

பொதுவாக பாற்கடலில் பள்ளிகொண்டிருப்பது போன்ற விஷ்ணு சிலைகளையும் படங்களையும்தான் நாம் பார்த்திருப்போம். ஆனால் மனிதர்களை போல் மல்லாக்க படுத்துக்கொண்டு இருக்கும் ஒரு பெருமாள் சிலையை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.
நோபாள நாட்டில் உள்ள காத்மண்டு நகரத்தின் வடக்கே, இமயமலை அடிவாரத்தில் (சிவபுரி மலையின் அடிவாரத்தில்) அமைந்திருக்கிறது புகழ்பெற்ற ஆன்மீகத் தலம் ‘புத்தானிகந்தா திருக்கோவில்’ (Budhanilkantha Temple). மகாவிஷ்ணுவுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த திறந்தவெளி ஆலயத்தை கிபி 6-ம் நூற்றாண்டில் காத்மாண்டு பள்ளத்தாக்கில் ஆரம்ப கால அரசரான விஷ்ணு குப்தா என்பவர் கட்டமைத்துள்ளார்.
இங்கு பல தலைகளை கொண்ட ஆதிசேஷனின் படுக்கை மீது மகாவிஷ்ணு படுத்திருப்பது போன்ற தோற்றத்தில் 16 அடி நீள சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. அவர் தனது நான்கு கைகளில் சுதர்சன சக்கரம் , ஒரு கதாயுதம், ஒரு சங்கு மற்றும் ஒரு ரத்தினத்தை ஏந்தியுள்ளார்.
இங்குள்ள மூலவர் மகாவிஷ்ணு, சுமார் 1400 ஆண்டுகளாக ஆதிசேஷன் மீது சயனித்த நிலையில் (அனந்த சயனம்) அருள்பாலிக்கிறார். இந்த பிரம்மாண்டமான சிலை, பசாலட் என்ற வகை பாறையில் ஒரே கல்லில் உருவாக்கப்பட்டதாக சொல்கிறார்கள். இந்த கல் சிற்பம் 42 அடி நீளம் கொண்டது. குளத்தில் நீர் நிரம்பி இருக்கும்போது இந்த சிலையானது நீரின் மீது மிதப்பது போன்ற தோற்றத்தை அளிக்கும்.
உள்ளூர் புராணத்தின்படி, அந்தச் சிலை பல நூற்றாண்டுகளாக பூமிக்கடியில் புதைந்து கிடந்தது. தற்போதைய புதன்நீலகண்டா பகுதியில் விவசாயிகள் வயலை உழுதுகொண்டிருந்தபோது, அவர்களின் கலப்பை ஒரு கல்லில் மோதியது. அவர்கள் மேலும் தோண்டியபோது, பூமிக்குள் புதைந்திருந்த சயன விஷ்ணுவின் பிரம்மாண்டமான சிலையை வெளிக்கொணர்ந்தனர். அன்று முதல், அந்தச் சிலை வெறும் தொல்பொருள் கலைப்பொருள் என்பதைவிட, ஒரு தெய்வீக வெளிப்பாடாகப் போற்றப்படுகிறது.
இந்த கோவிலில் நோபாளம் மட்டுமின்றி இந்தியாவில் பல பகுதிகளில் இருந்து ஏராளமானவர்கள் வந்து தரிசனம் செய்து செல்கிறார்கள். இந்த ஆலயத்தில் சயனகோலத்தில் அருளும் மகாவிஷ்ணு துயில் கொள்ளும் தோரணையில் காட்சியளிக்கிறார். இங்கு ஒவ்வொரு ஆண்டும், ‘ஹரியோதினி’ ஏகாதசியில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.
இந்த சிலை மிதந்தபடியே இருந்தாலும் இதற்கான அர்ச்சனைகளும் அபிஷேகங்களும் தினமும் நடந்தவண்ணமே உள்ளன.
இக்கோவிலை இந்துக்கள் நாராயணன் (மகாவிஷ்ணு) என்று வழிபடுகின்றனர். அதேசமயம், பௌத்தர்கள் இதை அவலோகிதேஸ்வரரின் வடிவமாக கருதி வணங்குகின்றனர். ஏனெனில் அதன் நெற்றியில் புத்தர் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இது சயனித்த நாக வடிவில் உள்ள அவலோகிதேசுவரரைக் குறிப்பதாக அவர்கள் நம்புகிறார்கள். அதன் நீர் நோய்களையும் காயங்களையும் குணப்படுத்தும் என்று நம்பி பலர் புதன்நீலகண்டாவிற்கு வருகிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசிக்கு அடுத்தப்படியாக ஹரிபோதினி ஏகாதசிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிறப்பு மரியாதை செலுத்த வருகிறார்கள்.
இந்த ஏகாதசியானது கார்த்திகை மாதத்தில் தொடக்கத்தில் வளர்பிறை ஏகாதசியாக வரும். இங்கே தண்ணீரில் மிதக்கும் நிலையில் அமைக்கப்பட்டுள்ள இந்த மகாவிஷ்ணு சிலை வைகுண்டத்தில் திருப்பாற்கடலில் திருமால் பள்ளிகொண்டிருப்பதை போன்ற தோற்றதை கண்முன் நிறுத்துவதாக சொல்கிறார்கள்.
புத்தானிகந்தா திருக்கோவில் நேபாளம் தலைநகர் காட்மாண்டுவில் இருந்து கிட்டத்தட்ட 9 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.