
புஷ்கரம் என்பது ஒரு புண்ணிய தலமாகும். இங்கு பிரம்மாவுக்கு தனிக் கோயில் உள்ளது. டெல்லி - மும்பை ரயில் மார்க்கத்தில் அஜ்மீர் ரயில் நிலையத்திலிருந்து 12 மைல் தொலைவில் இது அமைந்துள்ளது.
இங்குள்ள புஷ்கரிணியில் நீராடி பிரம்மா கோயிலில் பிரம்மாவை பூஜித்தால் நம் தலையில் பிரம்மா எழுதிய எழுத்து, அதாவது ஜாதக விதிகள் என்று சொல்லக்கூடியவை மாறி விடுவதாக ஐதீகம். இந்த க்ஷேத்திரத்தில் தாமரைப் பூ விழுந்ததனால் புஷ்கரம் என்று இதற்கு பிரம்மா பெயரிட்டதாகப் புராண வரலாறு கூறுகின்றது. புஷ்கரம் என்றால் தாமரைப்பூ என்று அர்த்தம்.
இந்தப் புஷ்கரத்தில் பிரம்மா யாகம் செய்தபோது இடையில் நாரதர் புகுந்து கலகம் செய்தார். பிரம்மாவைப் பற்றிய சில பொய்ச் செய்திகளை அவருடைய மனைவியான சாவித்திரியின் காதில் ரகசியமாகப் போட்டு கலகமூட்ட, சாவித்திரி அந்தப் பொய்களை உண்மை என்று நம்பி, பிரம்மாவிடம் கோபித்துக் கொண்டு யாகத்திலிருந்து எழுந்து சென்றார்.
யாகம் செய்யும்போது மனைவி இல்லாமல் யாகம் செய்யக் கூடாது என்ற ஒரு விதி இருப்பதால் பிரம்மா, கோப குலத்தைச் சேர்ந்த வேறொரு கன்னிகையைத் திருமணம் செய்து அவளுக்கு காயத்ரி என்று பெயர் சூட்டி யாகத்தைத் தொடர்ந்தார்.
இதைக் கண்ட சாவித்திரி பொங்கி எழுந்து பிரம்மா உள்ளிட்ட மும்மூர்த்திகளுக்கும் தேவர்களுக்கும் சாபம் இட்டார். சாவித்திரி சபித்ததால் பிரம்மாவுக்கு இத்தலத்தை தவிர, வேறு எந்த இடத்திலும் கோயில் இல்லை என்பது புராண வரலாறு.
சிம்ம ராசிக்காரர்கள் இந்தக் கோயிலுக்கு ஒரு முறையாவது சென்று வருதல் நலம். ஜாதகத்தில் குரு நீசம், அஸ்தமனம், பகை பெற்று இருப்பவர்களும் இங்கு ஒரு முறை சென்று இத்தல புஷ்கரணியில் நீராடி, பிரம்மாவை வழிபாடு செய்து வந்தால் குரு தோஷம் நீங்கப் பெற்று நலமுடன் வாழலாம் என்பது பலரது நம்பிக்கை.