

மகாலட்சுமி தாயார் பதினைந்து இடங்களில் தங்கியிருப்பதாக புராண நூல்கள் கூறுகின்றன. யானையின் முகம், பசுவின் பின்புறம், வாசமான வெண்மை மலர்கள், விளக்கு, சந்தனம், தாம்பூலம், கோமியம், கன்னிப்பெண்கள், அதிகம் பேசாதவர்கள், வேதம் ஓதிய உத்தமர்கள், உள்ளங்கை, குதிரை டமாரம், பசு மாட்டின் கால் தூசி, வேள்விப் புகை போன்றவற்றில் மகாலட்சுமி தாயார் தங்கி இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. மகாலட்சுமிக்கு பிடித்தமான மங்கலப் பொருட்கள் என்பவை மஞ்சள், குங்குமம், திருமண், சூர்ணம், எலுமிச்சை, துளசி, மாக்கோலம், மாவிலை தோரணம், உருவத்தை பிரதிபலிக்கும் கண்ணாடி, பூரண கும்பம், வில்வ இலை, நெல்லிக்கனி, செவ்வந்திப் பூ இவை எல்லாம் மகாலட்சுமி தாயாருக்குப் பிடித்தமான மங்கலப் பொருட்கள் ஆகும்.
பொதுவாக, ஸ்ரீ மகாலட்சுமி தாயார் எல்லா இடங்களிலும் தங்கி இருப்பதில்லை. அதற்கு நமக்கு பூர்வ புண்ணியம் வேண்டும். ஸ்ரீமன் நாராயணர் ஒரு சமயம் மகாலட்சுமி தாயாரோடு வீற்றிருக்கும்போது, தாயார் தங்கி இருக்கும் இடங்கள் குறித்து விவரிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
தாயார் அதற்கு, ‘அழகிய, எளிமையான தோற்றமுடைய பெண் எந்த வீட்டில் வசிக்கிறாளோ அங்கு தாம் தங்குவதாகவும், எங்கு வெண்மை நிறமுடைய மாடப்புறாக்கள் கூடு அமைத்து மகிழ்ச்சியோடு வாழ்கின்றனவோ அங்கு தாம் விருப்பமுடன் தங்குவதாகக் கூறுகிறாள்.
மேலும், சண்டை சச்சரவுகள் பிரச்னைகளை விரும்பாத பெண் எங்கு வசிக்கிறாளோ அங்கே தாம் விருப்பமுடன் தங்குவதாகவும் நெற்குவியல்களும் மற்ற தானியங்களும் எந்த இடத்தில் சிதறாமல் ஒழுங்காக குவிக்கப்பட்டுள்ளனவோ அங்கும், நன்றாகத் தீட்டப்பட்ட வெள்ளி மணி போன்ற அரிசி குவியல்கள் எங்கே இருக்கின்றதோ அங்கும், இனிய வார்த்தைகளால் அன்புடன் பேசி மற்றவர்களை மகிழ்விப்பவனுடைய இல்லங்களிலும், தான் உண்ணுகிற உணவை மற்றவருக்கும் எடுத்து வைத்து கொடுப்பவன் உள்ள இடத்திலும் தாம் வாசம் செய்வதாகக் கூறுகிறாள்.
சங்குகளில் சிறந்தது வலம்புரிச் சங்கு. இது இறைவழிபாட்டில் பலவாறு பயன்படுகிறது. இது இருக்கும் இடத்தில் மகாலட்சுமி தங்கி இருப்பாள். செல்வ வளமும் பெருகும். மலர் என்றாலே மகாலட்சுமி உறைகின்ற செந்தாமரை மலரையே குறிக்கும். கல்விக்கும் செல்வத்திற்கும் இதனை சின்னமாகப் போற்றுகின்றார்கள். ஸ்வஸ்திக் உலகளாவிய பழைமையான ஆன்மிக சின்னம். விநாயகருக்கும் மகாலட்சுமிக்கும் உரியது. மங்கலத்தின் அடையாளம்.
ஸ்வஸ்திக் வடிவம் எங்கு இருக்கிறதோ அங்கும் மகாலட்சுமி குடியிருப்பாள். மங்கலப் பொருட்கள் அனைத்திலுமே மகாலட்சுமி எப்போதும் தங்கி இருப்பாள். இறை வழிபாட்டிற்கும் மற்ற நல்ல காரியங்களுக்கும் முக்கியமாகத் தேவைப்படுவது மஞ்சள். அதனால்தான் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்தே நல்ல காரியங்கள் தொடங்குகின்றனர். அந்த மஞ்சளில் மகாலட்சுமி தாயார் குடியிருக்கிறாள். பொன் என்றாலே மகாலட்சுமிதான். அதனால்தான் பொற்காசுகளில் மகாலட்சுமி வடிவத்தைப் பதிக்கின்றனர். வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமி தாயாரை பூஜை செய்து வழிபடுபவருக்கு அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைத்து நிறைவான வாழ்க்கை வாழ்வார்கள்.