
சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை மகாராணி தியேட்டர் பேருந்து நிறுத்தம் அருகில் ஸ்ரீமத் வேங்கடசுப்பானந்த சுவாமிகளின் ஜீவசமாதி அமைந்துள்ளது. பக்தர்கள் அனைவரும் இந்த ஜீவசமாதியை ‘தாத்தா கோயில்’ என்று அன்புடன் அழைக்கிறார்கள். இங்கு தாத்தா கோயில் என்று கேட்டால்தான் அனைவருக்கும் வழி தெரிகிறது. மகாராணி போஸ்ட் ஆபீஸ் பின்புறம் கோதண்டராமன் தெருவில் அமைந்துள்ளது இந்த சித்தர் ஜீவசமாதி. வேங்கட சுப்பானந்த சுவாமிகள் ஜல ஜீவசமாதி பக்தர்களால் வணங்கப்படும் அருள் மிகுந்த தலமாகும். 130 வருடங்கள் பழைமை வாய்ந்த கோயிலின் சிறப்புகளும் அதிசயங்களை நிகழ்த்தும் சித்தரைப் பற்றியும் இந்தப் பதிவில் அறிவோம்.
18.10.1896ம் ஆண்டு ஐப்பசி மாதம் பூரட்டாதி நட்சத்திரத்தில் தாத்தா சுவாமிகள் இங்கு ஜீவசமாதி அடைந்தார். ஸ்ரீமத் வேங்கட சுப்பானந்த சித்தர் கிணற்றுக்குள் ஜல சமாதி அடைந்த சித்தர் ஆவார். இவரை எல்லோரும் தாத்தா சுவாமிகள் என்றும், கோயிலை தாத்தா கோயில் என்றும் அழைக்கின்றனர்.
இக்கோயிலில் வாராஹி அம்மனுக்கும் தனி சன்னிதி உள்ளது. இக்கோயிலுக்கு செல்பவர்கள் எலுமிச்சம் பழம் வாங்கிச் சென்று, அந்தப் பழத்தை அவர் பாதத்தில் வைத்து தந்ததும் வீட்டிற்கு எடுத்துச் செல்கின்றனர். இந்த எலுமிச்சைக்கு அதீத சக்தி உள்ளதாக நம்புகின்றனர். தொடர்ந்து 7 வியாழக்கிழமைகளில் இங்கு வந்து விளக்கு போட வேண்டியது கிட்டும் என்ற நம்பிக்கை உள்ளது.
இந்த சித்தர் கோயிலில் அன்னதானம் மிகவும் விசேஷமாக செய்யப்படுகின்றது. காரணம், இந்த சித்தருக்கு அன்னதானம் மிகவும் பிடித்த விஷயமாகவும், அவர் வாழும் காலத்தில் பல பேருக்கு அன்னதானம் செய்து இருப்பதாகவும், அதனால் கோயிலில் தினமும் மதிய நேரத்தில் அன்னதானம் நடைபெற்று வருகிறது.
நீர் சம்பந்தப்பட்ட நோய்கள், சிறுநீரகக் கோளாறு, நீரால் வரக்கூடிய கண்டங்களை தீர்ப்பவராகவும், மன பயம், மனக்குழப்பம் இருப்பவர்கள் இவரை வழிபட, மன தைரியம், மன வலிமை அதிகரிக்கும் என்கிறார்கள். கணக்கம்பட்டி சித்தர், சுரைக்காய் சித்தர் போன்றவர்களின் உருவங்களும் இங்கு வரையப்பட்டுள்ளன.
குரு சித்தரின் ஜீவ சமாதி:
வட சென்னையில் 50க்கும் மேற்பட்ட சித்தர்களின் ஜீவ சமாதிகள் உள்ளன. இதில் குரு சித்தர் என்பவரின் ஜீவசமாதி புது வண்ணாரப்பேட்டை சிவாலயத்துக்குள் அமைந்துள்ளது. காளத்தீஸ்வரர், ஜலகண்டேஸ்வரர் என்ற பெயரில் இரு லிங்கங்கள் அந்தப் பகுதி மக்களால் வழிபடப்பட்டன. அங்கு இருந்த குருசித்தர் என்பவர் முக்தி அடைந்ததும் அவரை அங்கேயே ஜலகண்டேஸ்வரர் அருகில் ஜீவசமாதி செய்தனர். இப்படி சிவாலயத்துக்குள் அமைந்துள்ள ஒரே ஜீவ சமாதி என்ற தனிச் சிறப்பை பெற்ற குரு சித்தரின் ஜீவ சமாதி புது வண்ணாரப்பேட்டை டோல்கேட் அருகே உள்ளது.
பொதுவாக, ஜீவசமாதிகள் தனி ஆலய அமைப்பில்தான் இருக்கும். அங்கு லிங்க பிரதிஷ்டை செய்து வழிபாடுகள் நடத்தப்படும். ஆனால், குரு சித்தர் ஜீவசமாதி மட்டும் சிவாலயத்துக்குள் உள் மண்டபத்தில் அமைந்துள்ளது. குரு சித்தர் சென்னையில் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்.
இவரின் பூர்வீகம் பற்றி உறுதியான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. இவர் தன்னை நாடி வந்தவர்களின் நோய்களைத் தீர்த்தார். பல அற்புதங்களை நிகழ்த்தினார். மணலை அள்ளி எடுத்துக் கொடுத்து உணவு பொருட்கள் ஆக்கினார். குளத்து தண்ணீரை எடுத்து தெளித்து நோய்களை விரட்டினார். வியாழக்கிழமைகளில் குரு சித்தருக்கு சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது.