சிறுநீரகங்களுக்குள் அல்லது சிறுநீரகத்தின் மேல் உருவாகும் திரவத்தால் நிரப்பப்பட்ட பைகள் சிறுநீரக நீர்க்கட்டிகள் (Kidney Cysts) என்று சொல்லப்படுகின்றன. சிறுநீரக நீர்க்கட்டிகள் மிகவும் பொதுவானவை; குறிப்பாக வயதாகும் போது, இக்கட்டிகள் உருவாக்கம் பெற்றுவிடுகின்றன.
இந்த நீர்க்கட்டிகள் எளிமையானவை மற்றும் தீங்கற்றவை. அதாவது, அவை எந்தத் தீங்கும் ஏற்படுத்தாது அல்லது சிறுநீரகச் செயல்பாட்டைப் பாதிக்காது. இருப்பினும், சிக்கலான நீர்க்கட்டிகள் அல்லது பெரிதாகும் நீர்க்கட்டிகள் சிறுநீரக செயல்பாட்டைப் பாதிக்கும் என்பதால் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
பெரும்பாலான வேளைகளில், சிறுநீரக நீர்க்கட்டிகள் குறிப்பிடத்தக்க அறிகுறிகளை ஏற்படுத்துவதில்லை. தொடர்பில்லாத நிலைமைகளுக்கான இயல்நிலை வரைவுச் (Imaging) சோதனைகளின் போது, நீர்க்கட்டிகள் இருப்பது கண்டறியப்படுகிறது. இருப்பினும், மேல் வயிறு அல்லது முதுகில் மந்தமான வலி, தொற்று, காய்ச்சல், சிறுநீர் பாதையை அடைப்பதால் சிறுநீர் ஓட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவற்றை அறிகுறிகளாகக் கொள்ள முடியும்.
சிறுநீரக நீர்க்கட்டிகள் யாருக்கும் ஏற்படலாம் என்றாலும், சில ஆபத்துக் காரணிகள் அவை உருவாகும் வாய்ப்பை அதிகரிக்கக்கூடும். குறிப்பாக,
50 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்களுக்கு சிறுநீரக நீர்க்கட்டிகள் அதிகம் காணப்படுகின்றன.
பெண்களை விட ஆண்களுக்கு சிறுநீரக நீர்க்கட்டிகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
சிறுநீரக நீர்க்கட்டிகள் அல்லது பாலிசிஸ்டிக் சிறுநீரக நோயின் குடும்ப வரலாறு ஆபத்தை அதிகரிக்கிறது.
வான் ஹிப்பல் லிண்டாவ் நோய் போன்ற சில மரபணு கோளாறுகள் சிறுநீரக நீர்க்கட்டிகள் உருவாகும் அபாயத்தை அதிகரிக்கின்றன.
புகைப்பிடித்தல் சிறுநீரக நீர்க்கட்டிகள் அதிகரிக்கும் அபாயத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
சிறுநீரக நீர்க்கட்டிகளை துல்லியமாகக் கண்டறிய, அல்ட்ராசவுண்ட், கம்ப்யூட்டட் டோமோகிராபி (CT) ஸ்கேன் அல்லது காந்த அதிர்வு இமேஜிங் (MRI) ஆகிய இயல்நிலை வரைவுச் சோதனைகள் மூலம் நீர்க்கட்டிகளையும், அவற்றின் அளவு மற்றும் பண்புகளையும் மதிப்பிட முடியும். சிறுநீரகச் செயல்பாட்டை மதிப்பிடுவதற்கும், அறிகுறிகளுக்கான பிற சாத்தியமான காரணங்களை நிராகரிப்பதற்கும் இரத்தப் பரிசோதனைகள் நடத்தப்படலாம்.
ஒரு எளிய சிறுநீரக நீர்க்கட்டுக்கு பொதுவாகச் சிகிச்சை தேவையில்லை. மேலும் அறிகுறிகள் அல்லது சிக்கல்கள் ஏற்பட்டால்,
நீர்க்கட்டியிலிருந்து திரவத்தை வெளியேற்ற ஒரு மெல்லிய ஊசி பயன்படுத்தப்படுகிறது. இது அறிகுறிகளைப் போக்கவும் அதன் அளவைக் குறைக்கவும் பயன்படுகிறது.
நீர்க்கட்டியை சுருக்கி மீண்டும் வருவதைத் தடுக்க ஒரு ஸ்க்லரோசிங் முகவர் நீர்க்கட்டியில் செலுத்தப்படுகிறது.
நீர்க்கட்டி பெரியதாக இருந்தால், கடுமையான அறிகுறிகளை ஏற்படுத்தினால், அல்லது வீரியம் மிக்க கட்டிகள் குறித்த கவலைகளை எழுப்பினால், லேப்ராஸ்கோப்பிக் அறுவை சிகிச்சை மூலம் அகற்றுதல் அவசியமாக இருக்கலாம்.
சிறுநீரக நீர்க்கட்டிகள் வராமல் தடுக்க என்ன செய்யலாம்?
சிறுநீரக ஆரோக்கியம் முக்கியமானது. குணப்படுத்துவதை விட தடுப்பு சிறந்தது என்பதால், சிறுநீரக நீர்க்கட்டிகள் வராமல் தடுக்க உதவும் சில தடுப்புக் குறிப்புகளை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். குறிப்பாக,
போதுமான அளவு தண்ணீர் குடித்தல்
ஆரோக்கியமான உணவைப் பராமரித்தல்
வாழ்க்கை முறையில் ஆரோக்கியமான மாற்றங்களைச் செய்தல்
வழக்கமான உடற்பயிற்சியில் ஈடுபடுதல்
இரத்த அழுத்தத்தை நிர்வகித்தல்
மது மற்றும் காஃபின் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துதல்
புகைபிடிப்பதைத் தவிர்ப்பது
நீரிழிவு நோயை நிர்வகித்தல்
உயர் இரத்த அழுத்தத்திற்குச் சிகிச்சையளித்தல்
நாள்பட்ட சிறுநீரக நோயைக் கண்காணித்தல் மற்றும் சிகிச்சையளித்தல்
தொடர்ந்து உடல்நலப் பரிசோதனைகளை மேற்கொண்டால், ஆரம்பகால நோயறிதலுக்கு உதவும். மேலும், அதனால் வரும் சிக்கல்களையும் நீங்கள் தடுக்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.
முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்.