பகவான் மகாவிஷ்ணுவும் கருடனும் பகிர்ந்த 3 வகை மனிதப் பிரிவுகள்!

Garuda mentioned 3 types of people
Sri Mahavishnu with Garudan
Published on

னிதர்கள் பலவிதம் என்றால், அவர்கள் கடவுள் மீது வைக்கும் நம்பிக்கையும் பலவிதமாகிறது. பூலோகத்தைக் காக்கும் மகாவிஷ்ணு, தனது வாகனமான கருடனின் மீது அமர்ந்து சுற்றி வந்தபோது பூமியின் பசுமை சூழலில் மயங்கி சிறிது நேரம் அங்கு இளைப்பாற விரும்பினார். தென்னை மரக்காற்றினை அனுபவித்தபடி மகாவிஷ்ணு கருடனிடம் ஒரு கேள்வியைக் கேட்டார்.

“கருடா, இந்த உலகத்தில் எத்தனை வகையான மனிதர்கள் இருக்கிறார்கள் என்று உனக்குத் தெரியுமா?”

அதைக் கேட்டு கருடன் திகைத்தான். ஆனால், கேட்டது எஜமானன் ஆயிற்றே? உடனே, “இந்த உலகத்தில் மூன்று வகையான மனிதர்கள் இருக்கிறார்கள் பகவானே” என்று பதிலளித்தார்.

வியப்பில் புருவத்தை உயர்த்திய மகாவிஷ்ணு, “என்ன சொல்கிறாய் கருடா?. இத்தனை கோடி மனிதர்கள் வாழும் பூமியில், மூன்று வகையான மனிதர்கள் மட்டும்தானா இருக்கிறார்களா?” என்றார்.

இதையும் படியுங்கள்:
தானம் செய்யக்கூடாத 3 பொருட்கள்: மீறினால் உங்கள் வீட்டில் பணப் பிரச்னை நிச்சயம்!
Garuda mentioned 3 types of people

“இறைவா, எல்லாம் அறிந்த நீங்கள் என் மூலம் இந்த உலகுக்கு எதையோ சொல்ல நினைக்கிறீர்கள் என்பதை நான் அறியாமல் இல்லை. இருந்தாலும் நீங்கள் கேட்பதற்கு என்னால் பதில் கூறாமல் இருக்க முடியவில்லை. அதனால்தான் அப்படிச் சொன்னேன். இந்த உலகில் பறவையும் அதன் குஞ்சுகளும் போல் வாழும் மனிதர்கள் ஒரு வகை, பசுவும் அதன் கன்றும் போல் வாழும் மனிதர்கள் மற்றொரு வகை. கணவன் - மனைவி போல் வாழும் மனிதர்கள் இன்னொரு வகை. இப்படி மூன்று வித மனிதர்கள்தான் உலகில் இருக்கிறார்கள்” என்றார் கருடன்.

"சரி, இப்படி சுருக்கமாகச் சொன்னால் எப்படி? விரிவான விளக்கம் வேண்டும் கருடா” என்றார் மகாவிஷ்ணு.

கருடனும் சொல்லத் தொடங்கினார். “இறைவா, முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் பறவையானது, தனது குஞ்சுகளுக்காக பகலில் இரை தேடிச்செல்லும். அந்நேரத்தில் சில குஞ்சுகள் பாம்புக்கு இரையாகிவிடும். இழந்து விட்ட குஞ்சுகளுக்காக அந்தப் பறவை வருத்தப்படாது. மாறாக, கூட்டில் இருக்கும் மற்ற குஞ்சுகளுக்கு இரை கொடுக்கும். வளர்ந்ததும் குஞ்சுகள் பறக்க முயற்சிக்கும். மரத்தில் இருந்து கீழே விழும் சில மடிந்தும் போகும். அப்போதும் தாய்ப்பறவை மடிந்ததைப் பற்றி சிந்திக்காமல் வழக்கமான பணியை செய்யக் கிளம்பி விடும். குஞ்சுகளும் தாயை விட்டுப் பிரிவதில் வருத்தம் கொள்ளாது. இந்த இரை தேடும் பறவையைப் போல எந்திரமயமான வாழ்க்கை வாழும் மனிதர்கள், வறுமையுடன் போரிடுவார்கள். கிடைத்த வருமானத்தில் வாழ்க்கை நடத்தப் போராடுகிறார்கள். எனவே, இவர்களுக்கு இறைவனைப் பற்றிய சிந்தனை இருப்பதில்லை.

இதையும் படியுங்கள்:
பழனி முருகன் அபிஷேகப் பொருட்களில் மறைந்திருக்கும் ரகசிய மருத்துவம்!
Garuda mentioned 3 types of people

இரண்டாவது, பசுவும் கன்றும். எப்படியென்றால், வேறு வேறு இடத்தில் கட்டப்பட்டிருக்கும் பசுவைப் பார்த்து கன்றும், கன்றைப் பார்த்து பசுவும் சத்தம் போடும். தாயிடம் பால் குடித்தால் தன்னுடைய பசி அடங்கிவிடும் என்பது கன்றிற்கு  தெரியும். ஆனால், அதை அதன் கழுத்தின் கட்டியிருக்கும் கயிறு அங்கிருந்து நகர விடாமல் தடுக்கும். இரண்டாம் வகை மனிதர்கள், இந்தப் பசு, கன்றைப் போன்றவர்கள். அவர்களுக்கு கடவுள் சிந்தனை இருக்கும். கடவுளை அடைந்தால், நம்முடைய வாழ்வு சுகமாகும் என்பது அவர்களுக்குத் தெரியும். ஆனால், குடும்பம், பாசம், பந்தம், ஆசை போன்ற கயிற்றில் சிக்கிக்கொண்டு, இறைவனை முழுமையாக அடைய முடியாமல் தவிப்பார்கள்.

மூன்றாவது, கணவனும் மனைவியையும் போல. எப்படியென்றால், இதற்கு முன்பு யார் என்றே தெரிந்திராத ஒரு பெண்ணை, மணந்த கணவன் ஒருவித கூச்சத்தால் அவளுடைய முகம் பார்த்து பேசாமல் ஒதுங்கிச் செல்வான். புதியதாக வந்த மனைவியும் அப்படித்தான். ஆனால், மனைவி தன்னுடைய கணவரை தன் பக்கம் ஈர்ப்பதற்காக, அவனுக்குப் பிடித்த வகையில் தன்னை அலங்கரிப்பாள். பிடித்ததை சமைப்பாள். அவனுக்காகவே பிறந்தவள் நான் என்பதை, கணவனுக்கு உணர்த்தி அவனை தனது பக்கம் ஈர்ப்பாள். நாளடைவில் மனைவியின் அன்பில் கணவன் கரைவான். அவளை விட்டுப் பிரிய அவனுக்கு மனம் இருக்காது. மூன்றாம் வகை மனிதர்கள் இப்படிப்பட்டவர்கள்தான். அவர்கள் கடவுள் சிந்தனையிலேயே காலத்தை கழிப்பார்கள். ஆரம்பத்தில் அவர்களை சோதித்த கடவுள், பின்னர் அவர்களை தன்னுடன் ஐக்கியமாக்கிக்கொள்வார். அதன்பின் அவர்களைப் பிரிக்க எந்த சக்தியாலும் முடியாது” என்று கூறி முடித்தார் கருடன்.

அதைக் கேட்டு மகிழ்ந்த மகாவிஷ்ணு, கருடனின் அறிவைப் பாராட்டினார். நாமும் மூன்றாவது வகை மனிதராகவே கடவுளிடம் ஐக்கியமாவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com