
நமது பாரதத்திருநாட்டில் நான்கு நவராத்திரிகள் பிரசித்தமானவை.
ஆடி மாதத்தில் கொண்டாடப்படுவது ஆஷாட நவராத்திரி.
புரட்டாசி மாதத்தில் இங்கே தமிழ் நாட்டில் மிகக் கோலாகலமாக கொலு வைத்துக் கொண்டாடப்படுவது சாரதா நவராத்திரி.
தை மாதத்தில் கொண்டாடப்படுவது சியாமளா நவராத்திரி.
வசந்த காலத்தில் பங்குனி மாதத்தில் கொண்டாடப்படுவது வசந்த நவராத்திரி.
இந்த நவராத்திரி பங்குனி மாத அமாவாசையை அடுத்த பிரதமை திதியன்று ஆரம்பித்து நவமி வரை கொண்டாடப்படுகிறது. இந்த நவராத்திரி வட இந்தியாவில் மிகவும் விசேஷம். இதை சைத்ர நவராத்திரியென்ற பெயரில் மிக விமரிசையாகக் கொண்டாடுவார்கள்.
இந்த நவராத்திரியின் ஆரம்பம் முடிவு இரண்டுமே மிக விசேஷமான நாட்களில் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு வருடமும் வசந்த நவராத்திரி ஆரம்பிப்பது யுகாதி மற்றும் குட்பட்வா போன்ற ஆந்திர, மஹாராஷ்டிர புதுவருடப் பிறப்பு தினங்களின் போதுதான். அதே போல முடிவதும் ஸ்ரீ ராமநவமிப் பண்டிகையன்று தான்.
வசந்த நவராத்திரியின் போது துர்கா தேவியின் ஒன்பது விதமான வடிவங்கள் வழிபடப்படுகின்றன. இவை, ஷைலபுத்ரி, பிரம்மஹ்சாரிணி, சந்திரகாந்தா, குஷ்மாந்தா, ஸ்கந்தமாதா, காத்யாயினி, காள்ராத்ரி, மஹாகௌரி மற்றும் சித்திதாரி ஆகும்.
ஷைலபுத்ரி என்பவள் ஹிமவானின் புத்ரியாகவும்,
ப்ரம்ஹசாரிணி என்பது பார்வதி மாதா ஒரு சாப விமோசனத்திற்காக தவம் இருந்தபோதும் எடுத்த அவதாரங்களாகும்.
சந்திரகாந்தா மாதா அசுரர்களை வதம் செய்ய புலியின் மீது பத்து கரங்களுடன் வில் அம்பு, திரிசூலம், கத்தி போன்ற ஆயுதங்களை ஏந்தி வருபவள்.
மாதா குஷ்மாந்தா இந்த பிரபஞ்சத்தையே உருவாக்கி எல்லோரையும் காப்பவள் என்று கூறப்படுகிறது.
ஸ்கந்தமாதா என்னும் அவதாரத்தில் தேவிக்கு நான்கு கரங்கள், மூன்று விழிகள் இருப்பதாகவும் அவள் சிங்கத்தின் மேல் ஏறி வருவதாகவும் வழிபடுகிறார்கள்.
மகிஷாசுரனை வதம் செய்த வடிவமாக அன்னை காத்யாயினியின் வடிவம் வழிபடப்படுகிறது.
காள்ராத்ரி மாதா தான் ஒன்பது வடிவங்களிலும் மிகவும் உக்கிரமானவளாகக் கருதப்படுகிறாள். இவள் எல்லா அசுர சக்திகள், எதிர்மறை சக்திகளை அழிப்பவள்.
அன்னை மஹாகௌரி சாந்தமானவள் பக்தர்களுக்கு எல்லா செல்வங்களையும் அளிப்பவள்.
கடைசிநாள் அன்று வழிபடப்படும் அன்னை சித்திதாத்ரி அர்த்தநாரீஸ்வரராக இருக்கும் சிவனின் பாதி வடிவமாக இருப்பவள் என்று கூறப்படுகிறது.
வடக்கே சுமங்கலிப் பெண்கள் ஒன்பது நாட்களும் விரதம் இருந்து வசந்த நவராத்திரியின்போது வழிபாடு நடத்துகிறார்கள். நவராத்திரி என்பதே தீயதை ஒழித்து நல்லதை நிலை நாட்டுவது தான். பொதுவாக இந்த வசந்த நவராத்திரியைப் பற்றி சொல்லப்படுவது, மஹிஷாசுரமர்த்தினி வதத்திற்குப் பிறகு வரும் நவராத்திரி இது தான் என்று. அசுரனை வதம் செய்த அன்னை துர்க்கைக்கு நன்றியுடன் வழிபாடு செய்து சகல சௌபாக்கியங்களையும் பெறுவதே சைத்ர நவராத்திரி என்னும் வசந்த நவராத்திரி வழிபாடாகும்.
இந்த வருடம் வசந்த நவராத்திரியன்று ஒவ்வொரு நாளும் கோவில்களில் அம்பிகைக்கு செய்யப்படும் அலங்காரம்:
30.03.2025 - ஞாயிறு - ஸ்ரீ அன்னபூரணி
31.03.2025 - திங்கள் - ஸ்ரீ காமாக்ஷி
01.04.2025 - செவ்வாய் - ஸ்ரீ மீனாக்ஷி
02.04.2025 - புதன் - ஸ்ரீ விசாலாக்ஷி
02.04.2025 - வியாழன்- ஸ்ரீ சரஸ்வதி
03.04.2025 - வெள்ளி - ஸ்ரீ மாரியம்மன்
04.04.2025 - சனி- ஸ்ரீ சாகம்பரி
05.04.2025 - ஞாயிறு - ஸ்ரீ மஹாலக்ஷ்மி
06.04.2025 - திங்கள் - புஷ்ப அலங்காரம்
07.04.2025 - செவ்வாய் - ஸ்ரீ புவனேஸ்வரி
நாமும் வசந்த நவராத்திரியன்று அம்பிகையை தினந்தோறும் வெவ்வேறு வடிவங்களில் வழிபட்டு வாழ்வில் எல்லா வளங்களையும் பெறுவோம்.