
வைணவத் திருத்தலங்கள் 108 ஆகும். இவை அனைத்தையும் ஒருவர் தரிசிப்பது மிகவும் புண்ணியம். ஆனால், எல்லோராலும் 108 திவ்ய தேசங்களையும் தரிசிக்க முடியாது. அப்படிப்பட்டவர்கள் சிதம்பரம் அருகில் உள்ள காட்டுமன்னார்குடியில் உள்ள வீரநாராயண பெருமாளை தரிசிக்க, 108 திவ்ய தேசங்களையும் தரிசித்த பலன் கிட்டும். இத்தனைக்கும் இது 108 திவ்ய தேசத்தில் வராதது.
இத்தலம் நாதமுனிகள் என்ற வைணவ ஆசாரியரின் அவதாரத் தலமாகும். மிகவும் பெருமை பெற்ற திருத்தலம். நாலாயிர திவ்ய பிரபந்தம் கண்டெடுக்கப்பட்ட தலம். எனவே, முதலில் இந்தத் தலத்தை தரிசித்து விடுவது சிறந்தது. இந்த நாத முனிகள் நாலாயிர திவ்யப் பிரபந்தங்கள் அனைத்தையும் நம்மாழ்வாரின் திருவருளால் மீட்டு மக்களுக்கு வழங்கினார். இவரை முதல்வராகக் கொண்டே வைணவ ஆசார்யர்களின் பரம்பரை துவங்குகிறது. இந்த ஊரை ‘சதுர்வேதி மங்கலம்‘ என்று கல்வெட்டு குறிப்புகள் கூறுகின்றன.
பெருமாளுக்கும் பிராட்டிக்கும் திருமணம் நடைபெற்றபோது இது பெருமாளுக்கு சீராகக் கொடுக்கப்பட்ட ஊர். இத்தல பெருமாள் கோயில் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. வீரநாராயணன் என்ற முதலாம் பராந்தகன் இவ்வூரை அமைத்தார். இதன் அருகிலேயே வீராணம் ஏரி அமைந்துள்ளது. ஸ்ரீ மகாலக்ஷ்மியின் கரம் பிடிக்க பெருமாள் மன்னன் என்ற பெயரில் இங்கு வந்தார். மன்னனாக வந்து திசை காட்டிய இறைவன் என்பதால் காட்டு மன்னார் ஆனது.
ஜிரும்பன ராஜரிஷியின் பிரார்த்தனையின்படி மகாலக்ஷ்மி தாயார் இங்கு பிறந்தார். தாயார் திருமண வயதை அடைந்ததும் அவருக்கு சுயம்வரம் நடைபெற்றது. பகவான் நாராயணனே கருட வாகனத்தில் வந்து மன்னர்களை வீழ்த்தி, ஸ்ரீமகாலக்ஷ்மியின் கரம் பிடித்ததால் வீரம் காட்டிய வீர நாராயண பெருமாள் என்ற திருநாமம் ஏற்பட்டது.
மூலவர் வீரநாராயணன் பெருமாள், மதங்க முனிவரின் தவத்தை ஏற்று வீரநாராயணன் என்ற நாமத்தில் நின்ற திருக்கோலத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் காட்சி தருகிறார். கோயிலின் உள்ளே மதங்க முனிவர் காட்சி தருகிறார். நம்மாழ்வாரை வணங்கிய நிலையில் மதுரகவியாழ்வார் சன்னிதியை தரிசிக்கலாம்.
தவிர, நரசிம்மர், நாத முனிகள், ஆண்டாள் மற்றும் ஆஞ்சனேயர் சன்னிதிகளும் இக்கோயிலில் உள்ளன. இக்கோயில் உத்ஸவர் ராஜகோபாலன். தாயார் மரகதவல்லி. இவருக்குத் தனி சன்னிதி உண்டு. தீர்த்தம் வேத புஷ்கரணி. தல விருட்சம் நந்தியாவட்டை. இங்கு யோக நரசிம்மர் மற்றும் வராகரையும் தரிசிக்கலாம். இந்தத் தலத்து பெருமாளை தரிசித்தால் 108 திவ்ய தேச பெருமாள்களையும் தரிசித்த புண்ணியத்தைப் பெறலாம்.