
ஆதிசங்கராச்சாரியாருக்கு பத்மபாதர் என்ற ஒரு சிஷ்யர் இருந்தார். அவர் ஒரு தீவிர நரசிம்ம பக்தர். அவருக்கு பகவான் நரசிம்மரை எப்படியாவது பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்தது. தனது ஆசை நிறைவேற காட்டிற்கு சென்று ஒரு மரத்தடியில் அமர்ந்து நரசிம்மரை எண்ணி தவம் செய்ய ஆரம்பித்தார். அப்போது அவ்வழியே வந்த வேடன் ஒருவன் அவரிடம், ‘தாங்கள் ஏன் நடுக்காட்டில் கண் மூடி அமர்ந்திருக்கிறீர்கள்’ என்று கேட்டான்.
அதற்கு பத்மபாதர், தான் பகவான் நரசிம்மரை காணவே தியானம் செய்து அமர்ந்திருப்பதாகத் தெரிவித்தார். இதைக் கேட்ட வேடன், ‘நரசிம்மர் எப்படி இருப்பார் என்று சொல்லுங்கள். நான் தேடி அவரை அழைத்து வந்து உங்கள் முன் நிறுத்துகிறேன்’ என்றான்.
பத்மபாதர், ‘நரசிம்மர் சிங்க தலையும் மனித உடலும் கொண்டவர். அவர் உன் போன்ற எளியவர்களுக்குக் கிடைக்க மாட்டார்’ என்று கூறினார். அதைக் கேட்ட வேடன், ‘கவலை வேண்டாம். இந்தக் காடு முழுவதும் சல்லடை போட்டு தேடி உங்கள் முன் நரசிம்மரை கொண்டு வந்து நிறுத்துகிறேன்’ என்று சொல்லி, அந்த இடத்திலிருந்து அகன்று நரசிம்மரை தேட ஆரம்பித்து விட்டான்.
உணவு, உறக்கம் மறந்து சிங்க தலையுடன் உள்ள மனிதர் எங்கே எங்கே என்று காட்டின் மூலை முடுக்குகள் எல்லாம் அலைந்து தேடினான் வேடன். நெடுநாட்கள் தேடியும் அப்படி ஒருவரைக் காண முடியாமல் ஒரு கட்டத்தில் தற்கொலை செய்து கொள்ளவும் முடிவு செய்து அப்படிச் செய்ய முயலவும் செய்தான்.
அப்போது நரசிம்மர் அவன் முன்பு தோன்றினார். வேடன் உடனே அவரை ஒரு கயிற்றால் கட்டி அழைத்துச் சென்று பத்மபாதர் முன்பு கொண்டு நிறுத்தி, ‘இதோ நீங்கள் கேட்ட உங்கள் நரசிம்மரைக் கொண்டு வந்து விட்டேன்’ என்று மகிழ்ச்சி பொங்க சொன்னான். நரசிம்மரை நேரில் தரிசித்த பத்மபாதர், அதிர்ந்து போய் அவரது காலில் விழுந்து சேவித்து, ‘பகவானே இவ்வளவு நாட்கள் உங்களைக் காண தவமிருந்த என் முன்பு வராத நீங்கள், இந்த வேடன் முன்பு தோன்றியதோடு, அவனால் கட்டு பட்டும் இங்கு அழைத்து வரப்பட்டுள்ளீரே எப்படி?’ என்று வினவினார்.
அதைக் கேட்ட பகவான், 'நீ ஓரிடத்தில் அமர்ந்து நான் உனது முன்பு தோன்ற வேண்டும் என்று நினைத்தாய். ஆனால், இந்த வேடனோ என்னை இரவும் பகலும் உணவும் நீரும் அருந்தாமல் காடு முழுவதும் தேடி அலைந்து கடைசியில் என்னைக் காண முடியாமல் தற்கொலை செய்யவும் துணிந்தான். இவ்வளவு சிரத்தையோடும் நம்பிக்கையோடும் என்னை அவன் தேடியது எனது மனதை தொட்டு விட்டது. ஆகவேதான் அவன் முன்பு தோன்றி அவனால் கட்டுப்பட்டு இங்கு வந்து நிற்கிறேன்’ என்று பதிலளித்தார்.