பாற்கடலில் தோன்றிய நஞ்சை சிவபெருமான் உண்டு கண்டம் கருத்ததனால் நீலகண்டன் என்று திருநாமம் பெற்றார். அந்த நாள் மகா சிவராத்திரி என்று புராணம் சொல்கிறது. பார்வதி சிவபெருமான் கண்களை மூட உலகம் இருளில் மூழ்கியது. தேவர்கள் வேண்ட, சிவன் நெற்றிக் கண்ணைத் திறந்தார். இந்த நாள் சிவராத்திரி.
உலகம் அழிந்து, எல்லாம் சிவபெருமானில் ஒடுங்கி இருந்த காலத்தில் அடர்ந்த இருளில், பார்வதி நான்கு காலம் ஆகம முறைப்படி சிவனை வழிபட்டாள். அவள் வழிபட்டதன் நினைவாக சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. சிவராத்திரிக்கு இப்படி காரணங்கள் சொல்லப்படுகின்றன. அதுபோல சிவராத்திரி நிகழ்வுக்கும் சில தலங்கள் உதாரணமாக சொல்லப்படுகின்றன.
திருவைகாவூர் வில்வவனேஸ்வரர் கோவில் சம்பந்தர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. சிவராத்திரிக்கு சிறப்புடைய தலம். சிவராத்திரி நாளில் புலிக்கு பயந்து வேடன் வில்வ மரத்திலிருந்து தூங்காமல் வில்வத்தை பறித்து போட, இறைவன் காலையில் தோன்றி அருள் புரிந்த தலமாகும்.
ஒரு சமயம் தவநிதி என்ற முனிவர் திருவைகாவூர் ஆலயத்தில் தங்கி இருந்து வழிபட்டுக் கொண்டிருந்தார். அப்போது மான் ஒன்றை வேட்டையாட வேடன் ஒருவன் துரத்தி வந்தான். தப்பியோடிய மான் ஆலயத்திற்குள் புகுந்து தவநிதி முனிவரை தஞ்சம் அடைந்தது. முனிவரும் அதற்கு அபயம் அளித்தார். இதனால் கோபம் கொண்ட வேடன் முனிவரை தாக்க தயாரானான். அடியாரின் துயரை நொடியில் தீர்க்கும் இறைவன் புலி உருவம் கொண்டு வேடனைத் துரத்தினார்.
உயிருக்கு பயந்த வேடன் அங்கிருந்த மரத்தின் உச்சியில் ஏறிக்கொண்டான். வேடனோ வேறு வழியின்றி மரத்தின் மீதே இருக்க வேண்டியது ஆயிற்று. பசியும் பயமும் அவனை வாட்ட இரவும் வந்தது. களைப்பினால் தூக்கம் வந்துவிடும் என்பதால், தூங்காமல் இருக்க மரத்திலிருந்து ஒவ்வொரு இலையாக பறித்து கீழே போட்டுக் கொண்டிருந்தான். அவன் இருந்த மரம் வில்வம் மரம்.
அன்றிரவு மகாசிவராத்திரியானதால் அவன் பறித்துப் போட்ட இலைகள் அனைத்தும் புலி வடிவில் இருந்த சிவபெருமான் மீது அர்ச்சனை மலர்களாக விழுந்து கொண்டிருந்தன. இதனால் தூக்கமின்றி சிவனை வழிபட்ட புண்ணியம் வேடனுக்கு கிடைத்தது. இறைவன் வேடனுக்கு மோட்சமளித்து அருளினார்.
இந்த நிலையில் விடிந்தால் அவனது ஆயுள் முடியும் காலம் வந்தது. பொழுது விடிந்ததும் வேடனின் உயிரைப் பறிக்க எமன் ஆலயத்திற்குள் நுழைந்தான். நந்தி தேவர் தடுத்தும் கேளாமல் உட்புகுந்தான். உடனே தட்சிணாமூர்த்தி வடிவில் தோன்றிய இறைவன், கையில் கோலேந்தி யமனை விரட்டினார். என்றாலும், எமன் விடவில்லை. இதற்கிடையில் சிவனின் கோபத்திற்கு ஆளான நந்தி, தனது சுவாசத்தினால் எமனை உள்ளே நுழையாமல் தடுத்தார்.
இந்த ஐதீகத்தை நினைவுபடுத்தும் வகையில் நந்தி வாயிலை நோக்கியவாறும் தட்சிணாமூர்த்தி கையில் கோலேந்தியும் காட்சி தருகின்றனர். அக்கினியும் பிரம்மனும் இத்தலத்தில் தீர்த்தம் அமைத்து வழிபட்டுள்ளனர். அதனால் அக்கினியின் ஒளி குறையும் தன்மை நீங்கியதாகவும் பிரம்மனின் படைப்பு தொழில் மேம்பட்டதாகவும் புராணங்கள் கூறுன்றன.
திருவைகாவூர் தலத்திற்கு வில்வ வனம் என்றும் பெயர் உண்டு. உள் கோபுர வாயிலில் வேடன் நிகழ்ச்சி சுதையால் சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலில் முருகன் வீற்றிருக்கும் மயிலின் முகம் திசை மாறியுள்ளது. துர்க்கைக்கு எதிரில் இரு சண்டிகேஸ்வரர்கள் திருமேனிகள் உள்ளன. மூலவர் சுயம்பு மூர்த்தியாகும்.
சிவராத்திரி அன்று நான்காம் ஜாமத்தில் வேடன் வேடுவச்சி இறைவன் காட்சி தரும் ஐதீகம் புறப்பாடு நடைபெறுகின்றன.