்புல், ஒரு நாணயம் ஆகியவற்றை சேர்க்கவும்.

கலசத்தின் வாய்ப்பகுதியில் மாவிலைகளை வைத்து அதன் மீது ஒரு தேங்காயை சிவப்பு துணியால் சுற்றி வைக்கவும். பார்லி விதைக்கப்பட்ட பானையின் மேல் இந்த கலசத்தை வைக்கவும்.

தேவியை வழிபட விளக்கேற்றி, செம்பருத்தி, அரளி போன்ற சிகப்பு மலர்கள் மற்றும் அட்சதை தூவி அர்ச்சனை செய்து, பழங்கள் போன்றவற்றை நிவேதனம் செய்யலாம்.

ஆஷாட நவராத்திரி - Thanjavur Varahi Amman
ஆஷாட நவராத்திரி - Thanjavur Varahi AmmanAI Image

தினம் ஒரு பிரசாதம்:

தென்னிந்தியாவில் இந்த நவராத்திரியில் ஸ்ரீ வாராஹி அம்மனை வழிபடுவது வழக்கம். வாராகி அம்பிகைக்கு சர்க்கரைப்பொங்கல், வெண்பொங்கல், மாதுளை, சர்க்கரைவள்ளிக்கிழங்கு, தோல் நீக்காத கருப்பு உளுந்து வடை, தேங்காய், வாழைப்பழம் போன்றவற்றை படைக்கலாம்.

இந்த குப்த நவராத்திரியில் தேவிக்கு தினம் ஒரு பிரசாதம் செய்து தானம் செய்வது சிறந்த பலன் அளிக்கும். குப்த நவராத்திரியின் முதல்(1) நாளன்று தேவிக்கு நெய்யை அர்ப்பணித்து தானம் செய்ய உடல் உபாதைகள் தணிந்து நல்ல ஆரோக்கியத்தைப் பெறலாம்.

இரண்டாம் நாள் (2) அன்று தேவிக்கு சர்க்கரையைப் படைத்து தானம் செய்ய நீண்ட ஆயுள் பெறலாம்.

மூன்றாம் நாள் (3) தேவிக்கு பாலை சமர்ப்பித்து தானம் செய்ய வேண்டும். இது எல்லாவிதமான துக்கங்களிலிருந்தும் ஒருவரை விடுவிக்கும் என்று கூறப்படுகிறது.

நான்காம் நாளில் (4) இனிப்பு வகைகளைப் படைத்து தானம் செய்யலாம். இது அனைத்து தடைகளையும், சிரமங்களையும் போக்கும்.

ஐந்தாம் நாளில் (5) தேவிக்கு வாழைப்பழங்களை படைத்து அவற்றை தானம் செய்ய குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் கிடைக்கும்.

ஆறாம் நாள் (6) தேவிக்கு தேனை சமர்ப்பித்து வழிபடலாம் என்று கூறப்படுகிறது. தேனை சமர்ப்பிப்பதால் நிதி பிரச்சினைகள் தீரும் என்று கூறப்படுகிறது.

ஏழாம் நாளில் (7) வெல்லம் சார்ந்த பொருட்களை தேவிக்கு அர்ப்பணித்து தானம் செய்யவேண்டும். இவ்வாறு செய்வதால் வறுமை நீங்கும் என்று நம்பப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
ஆடி வெள்ளி சிறப்புகள்: அம்மன் அருளைப்பெற ‘சுருள்’ நேர்த்திக்கடன் செலுத்துவது எப்படி?
ஆஷாட நவராத்திரி - Thanjavur Varahi Amman

எட்டாம் நாள் (8) அஷ்டமி அன்று தேவிக்கு தேங்காய்களைப் படைத்து பின்னர் அவற்றைத் தானம் செய்ய வாழ்வில் செழிப்பும் மகிழ்ச்சியும் கிட்டும்.

ஒன்பதாம் நாளில் (9) தேவிக்கு பலவிதமான தானியங்களைப் படைத்து, அவற்றை ஏழைகளுக்கு தானமாக வழங்கவேண்டும். இது வாழ்க்கையில் எல்லாவிதமான சுகங்களையும், மன நிறைவையும் தரும்.

பத்தாம் நாள் (10) தசமி அன்று நவதானியத்தால் செய்யப்பட்ட அல்வா போன்ற இனிப்புகளை தேவிக்கு அர்ப்பணித்து அதைத் தானமாக வழங்கவேண்டும். இவை அனைத்தையும் பக்தி சிரத்தையுடன் செய்ய ஆரோக்கியம், செழிப்பு மற்றும் வாழ்வில் மகிழ்ச்சி நிலைக்கும்.

இந்நாட்களில் வாராகி அன்னை எழுந்தருளியிருக்கும் ஆலயங்களில் சிறப்பாக விழா நடைபெறும். தஞ்சை பெரிய கோவிலில் இந்த ஆஷாட குப்த நவராத்திரி மிகவும் விசேஷமாக கொண்டாடப்படும். நவதானிய அலங்காரம், மாதுளம் பழ முத்துக்கள் கொண்டு அலங்காரம், குங்கும அலங்காரம், தேங்காய் பூ, சந்தனம் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரங்கள் செய்யப்படும்.

இதையும் படியுங்கள்:
இன்று முதல் ஆஷாட நவராத்திரி: உங்கள் வீட்டுப் பூஜையறையை வாராஹி பீடமாக மாற்றுங்கள்!
ஆஷாட நவராத்திரி - Thanjavur Varahi Amman

தஞ்சை பெரிய கோயில் பாரம்பரிய முறைப்படியான இந்த வழிபாட்டை உங்கள் இல்லத்தில் மேற்கொள்வதன் மூலம், உங்களைச் சுற்றியுள்ள எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் விலகி, உங்கள் குடும்பத்தில் ஆரோக்கியம், செல்வம் மற்றும் நிம்மதி என்றென்றும் நிலைத்திருக்கும்.

logo
Kalki Online
kalkionline.com