
எத்தனை வெள்ளிக்கிழமைகள் வந்தாலும் ஆடி வெள்ளிக்கு என்று ஒரு தனி பெருமை உண்டு. அன்று ஆலயங்களில் அம்மன் சந்தன காப்பு அலங்காரத்தில் காட்சி அளிக்கும் கோலத்தைக் காண பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அன்றைய தினம் விரதம் இருந்து அம்பிகையை வழிபட்டால் அனைத்து இன்பங்களும் இல்லம் தேடி வந்துகொண்டே இருக்கும் என்பது நம்பிக்கையாகும்.
ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் காலை வாசல் தெளித்து மாக்கோலம் போட்டு அதில் காவியால் கோடிட்டு வாசலில் திருமகளே வருக என எழுதி பிறகு குளித்து முடித்துவிட்டு தூய ஆடை அணிந்து கொண்டு சாணத்தால் அல்லது மஞ்சளால் பிள்ளையார் பிடித்து செம்பருத்தி அல்லது செவ்வரளி உள்ளிட்ட மலர்களால் அலங்காரம் செய்து சூரிய உதயத்திற்கு முன்பு விநாயகரை பூஜை செய்ய வேண்டும். ஆடி மாத சிறப்பு பூஜைகள் செய்யும்போது அம்மனின் அவதாரமாக விளங்கக்கூடிய சிறு பெண் குழந்தைகளுக்கு புது துணி கொடுத்து, உணவு, வளையல் குங்குமச்சிமிழ், கண்ணாடி, சீப்பு, மருதாணி உள்ளவற்றை கொடுத்து அம்மனுக்கு பூஜை செய்வதனால் கேட்ட வரம் கிடைக்கும் என்பது ஐதீகமாகும். ஆடி வெள்ளிக்கிழமையன்று அம்மனுக்கு சர்க்கரை பொங்கல், பால் பாயசம் உள்ளிட்டவற்றை நெய்வேத்தியமாகப் படைத்து வழிபாடு செய்தால் வேண்டும் வரம் யாவும் கிட்டும்.
குத்துவிளக்கையே மகாலட்சுமியாக பாவித்து பூஜை செய்யலாம் அல்லது பத்மாசனமிட்ட பத்மாவதியான மகாலட்சுமியின் படம்தான் மிகவும் அருள் தருவதாகும். புது ரவிக்கையும் புடைவையும் தாயாருக்கு சாத்துவது மிகவும் நல்லது. செந்தாமரை மலர் இதழ்களை வெளியே வரச் செய்து மகாலட்சுமிக்கு சாத்துவது மிக மிக நல்லது. படத்திற்கு எதிரில் ஹிருதய கமலம் கோலம் போட வேண்டும். இதை கண்டிப்பாக அரிசி மாவினால்தான் போட வேண்டும். கோலத்தின் நடுவில் குங்குமம் மற்றும் மஞ்சள் இடவேண்டும்.
மலர்களால் மகாலட்சுமி படத்திற்கோ குத்துவிளத்திற்கோ பூஜை செய்து வழிபட வேண்டும். அவ்வாறு ஆடி வெள்ளியன்று வழிபட்டால் நிறைந்த செல்வம் இல்லம் தேடி வரும். ஆடி கடைசி வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உகந்த வரலட்சுமி விரதமாக இருப்பதால் அன்று மகாலட்சுமியையும் குத்து விளக்கையும் மலர்களால் பூஜை செய்வது மிக மிக சிறப்பாகும்.
லலிதா சஹஸ்ரநாமம், மகாலட்சுமி அஷ்டோத்திரம், ஸ்ரீ ஸ்துதி, கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி அஷ்டகம் போன்ற மகாலட்சுமிக்கு உகந்த அனைத்து துதிகளையும் பாடி மகாலட்சுமியை வழிபடுவது நமக்கு அனைத்து செல்வங்களையும் அள்ளித்தரும். ஆடி வெள்ளி பூஜையால் திருமணம் ஆகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் கூடி வரும். சுமங்கலிப் பெண்களுக்கு கணவனின் ஆயுள் அதிகரிக்கும். ஆடி வெள்ளிக்கிழமையில் செய்யப்படும் பூஜைகள் மற்றும் விரதங்களால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் செழிப்பும் உண்டாகும்.
திருமணம் தள்ளிப்போகும் கன்னிப்பெண்கள் ஆடி வெள்ளியில் அம்மனுக்கு எலுமிச்சை தீபம் ஏற்றினால் விரைவில் திருமண பாக்கியம் கிடைக்கும். ஆடி வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் அம்மன் ஆலயம் சென்று எலுமிச்சம் பழத்தை இரண்டு துண்டுகளாக்கி சாறு பிழிந்து அதன் உள்பாகம் வெளியே வரும்படி திருப்பி அதையே விளக்காக பாவித்து அதனுள் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இதனால் தோஷங்கள் யாவும் நீங்கி திருமண வரம் கைகூடும்.
ஆடி வெள்ளிக்கிழமையன்று பல பெண்கள் மாவிளக்கு ஏற்றுவார்கள். அம்மன் ஆலயங்களில் அரிசியை பதமாக அரைத்து மாவாக்கி இந்த அரிசி மாவுடன் நெய் கலந்து பிசைந்து உருண்டையாக்கி மேல் பாகத்தில் சிறிது குழி உருவாக்கி அதிலும் நெய் ஊற்றி ஏற்றப்படுவதே மாவிளக்காகும். ஆடி மாதம் வெள்ளிக்கிழமை அதிகாலை நீராடி, விளக்கேற்றி வழிபட வேண்டும். மாலை வேளையில் புதிய பூச்சாத்தி அம்மனுக்கு தாம்பூலம் படைத்து மாவிளக்கு ஏற்றி அம்மன் பாடல்கள் பாடி வீட்டிலேயும் வழிபடலாம். இல்லையென்றால் ஆலயத்திற்கு சென்று மாவிளக்கு ஏற்றியும் வழிபாடு செய்யலாம்.