

ஆண்டுதோறும் ஆனிமாத வளர்பிறை பிரதமை திதி முதல் நவமி திதி வரை உள்ள ஒன்பது நாட்கள் ‘ஆஷாட நவராத்திரி’ அல்லது ‘வாராஹி நவராத்திரி’ என்று அழைக்கப்படுகிறது. இந்த ஒன்பது நாட்களும் வாராஹி அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடக்கும். எதிரிகளை அழிக்கவும், தடைகளை நீக்கவும், சகல ஐஸ்வர்யங்களைப் பெறவும் இந்த நாட்களில் பக்தர்கள் அம்மனை மனமுருகி வழிபடுவது வழக்கம்.
அன்னை வாராஹி இரவு நேரத்திற்கு அதிபதி (ராத்திரி தேவி) என்பதால், இந்த ஒன்பது நாட்களும் மாலை மற்றும் இரவு நேரங்களில் செய்யப்படும் வழிபாடுகள் மிக உன்னதமான பலன்களை தரும் என்பது ஐதீகம்.
இந்த ஆண்டுக்கான (2026) ஆஷாட நவராத்திரி இன்று (ஜூலை 15ம் தேதி) தொடங்கி, ஜூலை 23ம் தேதி வரை அனுஷ்டிக்கப்படுகிறது.
ஸ்ரீ வாராஹி அம்மன் சப்தகன்னியர்களுள் மிகவும் சக்திவாய்ந்தவராகவும், அன்னை லலிதா பரமேஸ்வரியின் தண்டினி (சேனாதிபதி) ஆகவும் போற்றப்படுகிறார். பன்றி முகமும் (வராக முகம்), பெண் திருமேனி, மஹிஷ வாகனத்தில், கத்தி, கேடயம், கலப்பை, உலக்கை போன்ற ஆயுதங்களை திருக்கரங்களில் தாங்கி, படைத் தலைவியாக காவல் செய்பவர் ஸ்ரீ வாராஹி அம்மன். வாராஹி அம்மன், லலிதா பரமேஸ்வரியின் சேனையின் படைத்தளபதி ஆவார். இவரே தடைகளை விளக்கி, பாதுகாப்பையும், வெற்றியையும் அருளும் தேவியாக கருதப்படுகிறாள். இவளை வழிபடுவதால் எதிரிகள் தொல்லை நீங்குவதோடு, தீய சக்திகள் அழியும்.
வாராஹி அம்மன் சத்ரு சம்ஹார மூர்த்தி ஆவாள். வாராஹி நவராத்திரியின் ஒன்பது நாட்களும் அன்னையை வணங்குவதால், நம் வாழ்வில் உள்ள மறைமுக எதிர்ப்புகள், பொறாமை மற்றும் கண் திருஷ்டிகள் அனைத்தும் சூரியனை கண்ட பனி போல் விலகும்.
நிலம், வீடு அல்லது சொத்து சம்பந்தமான வழக்குகளில் சிக்கி தவிப்பவர்கள், வாராஹி அம்மனுக்கு நவராத்தி நாட்களில் மாதுளை முத்துக்களை சமர்ப்பித்து வழிபட்டால் நியாயமான தீர்ப்புகளும், வெற்றிகளும் கிட்டும்.
வீட்டில் ஆஷாட நவராத்திரி பூஜை செய்யும் முறை :
வீட்டில் இரண்டு விதமான ஆஷாட நவராத்திரி பூஜையை மேற்கொள்ளலாம்.
‘ஆஷாட நவராத்திரி’ ஒன்பது நாட்களிலும் வீடுகளில் அம்மனின் திருவுருவப்படத்திற்கு குங்குமம், மஞ்சள், வாசனை மலர்கள் கொண்டு அலங்காரம் செய்து வழிபடலாம். காலை மற்றும் மாலை வேளைகளில் தீபம் ஏற்றி, சுண்டல், உளுந்து வடை, சர்க்கரை பொங்கல், மாதுளை, சர்க்கரைவள்ளிக்கிழங்கு போன்றவற்றை நைவேத்தியமாக படைத்து, "ஓம் வராகியை நமஹ" போன்ற மந்திரங்களை சொல்லி வழிபாடு செய்யலாம்.
வீட்டில் வாராஹியின் சிலையோ அல்லது படமோ இல்லாதவர்கள் கலசம் அமைத்து வழிபடலாம். வெண்கலம் அல்லது வெள்ளியால் ஆன கலசத்தில் தண்ணீர் நிரப்பி, அதற்குள் மஞ்சள், குங்குமம், எலுமிச்சை ஆகியவற்றை போட்டு, கலசத்தின் மேற் பகுதியில் மாவிலை, தேங்காய் வைத்து, வாழை இலையில் பச்சரிசி பரப்பி, அதன் மீதோ அல்லது ஒரு மனை அமைத்து அதன் மீதோ கலசத்தை வைக்க வேண்டும். இந்த கலசத்தில் எழுந்தருளி, என்னுடை ய பூஜையை ஏற்றுக் கொண்டு, உன்னுடைய அருளை எங்களுக்கு வழங்கிட வேண்டும் என வாராஹியை மனதார வழிபட்டு, அந்த கலசத்தை வாராஹி அன்னையாக நினைத்து ஒன்பது நாட்களும் பூஜை செய்து வழிபடலாம்.
இந்த நாட்களில் அம்மனின் முழுமையான அருளைப் பெற வாராஹி மூல மந்திரம் அல்லது வாராஹி 108 போற்றி பாடல்களைக் கேட்கலாம்.
சொல்ல வேண்டிய மந்திரங்கள் :
தினமும் விளக்கேற்றி, நைவேத்தியம் படைத்து வாராஹியை வழிபட வேண்டும். லலிதா சகஸ்ரநாமம், துர்கா சப்தாஷ்டமி அல்லது வாராஹி மந்திரங்கள் ஆகியவற்றை சொல்லி வழிபட வேண்டும்.
‘ஓம் ச்யாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத்’
இந்த வாராஹி காயத்ரி மந்திரத்தை ஆஷாட நவராத்திரி நாட்களில் மட்டும் இல்லாமல் தினமும் சொல்லி வழிபடலாம். இந்த மந்திரத்தை தினமும் 11 அல்லது 27 முறை உச்சரிப்பது எதிரிகள் தொல்லை, செய்வினை, கண் திருஷ்டி மற்றும் கடன் தொல்லைகளை நீக்கும். மேலும், வியாபாரத்தில் வெற்றி, வீடு-மனை யோகம், சகல செல்வங்கள் மற்றும் மன அமைதியைத் தரும். மேலும் இந்த மந்திரத்தை செவ்வாய், வெள்ளி மற்றும் பஞ்சமி திதிகளில் நாட்களில் சொல்லி வாராஹிக்கு விளக்கேற்றி வழிபடுவது கூடுதல் பலன் தரும்.
குறிப்பாக எதிரிகளின் தொல்லையை அடக்கவும், வழக்குகளில் வெற்றி பெறவும், வாக்கு பலிதம் மற்றும் சகல ஐஸ்வர்யங்கள் பெறவும் வாராஹியை ஒவ்வொரு மாதமும் வரும் பஞ்சமி திதிகளில் வழிபடுவது மிகுந்த பலனைத் தரும்.
வாராஹி அம்மனுக்குரிய மூல மந்திரங்களை உச்சரிப்பதும், பஞ்சமி திதியில் விரதம் இருந்து நெய் தீபம் ஏற்றுவதும் மிகச் சிறந்த பலன்களைத் தரும்.
தஞ்சை பெரிய கோவிலில் ஆஷாட நவராத்திரி விழா :
தஞ்சை பெரிய கோவிலில் உள்ள வாராஹி அம்மனுக்கு ஆண்டுதோறும் 10 நாட்கள் ஆஷாட நவராத்திரி விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆஷாட நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் வாராஹி அம்மனுக்கு மாலையில் அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் நடைபெறும். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்வார்கள்.
அந்தவகையில் இந்தாண்டுக்கான ஆஷாட நவராத்திரி விழா ஜூலை 13-ம்தேதி தொடங்கியது. இந்த விழா வரும் 23-ம்தேதி வரை நடைபெற உள்ளது.
ஆஷாட நவராத்திரி நடக்கும் 10 நாட்களில், ஒவ்வொரு நாளும் வாராஹி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படும். அந்த வகையில் வரும் இன்று (ஜூலை 15-ம்தேதி) குங்கும அலங்காரமும், 16-ம்தேதி சந்தன அலங்காரமும், 17-ம்தேதி தேங்காய் பூ அலங்காரமும், 18-ம்தேதி மாதுளை அலங்காரமும், 19-ம்தேதி நவதானிய அலங்காரமும், 20-ம்தேதி வெண்ணெய் அலங்காரமும், 21-ம்தேதி கனிவகை அலங்காரமும், 22-ம்தேதி காய்கறி அலங்காரமும் செய்யப்பட உள்ளது.
கடைசி நாளான வரும் 23-ம்தேதி வாராஹி அம்மனுக்கு புஷ்ப அலங்காரம் செய்து இரவு செண்டை மேளம், வாணவேடிக்கையுடன் 4 ராஜ வீதிகளிலும் உற்சவர் வாராஹி அம்மன் வீதி உலா வருவார். இந்த வீதி உலாவை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் வீதிகளில் கூடுவார்கள்.