
மரங்களில் இருந்து வெளிப்படும் அதிர்வுகளால் நோய்கள் தீரும். மனம் அமைதியும், மகிழ்ச்சியும் அடையும். இந்த உண்மையை உணர்ந்துதான் நம் முன்னோர்கள் ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு வகையான மரங்களை தல விருட்சமாக வைத்துள்ளனர். இதனால் மண்ணும் மக்களும் பயன் பெற வேண்டும் என்று சமூகத்திற்கு நன்மையை அளிக்கும் விருட்சங்களை நம் முன்னோர்கள் ஆலயங்களில் அமைத்துப் போற்றி வழிபடவும் செய்தார்கள். மரங்களின் மகத்துவம் அறிந்த நம் முன்னோர்கள் அவை கோயில்களிலாவது பாதுகாக்கப்பட வேண்டும் என்ற உணர்வில் இறைவனின் பெயரைச் சொல்லி மரங்களுக்கு மகத்துவம் அளித்தனர்.
விருட்சம் என்பது மரத்தைக் குறிக்கும். மரங்களிலும் கடவுள் தன்மை உண்டு என்பதைச் சொல்லி, அந்த மரத்தின் நலன்களை தலைமுறை தாண்டி கொண்டு செல்லவும் தல விருட்சங்கள் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு மரத்திற்கும் ஒவ்வொரு விதமான மருத்துவ குணங்கள் உண்டு. அவற்றை மக்களுக்கு உணர்த்தவே இவ்வாறு செய்யப்பட்டன.
எத்தனை எத்தனை மரங்களை நம் சுயநலத்திற்காக வெட்டி வீழ்த்திக் கொண்டிருக்கிறோம். வழிபாட்டுத் தலங்களிலாவது மரங்கள் இருக்கிறதே என்று சந்தோஷப்பட வேண்டிய நிலையில் இருக்கிறோம். மரங்களை வெட்டுவது மனித சமுதாயத்திற்கு இழப்பை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து அவற்றைப் போற்றிப் பாதுகாத்து வளர்க்க வேண்டும். இயற்கையை வணங்குவதும், ஆராதிப்பதும் என நம் முன்னோர்கள் செய்த இச்செயலை பாராட்டாமல் இருக்க முடியாது.
ஒவ்வொரு கோயிலிலும் தல விருட்சம் என தனித்துவத்துடன் விளங்கும் பசுமையான மரங்களும், அவற்றைப் பேணி வளர்ப்பதால் நாட்டில் மழை வளம் பெருகும் என்பதை உணர்த்தவே தல விருட்சமாக ஒவ்வொரு கோயில்களிலும் ஒவ்வொரு விதமான மரங்கள் வளர்க்கப்பட்டன. மருத்துவ குணங்கள் நிறைந்த வில்வம் ஈசன் கோயிலிலும், வன்னி மரம் பெருமாள் கோயில்களிலும் வளர்க்கப்பட்டன. இம்மரங்களின் கீழ் அமர்ந்து தியானம் செய்ய எளிதாக அது கைகூடும். மனம் எளிதில் வசப்படும். மகிழ மரம் குளிர்ந்த நிழலையும், மணம் கமழும் மலர்களையும் கொண்டது.
சந்தன மரம் மற்றும் அத்தி மரம் மகாவிஷ்ணுவின் அம்சமாகப் போற்றப்படுகிறது. ஸ்ரீவாஞ்சியத்தின் தல மரம் சந்தன மரம். காஞ்சி வரதர் அத்தி மரத்தால் ஆனவர். மயிலாடுதுறையை அடுத்துள்ள கோழிக்குத்தி வானமுட்டிப் பெருமாள் அத்தி மரத்தால் ஆன 14 அடி உயரமுள்ள பெரிய பெருமாளாகும். மகாலட்சுமி அம்சமான நெல்லி மரம், மாதுளை, மருதாணி போன்றவை சுப காரியங்களில் பயன்படுத்தப்படுகிறது. நெல்லி மரத்தின் கீழ் நின்று தானம் செய்ய தானம் செய்பவர்களுடைய பாவங்கள் அனைத்தும் நீங்கும் என்றும் கூறப்படுகிறது.
மருத்துவ குணங்கள் நிறைந்த வேப்ப மரம் சக்தியின் அம்சமாகப் போற்றப்படுகிறது. திருச்செங்கோடு போன்ற திருத்தலங்களில் இலுப்பை மரம் தல விருட்சமாக விளங்குகிறது. மருத மரமும் கொன்றை மரமும் தமிழகத்திற்கே உரித்தான மரங்கள். ஆனால், அவற்றை கோயில்களைத் தவிர பிற இடங்களில் பார்ப்பது அரிதாகி வருகின்றது. நாகலிங்க மரம் சுற்றுப்புறக் காற்றில் உள்ள தூசியை வடிகட்டி தூய்மையாக்கும் தன்மை உடையது. மனிதர்கள், விலங்குகள் என அனைத்து உயிரினங்களுக்கும் நிழல் தரும் மரங்கள் பறவைகளின் சரணாலயமாகவும் விளங்குகின்றன.
மரங்களை அதன் புனிதங்களைக் கருதி பாதுகாப்பது அவசியம். மரங்கள் பாதுகாக்கப்பட்டால் அப்பகுதிகள் செழித்திருக்கும். மழை வளம் பெருகும். சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும்.