பன்னிரு தமிழ் மாத பௌர்ணமி தினங்களின் பெருமை!

Full moon Sri Annamalaiyar
Full moon Sri Annamalaiyar
Published on

வ்வொரு மாதமும் வரும் பௌர்ணமி தினங்களுக்கும் ஒவ்வொரு சிறப்புகள் உண்டு. பௌர்ணமி என்பது முழு நிலவு வானில் பிரகாசமாகத் தோன்றும் அற்புத நாள். இந்த நாளில் நல்ல அதிர்வலைகள் ஏற்படும். அப்பேர்ப்பட்ட சக்தி மிகுந்த நாளில் கடவுளை வழிபாடு செய்வது தீய சக்தியிலிருந்து  நம்மைக் காக்கும். அதுவும் அம்மன் கோயில்களில் அன்று பௌர்ணமி பூஜை சிறப்பாக நடைபெறும். அதில் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜை செய்தால் சகல நன்மைகளும் கிடைக்கும். பன்னிரண்டு தமிழ் மாத பௌர்ணமி தினங்களின் சிறப்புகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

சித்திரை மாத பௌர்ணமி: தமிழ் ஆண்டின் முதல் மாதமான சித்திரையில் வருவது சித்திரா பௌர்ணமி. இந்த உலகில் மனிதராகப் பிறந்த அனைவரின் செயல்களையும் சித்திரகுப்தன்தான் கணக்கு வைத்துக் கொள்வார் என்ற நம்பிக்கை உள்ளது. அந்த வகையில் சித்திரை மாதம் வரும் பௌர்ணமி சித்திரகுப்தனை வணங்கும் நாளாகும். சித்ரகுப்தனுக்கு அன்று பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம். மதுரையில் இந்த பௌர்ணமி மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படும்.

வைகாசி பௌர்ணமி: இந்த நாளில்தான் அரக்கன் சூரனை அடக்க முருகன் அவதரித்ததாக புராணங்கள் சொல்லுகின்றன. அது மட்டுமின்றி, இந்த தினமானது தீமைகளை அழித்து, நன்மை நிலைக்கச் செய்யும் என்பதை உறுதிப்படுத்தும் தினமாகக் கருதப்படுகிறது. திருச்செந்தூரில் இருக்கும் முருகன் கோயிலில் வைகாசி மாதம் வரும் பௌர்ணமி மிகவும் சிறப்பாக்க் கொண்டாடப்படும். திருச்செந்தூரின் அருகே இருக்கும் உவரி என்ற தலத்தில் வைகாசி மாதம் வரும் பௌர்ணமி மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படும். அனைத்து முருகன் கோயில்களிலும் வைகாசி விசாகம் பௌர்ணமி அன்று சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
ராவணன் மீண்டும் உயிர் பெற்று வருவானா?
Full moon Sri Annamalaiyar

ஆனி மாத பௌர்ணமி: ஆனி மாதம் வரும் மூலம் நட்சத்திரம் அன்று இந்த பௌர்ணமி வருவதால் அந்த நாளில் மா, பலா, வாழை உட்பட கனிகளைப் படைத்து இறைவனை வணங்குவது மிகவும் சிறப்பானதாகும். இந்த ஆனி பௌர்ணமி திருவையாற்றில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படும்.

ஆடி மாத பௌர்ணமி: ஆடி மாத பௌர்ணமி தினம் காக்கும் கடவுள் கலிவரதனுக்கு உகந்த நாள் ஆகும். இந்த ஆடி பௌர்ணமி காஞ்சிபுரத்தில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படும்.

ஆவணி மாத பௌர்ணமி: ஆவணி மாதம் வரும் பௌர்ணமி அவிட்டம் நட்சத்திரம் அன்று வருகிறது. இந்த நாளில்தான் ரக்ஷாபந்தன் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள்.

புரட்டாசி மாத பௌர்ணமி: இத்தினம் சிவசக்தியாக அருளும் உமாமகேஸ்வரரை வணங்குவதற்கான முக்கிய நாளாகும். இந்த நாளில் வீட்டில் விரதம் இருந்து சிவபெருமானை வழிபட்டு வந்தால், நெய் தீபங்கள் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட்டால் விசேஷ பலன்கள் கிடைக்கும்.

ஐப்பசி மாத பௌர்ணமி: ஐப்பசி மாத பௌர்ணமி அன்று லஷ்மி விரதமும், சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்வது மிகவும் சிறப்பாகும். இந்த பௌர்ணமியானது கங்கைகொண்ட சோழபுரத்தில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படும்.

கார்த்திகை மாத பௌர்ணமி: கார்த்திகை மாத பௌர்ணமியானது திருவிளக்கு தீபத் திருநாளாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில்தான் மும்மூர்த்திகளும் சேர்ந்து திருவிளையாடல் நடத்தினர். அது மட்டுமின்றி, திருவண்ணாமலையில் மலையே ஜோதிப்பிழம்பாக நின்று மக்களுக்கு அருளும் நாளாக இந்நாள் கருதப்படுகிறது. ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் திருவண்ணாமலைக்கு பக்தர்கள் கிரிவலம் செய்வது சிறப்பானதுதான். அதிலும் குறிப்பாக, கார்த்திகை மாத பௌர்ணமி அன்று திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது மிகவும் சிறப்பாகும்.

மார்கழி மாத பௌர்ணமி: மார்கழி மாத பௌர்ணமி திருவாதிரை நட்சத்திரத்தன்று வருகிறது. இந்த மாத பௌர்ணமி சிவனுக்கு உகந்தது. இந்த நாளில்தான் இறைவன் நடராஜராகக் காட்சி அளிக்கிறார். சிதம்பரத்தில் மார்கழி மாத பௌர்ணமி மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படும். உத்திரகோசமங்கையிலும் சிறப்பாகக் கொண்டாடப்படும்.

தை மாத பௌர்ணமி: தை மாதத்தில் வரும் பௌர்ணமி பூச நட்சத்திரத்தன்று வரும். மேலும், இந்த தை பௌர்ணமி மதுரை மற்றும் பழனியில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படும்.

இதையும் படியுங்கள்:
பிரம்ம முகூர்த்தத்திற்கு இணையான புண்ணியப் பலன்களைத் தரும் சந்தியா காலம்!
Full moon Sri Annamalaiyar

மாசி மாத பௌர்ணமி: மாசி மாத பௌர்ணமி மகம் நட்சத்திரத்தன்று வரும். இது மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாகக் கருதப்படுகிறது. இந்த பௌர்ணமியை கும்பகோணத்திலும் அலகாபாத்திலும் மிகச் சிறப்புடன் கொண்டாடுகிறார்கள். அது மட்டுமின்றி, எல்லா கோயில்களிலும் மாசி மகம் அனுசரிக்கப்படுகிறது. மேலும், இத்தினத்தில் புனித தலங்களில் நீராடி சிவனை வழிபட்டால் சகல பாவங்களும் நீங்கும்.

பங்குனி மாத பௌர்ணமி: பங்குனி மாத பௌர்ணமியானது உத்திரம் நட்சத்திரத்தன்று வருகிறது. இந்த நாளில்தான் சிவபெருமானுக்கும் அன்னை உமையவளுக்கும் திருமணம் நடந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. இந்த பங்குனி பௌர்ணமி பழனியில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும்.

பௌர்ணமி தினத்தில் கோயிலுக்குச் செல்வது, மலை மேல் ஏறி கிரி வலம் வருவது போன்ற விஷயங்களைச் செய்யும்போது நம் உடலில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். இதனால் மனதளவில் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். கோயிலுக்குச் செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே கூட இறை வழிபாடு மேற்கொள்ளலாம். எந்தக் கிழமையாக இருந்தாலும் பரவாயில்லை, பௌர்ணமி நாளில் வீட்டில் விளக்கு ஏற்றி வழிபடுங்கள். சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.

கார்த்திகை மாத பௌர்ணமியன்று வீட்டு வாசலில் நெய் விளக்கு ஏற்றி மாவிலை தோரணம் கட்டி அலங்காரம் செய்து சந்திர தரிசனம் செய்தால் சிறப்பான பலன்களைத் தரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com