
நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் திருத்தலத்தில் அருள்மிகு கோமதி அம்பாளின் தவக்கோலத்தினை தரிசிக்கலாம். சங்கரன்கோவிலில் ஆடித்தபசு திருவிழா ஆண்டு தோறும் ஆடி பௌர்ணமியில் கோலாகலமாக நடைபெறுகிறது.
சங்கன், பதுமன் என்ற நாக அசுரர்கள், ‘பக்தர்களுக்கு அருள்பாலிப்பதில் சிவபெருமான் உயர்ந்தவரா? அல்லது மகாவிஷ்ணு உயர்ந்தவரா’ என வாதித்து, இறுதி முடிவை கூறும்படி பார்வதி தேவியிடம் முறையிட்டனர். பார்வதி தேவி தனது சந்தேகத்தை ஈசனிடம் கேட்க, சிவபெருமான், பூலோகத்தில் உள்ள புன்னை வனத்தில் தவமிருந்தால் அதற்கான பதில் கிடைக்கும் என்று கூறினார். அதன்படி, அன்னை பார்வதி தேவி பூலோகத்தில் உள்ள புன்னை வனத்தில் அவதரித்து, ஒற்றை காலில் ஊசி முனையில் நின்று கடும் தவம் செய்தாள்.
அம்பிகையின் இந்தத் திருக்கோலத்தை தரிசிக்க தேவர்கள் பசுக்கள் வடிவில் வந்து இத்தலத்தில் தங்கினர். பசுக்களை 'ஆ' என்றும் 'கோ' என்றும் சொல்வர். ஆக்கள் தரிசித்ததால் இவள் ஆவுடையம்பாள் எனப்பட்டாள். பார்வதி தேவி பூமியில் அவதரித்ததால் அவளது திருமுகம் மதி போல் பிரகாசித்தது. இதனால் அமாவாசை எப்போது என்று கூட அறிய இயலாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக அம்பிகைக்கு கோமதி என்ற திருப்பெயரும் தேவர்களால் சூட்டப்பட்டது.
‘மதி’ என்றால் புத்தி என்று அர்த்தம். ஒரு ஊசி முனையின் மேல் ஒற்றை காலில் நிற்க வேண்டும் என்றால் எந்த அளவுக்கு புத்திசாலித்தனம் வேண்டும். இப்படி 'கோ' ஆக இருந்ததால் இவள் கோமதி எனப்பட்டாள். தவம் என்ற சொல்லை 'தபஸ்' என்றும் கூறுவர். இதுவே பேச்சு வழக்கில் தபசு மற்றும் தவசு என்று மாறிவிட்டது.
சிவனும் விஷ்ணுவும் இரண்டல்ல, ஒன்றே எனும் தத்துவத்தை உணர்த்துவதற்காக தவமிருந்த கோமதி அம்மனுக்கு, சங்கர நாராயணராகக் காட்சி கொடுக்கும் வைபவமே ஆடித்தபசு எனப்படுகிறது. இப்படி தவம் செய்த அம்பாளுக்கு, சிவபெருமான் சங்கரநாராயணராக திருக்காட்சி கொடுத்த மாதம் ஆடி மாதம் என்கிறது புராணம். இதைத்தான் ஆடித்தபசு என்று கொண்டாடுகிறோம்.
சைவமும் வைணவமும் பிளவு படக்கூடாது என்பதற்காக ஹரனும், ஹரியும் ஒன்று என்பதை உலகுக்கு உணர்த்தும் விதமாக இறைவன் 'சங்கரநாராயணராக' தோன்றிய அற்புதமான திருத்தலம் சங்கரன்கோவில், சங்கரநாராயணர் திருத்தலம். இக்கோயிலில் ஆடி மாத பௌர்ணமியன்று உத்திராட நட்சத்திரத்தில் ஆடித்தபசு விழா வெகு விமரிசையாக நடைபெறும்.
ஆடித்தபசு திருவிழா இத்தலத்தில் பன்னிரண்டு நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறும். ஆடித்தபசு அன்று காலையில் தங்க சப்பரத்தில் கோமதி அம்மன் எழுந்தருளி தவசு மண்டபத்திற்கு வந்தருள்வாள். மாலை 4 மணிக்கு ஈசன், சங்கரநாராயணராக வெள்ளி ரிஷப வாகனத்தில் தெற்கு ரத வீதியில் உள்ள காட்சி மண்டபப் பந்தலுக்கு வருகை தருவார். தொடர்ந்து அம்பாளும் காட்சி மண்டப பந்தலுக்கு வருகை தருவார். அங்கு அம்பாள் தனது வலது காலை உயர்த்தி, இடது காலால் நின்றவாறு தலையில் குடம் வைத்து, அதை இரு கைகளால் பிடித்தபடி தபசு கோலத்தில் காட்சி தருவாள்.
மாலை 6 மணிக்கு ஈசன், சங்கரநாராயணராக அம்பாளுக்குக் காட்சி தருவார். அப்போது பக்தர்கள் தங்கள் வயலில் விளைந்த நெல், பருத்தி, கம்பு, சோளம், பூ, மிளகாய் போன்றவற்றை சூறை விடுதல் என்ற பெயரில் அம்பாள் மீது வீசி எறிந்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.
அம்பாளின் தபசு காட்சி முடிந்த பிறகு அம்மன் மீண்டும் தவக்கோலம் பூண்டு பக்தர்களுக்குக் காட்சி கொடுப்பாள். ஏனென்றால், அம்பாளின் அண்ணன் மகாவிஷ்ணு இத்தலத்தில் சிவபெருமானின் ஒரு பாகத்தில் இருப்பதால் சங்கரநாராயணராக உள்ளார். ஈசனின் ஒரு பாதியில் அண்ணன் இருப்பதால் ஈசனை மணம் முடிக்க முடியாததால், மீண்டும் ஈசனை சென்று வேண்டி சங்கரலிங்கமாகக் காட்சி அருள வேண்டி தவக்கோலத்தில் இருப்பதாக ஐதீகம்.
இரவு 11.30 மணிக்கு சுவாமி கோயிலில் இருந்து வெள்ளி யானை வாகனத்தில் புறப்பட்டு காட்சி மண்டபத்தில் எழுந்தருளி சரியாக இரவு 12 மணிக்கு ஈசன், கோமதி அம்மனுக்கு சங்கரலிங்கமாகக் காட்சி கொடுக்கிறார். பிறகு அம்பாள் ஈசனுக்கு திருமண மாலை மாற்றி மணந்து கொள்கிறார். அதன் பின் சுவாமி, அம்பாள் ஊஞ்சல் சேவை நடைபெறும்.
இந்த ஆடித்தபசு விழாவை கண்டு வழிபட்டால் திருமண வரம் கூடிவரும். மங்கலகரமான வாழ்க்கை அமையும். கேட்ட வரங்கள் கிடைக்கும். தபசு விழாவை கண்டு அம்பாள், ஹரிஹரனை வழிபட்டால் அனைத்து அருளையும் பெறலாம்.