
சிவபெருமான் தன்னுடைய பக்தர்கள் அனைவரையும் பாரபட்சம் பார்க்காமல் ஒரே மாதிரியே நடத்துவார். நாடு, இனம், மொழியை தாண்டி பக்தி ஒன்றே சிவபெருமானுடன் நம்மை இணைக்கிறது என்பதை இந்த அதிசய நிகழ்வு நமக்கு உணர்த்துகிறது.
அது இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆண்டுக்கொண்டிருந்த காலம். கர்னல் மார்ட்டின் தன்னுடைய மனைவியை மத்தியபிரதேசத்தில் விட்டுவிட்டு படையை தலைமைத் தாங்கி ஆப்கானுக்கு போர் புரிய சென்றிருந்தார். அவருக்கு தினமும் தன் மனைவிக்கு கடிதம் எழுதும் பழக்கம் இருந்தது. ஆனால், அங்கிருந்த சூழ்நிலைக் காரணமாக படிப்படியாக கார்னலிடம் இருந்து கடிதம் வருவது நின்று போனது. இதை எண்ணி கார்னல் மார்ட்டினின் மனைவி, 'தன் கணவனுக்கு ஏதோ விபரீதம் நேர்ந்துவிட்டதோ?' என்று எண்ணி மிகவும் வருதப்பட்டார்.
இப்படியிருக்க ஒருநாள் கர்னலின் மனைவி பைஜ்நாத் மகாதேவ் கோவிலை கடந்து சென்றுக்கொண்டிருந்த போது, அக்கோவிலில் இருந்து வந்த சங்கினுடைய முழக்கமும், மந்திரங்களின் உச்சரிப்பு சத்தமும் அவரை கோவிலுக்குள் ஈர்த்தது. அவரும் கோவிலுக்குள் சென்று தன் துயரத்தை அங்கிருந்த பூசாரிகளிடம் கூற, அதற்கு அங்கிருந்த பூசாரி ஒருவர், 'சிவபெருமானை மனதார வேண்டினால் கட்டாயம் அவர் பக்தர்களை காப்பார்' என்று கூறினார். மேலும் ‘ஓம் நமசிவாய’ என்ற மந்திரத்தை 11 நாட்கள் தொடர்ந்து சொல்லச் சொன்னார்.
கர்னலின் மனைவியும் அவ்வாறே தொடர்ந்து செய்துக் கொண்டிருந்தார். சரியாக 10 ஆவது நாள் கர்னலிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் கர்னல் எழுதியிருந்தது என்னவென்றால், போர்க்களத்தில் எதிரிகள் எங்களை சூழ்ந்துக்கொண்டனர். மரணம் நிச்சயம் என்று எண்ணிக் கொண்டிருந்த சமயம், திடீரென்று நீண்ட கூந்தலுடன் புலித்தோல் அணிந்துக்கொண்டு கையில் திரிசூலத்தை ஏந்திக்கொண்டு ஒரு இந்திய யோகியைக் கண்டேன். அவருடைய பிரமிக்க வைக்கும் ஆளுமையைக் கண்டு எதிரிகள் பயந்து ஓடினர்.
அவருடைய அருளால் நாங்கள் உயிர் பிழைத்தோம். பிறகு அந்த யோகி என்னிடம் வந்து, 'கவலைப்பட வேண்டாம். உன் மனைவியின் பிரார்த்தனையால் மகிழ்ச்சியடைந்து, உன்னை மீட்க வந்தேன்’ என்று கூறியதாகவும் கடிதத்தில் எழுதியிருந்தார். இதைப் படித்த கர்னலில் மனைவியின் கண்களில் கண்ணீர் பெருகியது.
சில வாரங்களிலேயே மார்ட்டின் வீடு திரும்பினார். அப்போது மார்ட்டினின் மனைவி இங்கு நடந்த விஷயங்களை அவரிடம் கூறினார். இருவருமே சிவபெருமானின் பக்தர்களாக மாறினார்கள். மார்ட்டினின் மனைவி வேண்டிக்கொண்டதுப் போலவே 1883 ஆம் ஆண்டு கோவிலை புதுபிக்க 15,000 ரூபாய் நன்கொடை அளித்தனர். இந்த தகவல் இன்றும் பைஜ்நாத் மகாதேவ் சிவன்கோவிலில் பொரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.