
கந்தவேள் கடவுளாம் முருகப்பெருமான் பல்வேறு திருப்பெயர்கள் கொண்டு பக்தர்களால் அழைக்கப்படுகிறான். காரணப் பெயர் கொண்ட பூரணனாக விளங்கும் ஆறுமுகக் கடவுளின் பல்வேறு பெயர்களின் பொருள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
ஆறுமுகன்: ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், சத்யோஜாதம் என்ற ஐந்துடன் அதோமுகமும் சேர்ந்து ஆறுமுகமானது.
குகன்: குறிஞ்சி நில தெய்வமான இவன், மலைக் குகைகளில் கோயில் கொண்டதால் குகன் என இப்பெயர் கொண்டான்.
குமரன்: மிக உயர்ந்தவன், இளமையை எப்போதும் உடையவன், பிரம்மச்சாரியானவன் என்பதால் இந்த திருநாமம் பூண்டான்.
முருகன்: ‘முருகு’ என்றால் அழகு என்று பொருள். எனவே, முருகன் ஒப்புவமையற்ற பேரழகன்.
குருபரன்: கு - அஞ்ஞான இருள், ரு – நீக்குபவர். ஆன்மாக்களின் அறியாமை இருளை அகற்றுபவர் குரு. சிவனுக்கும் அகஸ்தியருக்கும் அருணகிரிக்கும் குருவாய் நின்று பிரணவத்தை உபதேசித்த குருநாதன் என்பதால் இந்தத் திருநாமம்.
காங்கேயன்: சிவனின் நெற்றிக்கண் தீப்பொறியில் உதித்து கங்கையில் விடப்பட்டு கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டதால் முருகனுக்கு கங்கையின் மைந்தன் என்று பெயர். இதுவே காங்கேயன் என்றானது.
கார்த்திகேயன்: ஆறுருவாய் தோன்றிய முருகப்பெருமான் கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டு ஓருருவாய் திகழ்ந்ததால் கந்தப் பெருமானுக்கு கார்த்திகேயன் என்று பெயர்.
கந்தன்: கந்து – யானை. கட்டும் தறி கந்தன் ஆன்மாக்களுக்கு பற்றுக்கோடாய் இருப்பவன். பகைவர் வலிமையை அழிப்பவன் ஸ்கந்தன். தோள் வலிமை மிக்கவன் ஆறு திருமேனியும் ஒன்றானவன்.
கடம்பன்: வெற்றியின் அடையாளமாய்த் திகழும் கடம்ப மலர் மாலை அணிந்தவன் என்பதால் முருகனுக்கு இப்பெயர்.
சரவணபவன்: சரம் - நாணல், வனம் - காடு, பவன் – தோன்றியவன். நாணல் மிக்க தண்ணீர் உடைய காட்டில் தோன்றியவன் என்பதால் இந்தத் திருநாமம்.
ஸ்வாமி: ஸ்வாமி – சொத்து. எல்லா உலகங்களையும், எல்லா உயிர்களையும் சொத்தாக உடையவன் ஸ்வாமி என்ற பெயர் முருகனுக்கு.மட்டுமே உரியது. சுவாமி உள்ள மலை சுவாமிமலை.
சுரேஷன்: தேவர்களின் தலைவன் என்பதால் முருகப்பெருமானுக்கு சுரேஷன் என்று பெயர்.
செவ்வேள்: செந்நிறமுடையவன் ஞானச்செம்மை உடையவன் என்பதால் முருகனுக்கு இந்தத் திருநாமம்.
சேந்தன்: செந்தமிழ் பிழம்பாய் விளங்குவதால் கந்தவேளுக்கு இந்தத் திருநாமம்.
சேயோன்: வேலவன் குழந்தை வடிவானவன் என்பதால் முருகனுக்கு இந்தத் திருநாமம்.
விசாகன்: விசாக நட்சத்திரத்தில் நெருப்பாய் உதித்தவன் என்பதால் முருகனுக்கு இந்தப் பெயர்.
வேலன்: வெல்லும் வேலை உடையவன். அறிவாக, ஞான வடிவாக விளங்கும் வேல், கூர்மை, அகலம், ஆழம் என்னும் மூன்றும் உடையது. வேலை தாங்கியவன் என்பதால் முருகனுக்கு இந்தத் திருநாமம்.
முத்தையன்: பிறப்பிலேயே முத்து ஒளியுடையது. மற்ற மணிகள் பட்டை தீட்டினால்தான் ஒளிரும். ஆனால், இயல்பாகவே ஒளிர்பவன் முருகன் என்பதால் முத்தையன் என திருநாமம் பூண்டான்.
சுப்பிரமணியன்: மேலான பெரிய பிரம்மத்திலிருந்து தோன்றி ஒளிர்பவன் என்பதால் முருகனுக்கு இந்தத் திருநாமம்.
வள்ளல் பெருமான்: முருகன் மண்ணுலகில் அவதரித்த வள்ளி இச்சா சக்தி மூலம் இக நலன்களையும் விண்ணுலக மங்கை தெய்வானை கிரியா சக்தி மூலம் பரலோக நலன்களையும் வேலின் மூலம் ஞான சக்தியையும் ஆகிய மும்மை நலன்களையும் முக்தி நலன்களையும் வழங்குகிறார்கள்.
ஆறுபடை வீடுடையோன்: மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம் , விசுத்தி, ஆக்ஞை என்ற ஆதாரங்களை ஆறுபடை வீடுகளாய் உடையவன் என்பதால் இப்பெயர்.
மயில்வாகனன்: மயில் - ஆணவம், யானை – கன்மம், ஆடு - மாயை இந்த மூன்றையும் அடக்கி வாகனமாய் கொண்டவன்.
தமிழ் தெய்வம்: தமிழே முருகன், 12 உயிர் எழுத்து - பன்னிரு தோள்கள், 18 மெய்யெழுத்து- பதினெட்டு கண்கள், ஆறு இன எழுத்து – ஆறு முகங்கள், ஃ ஆயுத எழுத்தே வேல்.
திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் கொடுத்த வேலவனின் திருப்பெயர் விளக்கம் இது.