உடலை எந்த நேரமும் நீரேற்றத்துடன் வைத்திருப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம். இதைப் பெறுவதற்கு தண்ணீர்தான் அருந்த வேண்டும் என்ற அவசியமில்லை. பிளைன் வாட்டர் மட்டும் குடித்து உடலில் நீர்ச்சத்தை நிரப்புவதற்குப் பதில் நீர்ச்சத்துடன் மேலும் பல ஊட்டச் சத்துக்களையும் தரக்கூடிய மற்ற 5 வகை உணவுகள் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. மூலிகை உணவுகள்: பெப்பர்மின்ட் மற்றும் கெமோமைல் (Chamomile) போன்ற மூலிகைகளில் டீ போட்டு அருந்தலாம். இந்த டீயை சூடாகவோ குளிர்வித்தோ அருந்தும்போது அதிலிருந்து நீர்ச்சத்தோடு மேலும் பல நன்மைகளும் கிடைக்கும். காஃபின் இல்லாத பானமாக இது இருப்பதால் இதை தாராளமாக தண்ணீருக்குப் பதிலாக உபயோகிக்கலாம்.
2. இளநீர்: இளநீரில் எலக்ட்ரோலைட்கள் அதிகம். இதிலுள்ள இயற்கையான இனிப்புச் சுவை இளநீரை ரசித்து ருசிக்கத் தூண்டும். உடலிலிருந்து வெளியேறும் நீரை சிறந்த முறையில் இட்டு நிரப்பக்கூடிய அற்புதமான பானம் இது.
3. இன்ஃப்யூஸ்ட் வாட்டர் (Infused water): தண்ணீரில் ஒரு துண்டு எலுமிச்சை, வெள்ளரி, ஆரஞ்சு, பீட்ரூட், புதினா போன்ற ஏதாவதொரு காய், பழம் அல்லது மூலிகையைப் போட்டு ஊற வைத்து அந்த நீரை அருந்துவதால் நீருக்கு சுவையும் மணமும் கிடைத்து தண்ணீர் குடிப்பதை ஒரு சுகானுபவமாக மாற்றும்.
4. ஃபிரஷ் ஃபுரூட்ஸ்: வாட்டர் மெலன், ஸ்ட்ராபெரி, ஆரஞ்சு, பப்பாளி போன்ற பழங்களில் நீர்ச்சத்து அதிகம். இவற்றை ஃபிரஷ்ஷாக உண்ணும்போது உடலுக்கு நீர்ச்சத்தோடு பல வைட்டமின் சத்துக்களும் கிடைக்கும்.
5. வெஜிடபிள் ஸ்டிக்ஸ் (Sticks): வெள்ளரி மற்றும் செலரி போன்ற காய்களில் அதிகளவில் நீர்ச்சத்தோடு ஊட்டச் சத்துக்களும் உண்டு. இவற்றில் கலோரி அளவும் குறைவு. இவற்றைத் துண்டுகளாக நறுக்கி குச்சிகளில் செருகி ஸ்நாக்ஸாக உண்ணும்போது உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். மேலும், உடலில் நீர்ச்சத்தின் அளவு குறையாமல் பாதுகாக்கவும் இது உதவும்.
உங்களுக்கு தாகம் எடுக்கும்போது தண்ணீரை மட்டும் குடித்துக் கொண்டிராமல் மேற்கூறிய முறையைப் பின்பற்றி சில காய்கறிகள் மற்றும் பழங்களின் சத்துக்களும் உடலில் சேரும்படி பார்த்துக்கொண்டால் ஆரோக்கியம் மேம்படும்.