
இந்து மதக் கடவுளர்களை வணங்குவதை ஆறு வகைகளாகப் பிரித்துப் பெயரிட்டார் ஆதிசங்கரர். அவை காணாபத்தியர், சைவர், வைணவர், சாக்தர், கௌமாரர், சௌராஷ்டிரர் என ஆறு வகையினர்ஆவர். இதில் கணபதியை முழுமுதற் கடவுளாக வணங்கிடுவோர் காணாபத்தியர் என்றும், அம்மதப் பிரிவிற்கு காணாபத்தியம் என்றும் பெயரிட்டார். அனைத்திலும் இறைமையைக் காணுகின்ற இந்து மதம் யானை வடிவுடைய கணபதி வழிபாட்டையும் கொண்டுள்ளது போற்றத்தக்க சிறப்புடையதாகும்.
இந்திரன், சூரபதுமனுக்கு பயந்து மூங்கில் மரமாக சீர்காழியில் நின்றான். நீர் இல்லாமல் வாடிய தோட்டத்திற்கு நீர் விடும் வகையில் விநாயகர் காக்கை வடிவெடுத்து, அகத்திய முனிவர் வைத்திருந்த கமண்டலத்தை கவிழ்த்து நீர் தரையில் ஓடுமாறு செய்தார். அந்த நீர் தரையில் ஓடி, இந்திரன் மூங்கில் மரமாக நின்ற இடத்திற்குச் சென்றது. இதனால் இந்திரன் காப்பாற்றப்பட்டான். ஆகையால், சீர்காழிக்கு ‘வேணுபுரம்’ என்ற மற்றொரு பெயரும் உண்டு.
வியாசர் பெருமான் மகாபாரதத்தை கூறியபோது அதனை விநாயகர் தனது தந்தம் ஒன்றை உடைத்து மேரு மலையில் எழுதினார் என்பது ஒரு நம்பிக்கை. அதனால் விநாயகருக்கு ஒரு தந்தம் மட்டுமே இருப்பதாகவும் சொல்லப்படுவதுண்டு. இதனால் விநாயகருக்கு, 'ஏகதந்தர்' எந்த பெயரும் உண்டாயிற்று. இதனால் விநாயகரை, 'ஏக தந்தாய வித்மஹே' என்று கூறி வழிபடுவர்.
நம் அறிவை எப்போதும் ஆணவ மலம் மறைத்துக் கொண்டிருக்கிறது. ஆணவ மலம் நீங்கினால்தான் அறிவு பிரகாசிக்கும். தேங்காயில் குடுமி மற்றும் கண்கள் இருப்பது நம் தலையைக் குறிப்பது போன்றது. தேங்காயைச் சுற்றியுள்ள நார் அறிவை சூழ்ந்துள்ள ஆணவ மலத்தைக் காட்டுகிறது. ஆணவ மலத்தை நீக்கி அறிவைப் பிரகாசிக்கச் செய்ய வேண்டும் என்று இறைவனை கேட்பதே தேங்காய் உடைப்பதன் தத்துவமாகும். எனவே, ஆணவம் என்று கூறக்கூடிய 'நான், எனது’ என்று கூறிடும் இறுமாப்பு நீக்கமே தேங்காய் உடைப்பதன் தத்துவமாகும் என்று கூறியுள்ளார்கள்.
திரிபுரம் எரிக்கச் சென்ற சிவன், விநாயகரை வணங்கிச் செல்லாததால் சிவபெருமானின் தேர் அச்சு முறிந்தது. பின்னர் விநாயகருக்காக தேங்காய் உடைத்து விட்டு பின்பு போருக்கு தேரில் சென்றதால் விநாயகருக்கு தேங்காய் உடைக்கும் பழக்கம் ஏற்பட்டது என்றும் கூறப்படுகிறது. இதிலிருந்து சிதறுகாய் உடைக்கும் வழக்கமும் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
கணபதிக்கு சாதனை, அறிவு இரண்டும் சிறப்புப் பண்புகள் ஆகும். அதனால் இவ்விரண்டில் சாதனையை சித்தி என்றும், அறிவை புத்தி என்றும் உருவகித்தனர். பொதுவாக, தென்னிந்தியாவில் கணபதியை திருமணமாகாதவராகவே கொண்டாடுகின்றனர் என்றாலும், திருவலஞ்சுழியில் விநாயகர் வாணி, கமலி என்ற இரு மனைவியருடன் காட்சி தருகிறார்.
நாகப்பட்டினத்தில் உள்ள நீலாயத்தாட்சி அம்மன் கோயிலில் பஞ்சமுக விநாயகர் உள்ளார். சிதம்பரம் ஆயிரம் கால் மண்டபத்தில் வெண்ணையுடன் தொடர்புப்படுத்தி நவநீத கணபதி வணங்கப்படுகிறார். திருச்சி மலைக்கோட்டை விநாயகர் கோயில் மிகப்புகழ் மிக்கது. சுவாமி மலையில் விநாயகரின் துதிக்கை வடக்கு நோக்கி வளைந்திருக்கும். கடல் நுரையினால் ஆன இச்சிலைக்கு ‘வலஞ்சுழி விநாயகர்’ என்று பெயர். கோயிலும் 'திருவலஞ்சுழி' என்றே அழைக்கப்படுகிறது. பாறைகளுக்கு இடையில் மிகப்பெரிய அளவில் பிள்ளையார்பட்டி விநாயகர் காணக் கண் கோடி காட்சி தந்து நம்மை ஆட்சி செய்து கொண்டு இருக்கிறார்.
தமிழகத்தில் எல்லா பண்டிகைக்கும் முன்பு மஞ்சளில், சாணத்தில் என்று பிள்ளையார் பிடித்து வைத்து அருகம்புல் செருகி வழிபாடு செய்த பின்னரே மற்ற தெய்வங்கள் வழிபடப்படுகிறார்கள். இதனால் அவருக்கு முழுமுதற் கடவுள் என்ற பெயர் ஏற்பட்டது. இப்படிச் செய்வதால், ‘விக்னம்’ என்று சொல்லக்கூடிய தடைகள் அனைத்தும் நீங்கி, தங்குத் தடையின்றி நாம் தொடங்கும் செயல்கள் வெற்றி பெறும் என்பதை உறுதியாக நம்புகின்றோம். அப்படி, ‘நம்பினோர் கெடுவதில்லை. இது நான்குமறைத் தீர்ப்பு’ என்பது உறுதி. வழிபடுவோம்; வழிவிடுவார் விநாயகர்!