
ஐப்பசியில் காவிரியில் நீராடுவது மகாபுண்ணியம். துலா மாதமாகிய ஐப்பசியில் உலகிலுள்ள 66 கோடி தீர்த்தங்களும் காவிரியில் சங்கமமாகின்றன. அதனால் இதில் காவிரியில் ஸ்நானம் செய்பவர்கள் பஞ்சமகா பாபங்களிலிருந்து விடுபடுகிறார்கள். அஸ்வமேத யாகம் செய்த பலனை அடைகிறார்கள். நதிகளில் கங்கை எப்படி உயர்ந்தோ, புஷ்பங்களில் துளசி எப்படி உயர்ந்ததோ, வேதங்களில் எப்படி சாம வேதம் உயர்ந்ததோ, ஸ்த்ரீகளுக்குள் அருந்ததி எப்படி உயர்ந்தவரோ அதேபோல், நதிகளில் உயர்ந்தது காவிரி.
ஐப்பசி முதல் தேதி திருப்பராய்த்துறையிலும், ஐப்பசி கடைசியில் மயிலாடுதுறையிலும் நீராடுவது விசேஷமாகக் கருதப்படுகிறது. துலா மாதத்தில் காவிரியில் மும்மூர்த்திகளும், முப்பத்து முக்கோடி தேவர்களும், 68 ஆயிரம் ரிஷிகளும், முனிவர்களும் நீராடுகிறார்கள்.
காவிரியில் ஐப்பசி நீராடுவது கங்கையில் நீராடுவதற்குச் சமம் என புராணங்கள் கூறுகின்றன. ஏனெனில், கங்கை, யமுனை, சரஸ்வதி அனைத்தும் காவிரியில் நீராடி மானிடர்கள் தங்களிடம் கரைக்கும் பாபங்களை இன்று போக்கிக் கொள்கின்றன. காவிரியில் ஒருமுறை துலா மாதத்தில் நீராடுபவன் நாராயணனாக மாறுகிறான்.
துலா காவிரி ஸ்நானம் அழகு, ஆரோக்கியம், கல்வி, செல்வம் குழந்தைப் பேறு, வலிமை ஆகியவற்றைத் தரும். ஐப்பசியில் காவிரி நீராடி நீர்க்கடன் செய்பவர்களின் முன்னோர்கள் மோட்சத்தை அடைகிறார்கள். ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதருக்கு ஐப்பசியில் தங்கக் குடங்களில் காவிரியில் இருந்து நீர் எடுத்து வந்து அபிஷேகம் செய்வர். காவேரன் என்ற அரசன் பத்திர பாக்கியம் இல்லாததால் பிரம்மாவை கூறித்து தவம் செய்தார்.
அந்த தவத்தை மெச்சி, ஒரு பெண் குழந்தையை அவருக்கு அளித்தார் பிரம்மா. அதற்குக் காவேரி எனப் பெயரிட்டு வளர்த்தான். இவள் வளர்ந்ததும் தகுந்த கணவனுக்காக தவம் செய்தாள். அகஸ்தியரை கண்டதும் லோபமுத்ரா என்ற பெயருடன் அவரை திருமணம் செய்தாள். அவள் விரும்பியபடி நதியாகி மனிதர்களின் பாபங்களைப் போக்கலானாள்.
துலா மாதத்தில் காவிரி நீராடுபவர்கள் தங்கள் குடும்பத்துடன் மூன்று கோடி உறவினர்களையும் கடைத்தேற்றுகிறார்கள். ‘தட்சிண கங்கை’ எனப் போற்றப்படும் காவிரிக்கு கல்யாணி, சாமதாயினி, கோனிமாதா என பல பெயர்கள் உண்டு. காவிரியில் துலா ஸ்நானம் செய்து ஸ்ரீரங்கநாதரை வழிபட்டதால் சந்தனு மகாராஜா பீஷ்மரை புத்திரனாக அடைந்தார். அர்ச்சுனன் துலா ஸ்நானம் செய்து சுபத்திரையை மணந்தான். காவிரியின் மகிமையைக் கேட்டாலோ, நினைத்தாலோ சாபங்கள் தீரும்.