
வேதாரண்யம் - திருவாரூர் சாலையில், திருத்துறைப்பூண்டி என்னும் ஊரில் உள்ளது பவ அடிஷதீசுஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தில் கஜசம்ஹார மூர்த்தி எழுந்தருளியுள்ளார். இம்மூர்த்தி மூன்று முகங்களுடன், (இரண்டு முகங்கள் பின்னால் இருப்பதாக ஐதீகம்) பத்து கரங்களுடன் காட்சி தருகிறார். முன்னிரு கரங்களால் உரித்த யானையின் தோலை விரித்து பிடித்துள்ளார். மற்ற வலது கரங்களில் மழு, சூலம், அம்பு, அபய முத்திரை ஆகியவற்றையும் இடது கரங்களில் சுட்டு முத்திரை, வில், தண்டம், உடுக்கை ஆகியவற்றையும் ஏந்தியுள்ளார்.
சிவபெருமான் அகோர பைரவராக வெளிப்பட்டு யானையை கிழித்தார் என்பதால் கோரைப்பற்களுடன் விரிந்த ஜடா மண்டலமும் கொண்டுள்ளார். ஜடையில் பாம்புகளும் சந்திரப் பிறையும் உள்ளன. நீண்ட மணிமாலையை அணிந்துள்ளார். இத்தகைய கஜ சம்ஹார மூர்த்தியை வேறு எங்கும் காண முடியாது.
இந்தக் கோயிலை, ‘பிறவி மருந்தீஸ்வரர் கோயில்’ என்றும் அழைப்பார்கள். இங்குள்ள இறைவனின் பெயர் பிறவி மருந்தீஸ்வரர். அம்பாள் பெரிய நாயகி. இது சோழர்கள் கட்டிய கோயில்களில் ஒன்று.
அரக்கர் குலத்தில் பிறந்த ஜல்லிகை என்ற பெண் சிறந்த சிவ பக்தையாக இருந்தாள். அவளுக்கு மனிதர்களை சாப்பிடும் விருபாட்சன் என்கிற அரக்கன் கணவனாக அமைந்தான். ஒரு சமயம் அந்தண சிறுவன் ஒருவன் தனது தந்தைக்கு சிராத்தம் செய்ய கங்கை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தான். அந்த சிறுவனை சாப்பிட விருபாட்சன் முயற்சித்தபோது, ‘அந்தணர்களைக் கொல்வது மிகவும் பாவமான செயல்’ என்று கூறி ஜல்லிகை தனது கணவன் விருபாட்சனை தடுத்தாள். ஆனால், அவளின் பேச்சை கேட்காத விருபாட்சன், அந்த அந்தண சிறுவனை கொன்று சாப்பிட்டான்.
அச்சிறுவனை சாப்பிட்ட சிறிது நேரத்தில் விஷம் ஏறி இறந்தான் விருபாட்சன். இதைக் கண்ட ஜல்லிகை தனது கணவன் கொடூரமான அரக்கன் என்றாலும், ‘அவனின்றி நான் உயிர் வாழ விரும்பவில்லை என்றும் இனி உலகில் அரக்க குணம் இல்லாத மனிதர்களைப் பிறக்கச் செய்ய வேண்டும்’ என அம்பாளிடம் வேண்டினாள். இதைக் கேட்ட பெரியநாயகி, ஜல்லிகையின் சிறந்த பதி பக்தியைப் போற்றி அவளது கணவன் விருபாட்சனை உயிர்ப்பித்ததோடு, அவன் உண்டு சாப்பிட்ட அந்தண சிறுவனையும் உயிர்ப்பித்தாள்.
மமதை கொண்ட சில முனிவர்கள் தங்களை சிவபெருமானும் திருமாலும் அவமானப்படுத்தியதாகக் கருதி அவர்களை அழிக்க யாகம் ஒன்றைச் செய்து அதிலிருந்து மிகப்பெரிய ஒரு யானையை வரவழைத்து அதை சிவன் பெருமாள் மீது ஏவினர். சிவபெருமான் அந்த யானையைக் கொன்று கஜ சம்ஹார மூர்த்தி என்கிற பெயரைப் பெற்றார். இந்தக் கோயிலின் இறைவன் மேற்கு நோக்கிக் காட்சி தருவதும் இங்கு சிவபெருமான் கஜ சம்ஹார மூர்த்தியாக அருளுவதும் இக்கோயிலின் விசேஷ அம்சங்கள்.
அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களின் திருமணத் தடை மற்றும் தாமதங்கள் நீங்கவும், கல்வி, பொருளாதாரத்தில் சிறந்து விளங்கவும் இந்தத் தலத்தில் வந்து வழிபடுவதால் விரும்பிய பலன்களைப் பெறலாம் என்பது ஐதீகம். இங்குள்ள சிவபெருமானை அமாவாசை, பௌர்ணமி தினங்களில் வழிபடுபவர்களுக்கு நோய் நொடிகள் இல்லாது போகும். பயம் என்பதே இல்லாது போகும்.