ஓணம் திருவிழா கொண்டாடப்படும் தமிழகத்தின் பெருமாள் கோயில்!

Tamil Nadu temple where Onam festival is celebrated
Ulagalandha Perumal, Thirukovilur
Published on

கேரளாவின் சிறப்புமிகு பண்டிகையான ஓணம் திருவிழாவை தமிழகத்தில் கொண்டாட விரும்பும் பக்தர்கள் விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் உலகளந்த பெருமாளை தரிசித்துக் கொண்டாடலாம். மகாபலி மன்னனை ஆட்கொள்ள வாமனராக வந்த பெருமாள், விஸ்வரூபம் எடுத்தார். இந்த விஸ்வரூபக் காட்சியை காண மிருகண்டு என்னும் முனிவருக்கு ஆவல் ஏற்பட்டது. அவர் பிரம்மாவிடம் இது பற்றிஆலோசனை கேட்க, ‘பூவுலகில் கிருஷ்ணபத்ரா நதிக்கரையில் உள்ள கிருஷ்ண க்ஷேத்திரத்தில் தவம் செய்தால் அந்த தரிசனம் கிடைக்கும்’ என்றார் பிரம்மா.

அதன்படி, முனிவர் தனது மனைவி மித்ராவதியுடன் இங்கு வந்து கடும் தவம் இருந்தார். அத்தலத்துக்கு வந்தோருக்கு அன்னதானத்தையும் அந்தத் தம்பதியர் அளித்து வந்தனர். ஒரு நாள் இவரை சோதிக்க விரும்பிய மகாவிஷ்ணு, வயோதிக அந்தணர் வடிவில் வந்து அன்னம் கேட்டார். அன்று அவர்களிடம் உணவு ஏதும் மிச்சம் இல்லை. மிருகண்டு முனிவர் தனது மனைவியிடம், வந்தவர்க்கு இல்லை என சொல்லாமல் ஏதாவது ஏற்பாடு செய்யும்படி கூறினர். வீட்டிலோ சமைப்பதற்கு ஏதும் இல்லை.

இதையும் படியுங்கள்:
சேலத்தில் ஒரு அயோத்தி: பட்டாபிஷேகக் கோலத்தில் ஸ்ரீராமர் முதலில் காட்சி தந்த திருத்தலம்!
Tamil Nadu temple where Onam festival is celebrated

கணவருக்கு சேவை செய்வதைத் தவிர வேறு ஏதும் அறியாத கற்பில் சிறந்த அந்த பெண்மணி, நாராயணனை நினைத்து ஒரு பாத்திரத்தை கையில் எடுத்தாள். ‘நான் கற்பில் சிறந்தவள் என்பது உண்மையானால் இந்தப் பாத்திரம் அன்னத்தால் நிரம்பட்டும்’ என்றாள். உடனடியாக அதில் அன்னம் நிரம்பியது. அப்போது அந்தணர் வடிவில் வந்த பெருமாள் அவர்களுக்கு தனது விசுவரூப தரிசனத்தைக் காட்டி அருளினார்.

பொதுவாக, மகாவிஷ்ணு தனது வலது கையில் சக்கரமும் இடது கையில் சங்கும் வைத்திருப்பார். ஆனால், இந்தத் தலத்தில் பெருமாள் மிருகண்டு முனிவரின் உபசரிப்பில் மகிழ்ந்து, தன்னை மறந்த நிலையில் வலது கையில் சங்கும் இடது கையில் சக்கரமும் ஏந்திய கோலத்தில் அருள்பாலிக்கிறார். இத்தல பெருமானின் திருநாமம் திரிவிக்கிரமர். இவருக்கு உலகளந்த பெருமாள், ஆயனார் இடைக்கழி ஆயன் என்ற திருநாமங்களும் உண்டு. தாயாருக்கு பூங்கோவல் நாச்சியார் என்ற திருநாமமும் உண்டு. உத்ஸவர் திருநாமம் கோபாலன்.

கருவறையில் பெருமாள் வலது காலால் ஆகாயத்தை அளந்தபடியும், இடது காலை பூமியில் ஊன்றியும் அருள்பாலிக்கிறார். தூக்கிய வலது திருவடிக்கு பிரம்மா ஆராதனை செய்கிறார். கீழே ஊன்றிய இடது திருவடிக்கு கீழ் மகாபலியின் மகன் நமச்சு மகாராஜா பூஜை செய்கிறார். பெருமாளின் வலது பக்கம் பிரகலாதன், மகாலட்சுமி, மகாபலி ஆகியோர் உள்ளனர். இடது பக்கம் அசுர குல குருவான சுக்ராச்சாரியார், மிருகண்டு மகரிஷி, அவரது மனைவி மித்திராவதி ஆகியோர் உள்ளனர். மூலவர் திருமேனி மரத்தாலானது. நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் உள்ள பெருமாள் சிலைகளில் மிக உயரமானது இதுவே.

இதையும் படியுங்கள்:
திரிசூல பூஜை: பகை விலக்கி, வாழ்வில் வெற்றி தரும் சிவ வழிபாடு!
Tamil Nadu temple where Onam festival is celebrated

பெருமாள் சன்னிதி எதிரே கருட தூண் ஒன்று உள்ளது. நாற்பது அடி உயரமுள்ள இந்த தூண் ஒரே கல்லில் செதுக்கப்பட்டது. அதன் மேல் பகுதியிலுள்ள சிறிய கோயில் காண்போரை வியப்பில் ஆழ்த்தும். தூணின் மேல்பகுதியில் கருடன் காட்சி தருகிறார். மூலவரின் பின்னால் வாமனன் காட்சி தருகிறார். திருவோணத்தன்று அவரை சந்தனக் காப்பு அலங்காரத்தில் தரிசிக்கலாம். கோயில் நுழைவு வாயிலின் வலது பக்கம் சாளக்ராம கிருஷ்ணர் அருள்பாலிக்கிறார். இவரை தரிசித்த பிறகுதான் மூலவரை தரிசனம் செய்ய வேண்டும் என்பது ஐதீகம்.

திருவோணம் பண்டிகையன்று காலை பத்து மணிக்கு சுவாமிக்கு விசேஷ திருமஞ்சனம், மாலை நாலு மணிக்கு வெண்ணை காப்பு, ஐந்து மணிக்கு தீப பிரதிஷ்டை, ஐந்தரை மணிக்கு ஆயிரத்தெட்டு தீபம், ஆறு மணிக்கு சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெறுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com