குளிர்காலத்தில் உடம்பின் உஷ்ணம் குறையாமல் பாதுகாக்க அவ்வப்போது டீ அருந்துவது வழக்கம். மாலை வேளையில் டீயுடன் சுவையான மொறு மொறு ஸ்நாக்ஸ்ஸும் சேர்த்து சாப்பிடுவது வயிற்றை நிரப்பவும் ஆரோக்கியம் தரவும் உதவும். குளிர்காலத்தில் எந்த நேரமும் கைவசம் வைத்துக்கொண்டு உண்பதற்கேற்ற 12 வகை ஸ்நாக்ஸ் வகைகளை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. வறுத்த வேர்க்கடலை பருப்பு: எங்கும் எளிதில் கிடைக்கக்கூடியது. கடாயில் போட்டு ட்ரை ரோஸ்ட் பண்ணி உண்ணலாம். கடாயில் மணல் போட்டு அதன் மீது இந்த கொட்டைகளை சேர்த்து வறுக்கும்போது ஒரு நட்டி ஃபிளேவர் மற்றும் நல்ல மணம் கிடைக்கும்.
2. மக்கானா: அதிகளவு நார்ச்சத்து கொண்ட தாமரை விதைகள் இவை. கடாயில் சிறிது நெய் சேர்த்து வறுத்தெடுத்து மிளகுத் தூள். உப்பு தூவி சாப்பிடலாம்.
3. ஜல் மூரி (Jhal Muri): அரிசிப் பொரியுடன் மிளகுத் தூள், உப்பு, லெமன் ஜூஸ், சேவ், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, கொத்தமல்லி இலைகள் ஆகியவை சேர்த்துக் கலந்து உண்ணும்போது சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த, க்ரஞ்சியான ஸ்நாக்ஸ் சாப்பிட்ட திருப்தி கிடைக்கும்.
4. பாப்கார்ன்: மக்காச்சோள மணி (kernels)களை சிறிது எண்ணெய், மஞ்சள் தூள் சேர்த்துக் கலந்து கடாயில் போட்டு பொரித்து, மிளகுத் தூள், உப்பு சேர்த்து உண்ணலாம்.
5. பீட்ரூட் சிப்ஸ்: பீட்ரூட்டை மெலிதான சிப்ஸ்களாக நறுக்கி, மொறு மொறுப்பாக வரும் வரை எண்ணெயில் பொரிக்கலாம் அல்லது ஏர் ஃபிரை (Air Fry) பண்ணியும், பேக் (Bake) செய்தும் உண்ணலாம்.
6. மேத்தி தெப்லா (Methi Thepla): சப்பாத்தி போன்ற குஜராத்திகளின் பாரம்பரிய உணவு மேத்தி தெப்லா. முழு கோதுமை மாவுடன் ஃபிரஷ் வெந்தய இலைகள் மற்றும் ஸ்பைஸஸ் சேர்த்து தயாரிக்கப்படும் ஆரோக்கியம் நிறைந்த உணவு.
7. ச்சூரா மட்டர் (Chura Matar): உத்தரப்பிரதேசம் மற்றும் பீஹார் மாநில மக்களின் குளிர்கால ஸ்பெஷல் உணவு இது. கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் சீரகம், பூண்டு சேர்த்து, அவை சிவந்ததும் அதனுடன் ஃபிரஷ் பச்சைப் பட்டாணி சேர்த்து பொரியும் வரை வதக்க வேண்டும். பின் அதனுடன் ஊறவைத்துப் பிழிந்த அவல், மிளகுத் தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து உண்ணலாம்.
8. ஸ்பிரௌட் சாட் (Sprout Chat): ஊற வைத்து முளைகட்டிய பாசிப் பயறு அல்லது கொண்டைக் கடலையை வேக வைக்கவும். அதனுடன் மிளகுத் தூள், உப்பு, லெமன் ஜூஸ், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, கொத்தமல்லி இலைகள் ஆகியவை சேர்த்துக் கலந்து உட்கொள்வது நல்ல ஆரோக்கியம் தரும் ஸ்நாக்ஸ்ஸாக அமையும்.
9. டோக்ளா (Dhokla): ரவை, கடலை மாவு, தயிர், உப்பு தூள், மஞ்சள் தூள், பேக்கிங் சோடா ஆகியவை கலந்து ஆவியில் வேக வைத்து எடுத்து அதன் மீது கடுகு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி, சிறிது சர்க்கரை தூவி அதன் மீது லேசாக தண்ணீர் தெளித்துப் பரிமாறப்படும் உணவு. குஜராத் மக்கள் விரும்பி உட்கொள்ளும் உணவு டோக்ளா.
10. பொரித்த ஸ்வீட் பொட்டட்டோ: ஒரு கடாயில் சிறிது நெய் ஊற்றி அதில் ஒரு டீஸ்பூன் சீரகம் சேர்க்கவும். அது வெடித்ததும் வேகவைத்து நறுக்கிய ஸ்வீட் பொட்டட்டோ துண்டுகளை அதனுடன் சேர்க்கவும். பிறகு அதில் உப்பு, மிளகு, சிவப்பு மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும். மிகுந்த ஆரோக்கியம் தரும் உணவு இது.
11. அவல் உப்புமா: அவலை சிறிது நேரம் ஊற வைத்துப் பிழிந்து கொள்ளவும். ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி வேர்க்கடலைப் பருப்பு சேர்த்து வறுக்கவும். அதனுடன் அவலை சேர்த்து உப்பு, மிளகு, சிவப்பு மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலந்து விடவும். இரண்டு நிமிடத்தில் கீழே இறக்கி வைத்து லெமன் ஜூஸ், சேவ், நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து அலங்கரிக்கவும்.
12. நிம்க்கி: ரவை அல்லது கோதுமை மாவில் உப்பு, மிளகுத் தூள், சிவப்பு மிளகாய் தூள், ஓமம் சேர்த்துப் பிசைந்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஏர் ஃபிரை (Air Fry) அல்லது பேக் (Bake) செய்து உண்ணலாம். சுவையான கிரிஸ்ப்பியான ஸ்நாக்ஸ் இது.