
சிவபெருமானுக்குரிய படைக்கலன்களில் முதன்மை பெற்றது சூலமாகும். அதன் தலைப்பகுதியில் கூர்மையான மூன்று பகுதிகளைக் கொண்டதால் இது, ‘திரிசூலம்’ என அழைக்கப்படுகிறது. இந்த திரிசூலம் உயிர்களின் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களை நீக்கி மோட்சம் தருகிறது. இது ஞானத்தை வழங்குவதாகவும் உள்ளது. அஸ்திரங்களுக்கெல்லாம் தலைவனாக இருப்பதால் இதை, ‘அஸ்திர ராஜன்’ என்றும் அழைப்பர். பகைவர்களை வென்று சுகமான வாழ்வும், ஞானத்தைப் பெற்று மகிழ்ச்சியாக வாழவும் திரிசூலத்தையே சிவபெருமானாகப் போற்றி பலரும் வழிபடுகின்றனர்.
திரிசூலத்தை வணங்கினால் கண்ணுக்குப் புலனாகாத பகை விலகும். பொன்னால் திரிசூலம் செய்து அதைச் சுற்றிலும் எட்டு ஆயுதங்களை நிலைப்படுத்தி, அஸ்திர பூஜை செய்வர். அத்தி மரத்தாலும், கருங்காலி மரத்தாலும் சூலங்கள் செய்து வழிபடுகின்றனர்.
மூலத்தின் மையத்தில் மூன்று கிளைகளில் சிவபெருமானையும், இடது கிளையில் திருமாலையும், வலது கிளையில் பிரம்ம தேவரையும், மூன்றும் கூடுமிடத்தில் வினாயகர், முருகன், வீரபத்திரர், சாத்தன் ஆகியோரையும், அதன் கீழுள்ள கண்டத்தில் ஏகாதசி ருத்திரர்களையும், அதன் கீழ் பாகத்தில் அஷ்ட மாத்ருகா, அஷ்ட லட்சுமிகளையும் பூஜிக்கின்றனர்.
திரிசூலம் பாதுகாப்பையும் செல்வத்தையும் அளிக்கிறது. அழிவிலிருந்து காப்பாற்றுகிறது. காசி நகருக்கு, ‘அவிமுக்தம்’ என்று பெயர் வழங்கப்படுகிறது. இதற்கு அழிவற்றது என்று பொருள். இத்தலத்தையே திரிசூலம் தாங்கிக் கொண்டிருப்பதாகப் புராணம் கூறுகின்றது. திரிசூலத்தை தனியாக வழிபடுவதை விட, சந்திரசேகரர் திருவுருவத்தில் சாத்தி வழிபடுவது சிறப்பு.
திரிசூல விரதம் சிறப்புடன் விளங்குகிறது. சிவாலயங்களில் திரிசூல தேவரே முதல் மூர்த்தியாக வழிபடப்படுகிறார். கொடியேற்றம், கொடியிறக்கம் ஆகியவை இவர் முன்பாகவே நடைபெறும். தீர்த்தவாரியில் மூழ்கி நீர் அளிப்பதும் இவரே. தினமும் பலி நாயகரைக் கொண்டு செய்யப்படும் பலி உத்ஸவம் பெருந்திருவிழாக்களில சூல தேவரை வைத்தே செய்யப்படுகின்றன. இதனை, ‘படைபலம் சேர்தல்’ என்பர்.
பெருந்திருவிழாக்களில் சுவாமி புறப்பாட்டுக்கு முன்பாகவே திரிசூலம் எடுத்துச் செல்லப்படுகிறது. சில ஆலயங்களில் திரிசூலத்தின் முன்புறம் உமாமகேஸ்வரன், அர்த்தநாரீஸ்வரர், ரிஷபாரூடர் வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கிராமிய தேர்வான பிடாரி ஆலயங்களிலும் திரிசூலமே படைக்கலனாக உள்ளது. அதன் நடுவில் காளியின் உருவம் பதிக்கப்படுகிறது. திரிசூலம் காவலின் சின்னமாக விளங்குகிறது.