ஆளவந்தாரும் தூதுவளை கீரையும்!
ஸ்ரீ வைணவர்கள் பலமுறை கேட்ட படித்த சம்பவம்தான் என்றாலும், மறுபடியும் எழுதத் தூண்டும் ஒரு முக்கிய நிகழ்வு தான் இது. வரும் 07/08/25 அன்று ஆளவந்தார் அவர்களின் திருநட்சித்திரம் உத்திராடம் கொண்டாடப்படுகிறது. இவர் நாதமுனிகளின் பேரன் ஆவார். ஆளவந்தார் கிபி 976 ஆம் ஆண்டு ஆடி மாதம் உத்தராடம் அன்று வீரநாராயணபுரத்தில் அவதரித்தார்.
ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தின், அடிப்படையே குருபரம்பரை தான். நம் ஒவ்வொரு செயலும் மங்களம் பெறச் செய்வது, ஆசார்ய ஸம்பந்தம் மட்டுமே. ஸ்ரீ வைஷ்ணவ ஆசார்ய பரம்பரை நடுவில் நாயகமாய்த் திகழ்வோர் ஸ்ரீமன் நாதமுனிகள், பிறகு உய்யக்கொண்டார், மணக்கால்நம்பி, அடுத்ததாக யாமுனாசார்யர் என்கிற ஆளவந்தார்.
தமது சிறு வயதில், அரச சபையில் பல பண்டிதர்கள் முன்னிலையில் ஆக்கியாழ்வான் என்கிற செறுக்குடைய பெரிய பண்டிதரை வாதப்போரில் தோற்கடித்தார். இந்தப் போட்டி நடக்கும் சமயம் அரசனும், அரசியும் தங்களுக்குள் சபதம் செய்துக் கொண்டார்கள். மன்னன் "யமுனைத்துறைவர் தோற்றுவிடுவார், அவர் ஜெயித்தால் தன் ராஜ்ஜியத்தில் பாதியை அவருக்குத் தந்துவிடுவதாகச்" சொன்னார்.
அரசியோ ”யமுனைத்துறைவர் வென்றுவிடுவார். அப்படித் தோற்றால் நான் அரசி பதவியைத் துறந்து உமக்குப் பணிப்பெண்ணாவேன்” என்றாள்.
இவ்வாறாக ஆளவந்தார் தனக்குத் தரப்பட்ட ராஜ்ஜியத்தை நிர்வகித்து வந்த காலத்தில், அரசாங்க விஷயங்களிலும், மற்ற விஷயங்களிலுமே மனதையும் நேரத்தையும் செலவிட, இவரைத் திருத்திப்பணி கொள்ள மணக்கால் நம்பி அரண்மனைக்குத் தினமும் தூதுவளைக் கீரையைக் கொண்டு வந்து கொடுக்க ஆரம்பித்தார்.
தினமும் சமையலில் தூதுவளை கீரை உண்டு வந்த அவர் அதன் மேல் ஈர்க்கப்பட்டு ஒரு நாள் ஏன் இது நிறுத்தப்பட்டது எனக் காரணம் அறிய விரும்பினார்.
ஆளவந்தார், "சில நாட்களாக ஏன் தூதுவளை கீரை இல்லை?” என வினவ ஆளவந்தாரை சந்தித்த மணக்கால் நம்பி, "உங்கள் பாட்டனார் தேடிவைத்த நிதி ஒன்று என்னிடம் இருக்கிறது. அதை உம்மிடம் அளிப்பதற்கு இங்கே வந்துவிட்டு போவதை தடை செய்யாமல் இருக்க வேண்டும். தினமும் நான் தூதுவளை கீரை கொண்டு வருகிறேன்" என்று வேண்டிக்கொண்டார்.
தினமும் நம்பி அரண்மனைக்கு வந்து கீரையுடன் கீதையின் உட்பொருளை அவருக்கு உபதேசம் செய்ய ஆரம்பித்தவுடன், படிப்படியாக ஆளவந்தாரின் உள்ளம் தினமும் நம்பியின் வரவை நாடத் தொடங்கியது. தூதுவளை (Solanum trilobatum) என்பது மூலிகையாகப் பயன்படும் கொடியாகும்.
இது இந்தியாவிலும் சில வெப்பமண்டல நாடுகளிலும் காணப்படுகிறது. இந்தக் கொடி மற்றும் இலை போன்ற அனைத்து பகுதிகளிலும் சிறுசிறு வளைந்த முட்களைக் கொண்டிருக்கும். இதன் இலை கரும்பச்சை நிறமானது. உருண்டை வடிவில் சிவந்த நிறப் பழங்களைக் கொண்டிருக்கும். இதன் பூக்கள் ஊதா நிறத்தில் பூக்கும். சளி, இருமல், காய்ச்சல் முதலான மழைக்கால உடல்நலக் கோளாறுகளைச் சமாளிப்பதற்கான எளிய வழி வகைகளில் தூதுவளையும் ஒன்று.
உணவாகவும், மருந்தாகவும் பெருமளவில் பயன்படக்கூடிய தூதுவளைக்கு ‘கபநாசினி’ என்ற சிறப்புப் பெயரும் உண்டு. தூதுவளை இலைகள் மூளையின் செயல்பாட்டினை அதிகரிக்கும் திறன் கொண்டுள்ளதால், இதனை ‘ஞானப் பச்சிலை’ என்ற பெயராலும் அழைக்கின்றனர்.
கீதையின் உட்பொருளில் திளைத்த ஆளவந்தாருக்கு ’பரமனே உபேயம், பரமனே உபாயமும்’ என்பதைப் புரியவைத்தார். பிறகு ஆளவந்தாரை ஸ்ரீரங்கம் அழைத்துச் சென்று பெரியபெருமாளைக் காட்டி “உங்களுடைய பாட்டனார் நாதமுனிகள் தேடிவைத்த நிதி இதுவே” என்றார்.
ஆளவந்தார் ராமானுஜரின் மானசீக ஆசானும் கூட. ஆளவந்தார் அருளிச் செய்த நூல்கள் 'எட்டு' இவற்றுள் ஸ்தோத்ரரத்னம், சதுஸ்லோகி, சித்தித்ரயம், ஸ்ரீகீதார்த்த ஸங்க்ரஹம், ஆகமப்ராமாண்யம், மகாபுருஷ நிர்ணயம் இவை முக்கியமானவை.