மார்கழி மாதத்தில் பாவை நோன்பு கடைபிடிக்கப்படுகிறது. மனிதர்களுக்கு ஒரு ஆண்டு என்பது தேவர்களுக்கு ஒரு நாளாகும். இந்த ஒரு நாளின் வைகறை பொழுதாக பிரம்ம முகூர்த்தத்தில் உருவாவதனால் மார்கழி விசேஷமான மாதமாக போற்றப்படுகிறது. பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக திகழ்ந்த ஆண்டாள் நாச்சியார், பெருமாள் மீது கொண்ட அதீத பக்தியால் அவரையே தனது கணவனாக அடைய விரும்பினாள். கண்ணனை மணக்க வேண்டி மார்கழி மாதத்தில் பாவை நோன்பிருந்த ஆண்டாளுக்கு அருள்புரிந்த பெருமாள் பங்குனி உத்திரத்தில் ஆண்டாளை மணந்து கொண்டார். பெண்கள் பாவை நோன்பு இருந்தால் விரும்பிய கணவன் கிடைப்பார் என்பது நம்பிக்கை.
ஆயர்பாடியில் கோபியர்கள் மார்கழி மாதத்தின் அதிகாலையில் ஆற்றிற்கு சென்று நீராடி, மண்ணால் செய்த காத்யாயனி தேவியை வழிபட்டு தங்களுக்கு நல்ல கணவன் கிடைக்க வழிபாடு நடத்தினர். கண் நிறைந்த கணவன் வேண்டும் என்று விரும்பிய பெண்கள், பாவை நோன்பை கடைபிடித்தால் அந்த ஆசை நிறைவேறும்.
பாவை நோன்பு பெண்கள் எடுக்கும் நோன்பாகும். கண்ணனை மனத்தில் வரித்த ஆண்டாள், தன்னை ஆயர்பாடி பெண்களில் ஒருத்தியாக பாவித்துக் கொள்கின்றாள். ஸ்ரீவில்லிபுத்தூரை வடபெருங்கோயில் நந்தகோபர் மாளிகையாகவும் அங்கு எழுந்தருளி இருக்கும் இறைவனை கிருஷ்ணனாகவும் பாவித்து இடைப் பெண்கள் நோற்ற நோன்பை நோற்கின்றாள்.
ஆண்டாள் பாவை நோன்பின்போது நெய், பால் முதலியவற்றை உண்ணாமலும் கண்ணுக்கு மையிடாமல், தலையில் மலர் சூடாமல், புற அழகில் நாட்டம் செலுத்தாமல் இறை நாட்டத்தில் மட்டும் மனதினை செலுத்தி பாவை நோன்பினை மேற்கொண்டாள்.
மார்கழி நோன்பு முழுக்க முழுக்க கன்னிப் பெண்களுக்கு உரியது. மார்கழி மாதத்தில் முக்கியமாக பெண்கள் இருக்கும் விரதம் மார்கழி நோன்பாகும். ஆயர்பாடியில் உள்ள கன்னியர்கள் நாட்டு முன்னேற்றத்திற்காகவும், பால் வளம் பெருகவும், நல்ல கணவரை அடையவும் இந்த நோன்பைக் கடைபிடித்ததாகக் கூறப்படுகிறது.
கன்னிப் பெண்கள் அதிகாலையில் எழுந்து மற்ற பெண்களையும் எழுப்பி ஆற்றங்கரை சென்று அங்குள்ள மணலால் பாவை போன்ற உருவம் செய்து மலர்கள் சூட்டி வைணவ கன்னியர்கள் கௌரி தேவியாவும், சைவ கன்னியர்கள் பார்வதி தேவியாகவும் பாடி துதித்து வழிபட்டனர். பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒரே பெண்மணியான ஆண்டாள் இயற்றிய பாவை பாடல் இறைவன் மீது பாடப்பட்ட பாடல்கள். திருப்பாவையும் மாணிக்கவாசகர் சிவபெருமான் மீது இயற்றிய திருவெம்பாவையும் பாவை பாட்டுகளில் முக்கியமானவை.
மார்கழி மாதம் உஷத் காலத்தை வைகறை பொழுது என்றும் கூறுவர். இந்த மாதத்தில் யார் விடியற்காலை எழுந்து பக்தியுடன் பகவானை தொழுகிறார்களோ அவர்கள் சகல சௌபாக்கியங்களையும் பெறுவதோடு, ஆண்டாளின் அருளுக்கும் பாத்திரமாவார்கள்.
மேலும், இதன் மூலம் உள்ளத்தையும் உடலையும் தூய்மையாக்கிக் கொள்ள முடியும். அது மட்டுமின்றி, மார்கழி மாத நோன்பு நமது பிறவிப் பயனே ஆண்டவனை அடைவதுதான் என்பதை உணர்த்துகிறது. தெய்வமே எங்களுக்கு நல்ல கணவனை கொடு என்பதுதான் கன்னிப் பெண்களின் பிரார்த்தனையாக இருக்கும். பாவை நோன்பு இருக்கும் பெண்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கும். மார்கழி மாத பாவை நோன்பினை ஆண்டாள் நோற்றது போல கன்னிப் பெண்கள் இந்த நோன்பை நோற்று நல்ல கணவனைப் பெறலாம்.