
‘கடவுளின் மொழி எது?’ எனும் கேள்வியை எப்போதாவது யோசித்துப் பார்த்தீர்களா? உண்மையிலேயே கடவுள் மிகவும் பாவம், பொறுமையானவரும் கூட. உலகத்தில் எத்தனை விதமான மொழிகள் இருக்கின்றன. உலக அளவில் கிட்டத்தட்ட 7,200 மொழிகளில் மக்கள் பேசுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. நம் இந்தியாவைப் பொறுத்த வரையில் மொத்தம் 463 நிறுவப்பட்ட மொழிகள் இருந்ததாகவும், அதில் 451 மொழிகள் இன்றுவரை பேசப்படுகின்றன என்றும் கூறப்படுகின்றன. மேலும், இந்தியாவில் 1,400 தாய்மொழிகள் இருப்பதாகவும ஆய்வுகள் கூறுகின்றன.
அப்படியென்றால் நினைத்துப் பாருங்கள். ஒவ்வொரு நாளும் தொடர்ச்சியாக எத்தனை பேர், எத்தனை விதமான மொழிகளில் கடவுளை வணங்குவார்கள் மற்றும் தமது குறைகளையும் கூறுவார்கள் என்று. நினைக்கவே நமக்கு எப்படியோ இருக்கிறது. ஆனால், கடவுளோ எல்லாவற்றையும் எல்லா நேரத்திலும் கேட்டுக் கொண்டு இருக்கிறார் என்றால் அந்த அற்புதத்தை என்னவென்று சொல்வது?
பள்ளிக்கூடத்தில் ஒரு குறிப்பிட்ட வகுப்பிற்கு பரீட்சை நடக்கிறதென்று வைத்துக் கொள்வோம். உதாரணத்திற்கு, 11ம் வகுப்பு என்று எடுத்துக்கொள்வோம். அந்த பள்ளிக்கூடத்தில் மொத்தம் 300 மாணவர்கள் 11ம் வகுப்பில் இருக்கிறார்கள். அந்தப் பள்ளி மகாராஷ்டிராவில் இருக்கிறது என்று எடுத்துக் கொள்வோம். என்னதான் எல்லோரும் பொதுமொழியாக மராட்டியை பேசினாலும் கடவுளை வணங்கும்போது தனக்குரிய தாய் மொழியில்தானே வணங்குவார்கள்.
அந்தப் பள்ளிக்கூடத்திலே 11ம் வகுப்பில் பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் இருப்பார்கள், பரீட்சை ஆரம்பிக்கும் நேரத்தில் ஒருவன் இந்தியில் வேண்டுவான், ஒருத்தி தெலுங்கில் வேண்டுவாள்... இப்படியே பெங்காலி, தமிழ், கன்னடம், கொங்கனி, மலையாளம் என பல மொழிகளில் மாணவர்கள் வேண்டிக்கொள்வார்கள், எல்லோருடைய எண்ணமும், ‘நான் நன்றாக பரீட்சை எழுதி நல்ல மதிப்பெண்ணை பெற வேண்டும்’ என்றுதான் இருக்கும்.
இதைப்போல, தான் உலகளவில் தினம் தினம் ஆயிரக்கணக்கான மொழிகளில், நம் கோரிக்கைகளையும் எண்ணங்களையும் ஆசைகளையும் கடவுள் கேட்டுக் கொண்டிருக்கிறார். சரி, அவருடைய பதிலானது எந்த மொழியிலிருக்கும்? தமிழா? தெலுங்கா? ஆங்கிலமா? கன்னடமா? பஞ்சாபியா? எதுவாக இருக்கும்? தூணிலும், துரும்பிலும் இருந்து கொண்டு இந்த உலகை காப்பாற்றிக் கொண்டும் உலகிலுள்ள மக்களின் எண்ணங்களையும் ஆசைகளையும் நிறைவேற்றி வைக்கும் நம் ஈசனின் மொழி எது தெரியுமா? அமைதி, மௌனம், சாந்தம்! நாம் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொண்டு அமைதியாக, சாந்தமாக, மௌனமாக இருந்து கொண்டு நமக்கு அன்பையும் அருளையும் ஆசிகளையும் வழங்குகிறார்.
அப்படியென்றால் உலகளவில் பேசப்படுகின்ற 7,200 மொழிகளுக்கு ஈடிணை இந்த அமைதி என்றுதானே பொருள். பலதரப்பட்ட மொழிகளோடு பல்வேறு எண்ணங்களை மனதில் வைத்துக்கொண்டு நம்மை பல விதங்களில் ஆட்டிப் படைக்கின்ற இந்த உலகத்தில் சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் வாழ வேண்டும் என்று நினைத்தால் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய மொழி எதுவென்றால் கடவுளின் மொழியாகிய அமைதி! சாந்தம்! மௌனம்! கடவுளை நாம் அடைவதற்கேற்ற ஒரே மொழி அமைதிதான். அமைதியாக இருந்தால் அகிலமும் நம் கைகளில் அடங்கும்!