
இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதல் என்றாலே எப்போதும் இரு நாட்டு ரசிகர்களிடம் மட்டுமின்றி வீரர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பும், பதற்றமும் பற்றிக்கொள்ளும். இதேபோல் இந்த இரு அணிகள் மோதிய நேற்றைய ஆட்டத்துக்கும் ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பு எகிறி இருந்தது.
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த 19-ம்தேதி தொடங்கி பாகிஸ்தானில் நடந்து வருகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டம் மட்டும் துபாயில் நடக்கிறது. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் துபாயில் நடந்த லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனும், ‘நம்பர் ஒன்’ அணியுமான இந்தியா, நடப்பு சாம்பியனும், பரம எதிரியுமான பாகிஸ்தானை (ஏ பிரிவு) எதிர்கொண்டது.
பங்களாதேஷ் அணிக்கு எதிராக 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் இந்தியா உயர்நிலையில் இருக்கும்போது, நியூசிலாந்துக்கு எதிரான போட்டித் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த பிறகு பதற்றத்தில் இருந்தது. அதுமட்டுமின்றி தனது பிரிவில் கடைசி இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் அணி இதில் தோல்வி அடைந்தால் அந்த அணியின் அரைஇறுதி வாய்ப்பு ஏறக்குறைய முடிந்து விடும் என்ற கடும் நெருக்கடியுடன் களத்தில் இறங்கியது.
இந்நிலையில் ‘டாஸ்’ வென்று பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில் இமாம் உல்-ஹக்கும், பாபர் அசாமும் பாகிஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். ஆரம்பம் முதலே இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய பாகிஸ்தான் பொறுமையாக விளையாடிய போதும் 9-வது ஓவரில் பாபர் அசாம், இமாம் உல்-ஹக் அடுத்ததடுத்து ஆவுட் ஆகினர். அவுட் ஆகக்கூடாது என்று பொறுமையாக விளையாடியதால் 25.3 ஓவர்களில் தான் பாகிஸ்தானின் ஸ்கோர் 100-ஐ தொட்டது.
அடுத்து வந்தவர்களும் அடுத்தடுத்து அவுட்டாக பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்களில் 241 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், சுப்மன் கில்லும் களம் இறங்கிய நிலையில் ரோகித் சர்மா 20 ரன்னில் அவுட்டானார்.
அடுத்து களம் இறங்கிய விராட்கோலியும், கில்லும் இணைந்து சூப்பராக விளையாடி பாகிஸ்தானை திரணவிட்ட நிலையில் கில் 46 ரன்களில் அவுட்டானார்.
இதைத் தொடர்ந்து வந்த ஸ்ரேயஸ் அய்யரும், விராட் கோலியும் பார்ட்னர்ஷிப் அமைத்து பாகிஸ்தான் பவுலர்களை திணறடித்து அணியின் ஸ்கோர் 214 ஆக உயர்ந்த போது, ஸ்ரேயஸ் அய்யர் 56 ரன்களில் ஆட்டம் இழந்தார். கோலி - ஸ்ரேயஸ் கூட்டணி 114 ரன்கள் சேகரித்தது குறிப்பிடத்தக்கது.
அடுத்து வந்தவர்கள் பொறுமையாக விளையாடி 42.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 244 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. கோலி 100 ரன்களுடனும் (111 பந்து, 7 பவுண்டரி), அக்ஷர் பட்டேல் 3 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். கோலி ஆட்டநாயகன் விருது பெற்றார்.
இந்தியாவின் வெற்றியை நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
இந்த போட்டியின் நேரடி ஒளிபரப்பை பொதுமக்கள் ராட்சத திரையின் மூலம் கண்டுகளிக்க தமிழ்நாடு விளையாட்டு மேம்பாடு ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது. இதன்படி விவேகானந்தா நினைவு இல்லத்துக்கு எதிர்புறத்தில் மெரினா கடற்கரையிலும், பெசன்ட் நகர் கடற்கரையில் உள்ள போலீஸ் பூத் அருகிலும் இந்த போட்டி ராட்சத திரையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.