

மார்கழி மாதம் என்பது ஆன்மிக விழிப்புணர்வின் காலம். அந்த மார்கழியின் உயிராக விளங்குவது ஆண்டாள் அருளிய திருப்பாவை. இந்த பாசுரங்களுக்குள் ஆழமான ஆன்மிக ரகசியங்கள் மறைந்துள்ளன.
1. மார்கழி பிரம்ம முகூர்த்தத்தின் மாதம்: பகவத்கீதையில் கிருஷ்ணன் கூறுகிறார், ‘மாஸானாம் மார்கசீர்ஷோஹம்’ மாதங்களில் நான் மார்கழி. இந்த மாதம் முழுவதும் பிரம்ம முகூர்த்த சக்தி நிறைந்தது. திருப்பாவை பாசுரங்கள் அனைத்தும் உறங்கும் ஆன்மாவை எழுப்ப உருவாக்கப்பட்டவை.
2. ‘மார்கழி திங்களல்லவா’ மன எழுச்சி ரகசியம்: மனதில் அகந்தை குறையும் காலம். மதி கொஞ்சும் என்பது அறிவு தெளிவு பெறும் காலம். மனம் அமைதியாக இருந்தாலே இறை அனுபவம் சாத்தியம். இந்த வரி, ‘இப்போது ஆன்மிக சாதனைக்கு உகந்த நேரம்’ என்ற மறைமொழி.
3. வீடு வீடாக எழுப்புதல் சக்கர ரகசியம்: திருப்பாவையில் ஆண்டாள், தோழிகளை ஒன்றன் பின் ஒன்றாக எழுப்புகிறாள். இது மூலாதாரம் முதல் சகஸ்ராரம் வரை ஆறு சக்கரங்கள் விழித்தெழுவதைக் குறிக்கும்.
4. பசுக்கள் இந்திரிய ரகசியம்: திருப்பாவையில் வரும் ஆயர், பசு, தயிர், வெண்ணெய் எல்லாம் ஒவ்வொன்றின் குறியீடுகள். பசுக்கள் – ஐம்புலன்கள், பால் - தூய சிந்தனை, வெண்ணெய் - சுத்தமான பக்தி புலன்கள் அடக்கப்பட்டால்தான் இறை அருள் கிடைக்கும்.
5. நோன்பு விரதம் அல்ல, ஒழுக்கம்: ‘நெய்யுண்ணோம், பால் உண்ணோம்’ இது உணவைக் குறைப்பது அல்ல. ஆசை, அகங்காரம், இச்சை போன்றவற்றை விலக்குவதுதான் உண்மையான நோன்பு.
6. ‘நாராயணனே நமக்கே பரை தருவான் சரணாகதி தத்துவம்: இந்த வரி, திருப்பாவையின் இதயம். நான் செய்வேன் என்ற அகந்தை இல்லை. அவன் அருளே எல்லாம். இதுவே பிரபத்தி (சரணாகதி) தத்துவம்.
7. இறுதி பாசுரம் ஞான தீபம்: 30வது பாசுரம் சகஸ்ராரம் திறப்பு. அங்கு கோரிக்கை இல்லை, ஆசை இல்லை, பரிசு இல்லை. இறைவனே போதும் என்ற நிலை.
மார்கழி நோன்பின் அறிவியல் ரகசியம்:
அதிகாலை எழுதல்: மார்கழியில் சூரியன் தாமதமாக உதிக்கும்போதிலும், அதிகாலை 4 முதல் 6 மணி மனித உடலின் circadian rhythm மிகவும் சீரான நேரம். இந்த நேரத்தில் Melatonin (தூக்க ஹார்மோன்) குறைந்து Serotonin (மகிழ்ச்சி ஹார்மோன்) அதிகரிக்கிறது. மன தெளிவு, நினைவாற்றல், கவனம் மேம்படும்.
குளிர்ந்த நீரில் நீராடுதல்: மார்கழி குளிர், இரத்த நாளங்களைச் சுருக்கி பின்னர் விரிவடையச் செய்து ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை உயர்த்துகிறது. உடல் சோர்வை குறைக்கிறது. நரம்பு மண்டலத்தை சுறுசுறுப்பாக்குகிறது.
நோன்பு & குறைந்த உணவு: மார்கழி நோன்பில், அதிக இனிப்பு தவிர்த்து எளிய சத்தான உணவு தேவை. இதன் அறிவியல் விளைவு Insulin sensitivity மேம்பாடு, செரிமான அமைப்பு ஓய்வு, Autophagy (உடலின் செல்கள் தன்னைத்தானே சுத்தப்படுத்தும் செயல்முறை) தூண்டப்படுகிறது.
தரை மீது அமர்ந்து பாடல் / தியானம்: திருப்பாவை பாசுரங்கள் மென்மையான ஒலிப்பாடல் ஆதலால் Alpha & Theta brain waves அதிகரிப்பு. இதனால் மன அழுத்தம் குறைவு, தூக்க தரம் மேம்பட்டு உணர்ச்சி சமநிலை, கிடைக்கிறது.
குளிர்கால நோய் தடுப்பு: மார்கழியில் குளிர், ஈரப்பதம், வைரஸ் தாக்கம் அதிகம். நோன்பு + ஒழுங்கு உடல் வெப்ப நிலையை சீராக்குகிறது. நோய் எதிர்ப்பு அணுக்களைச் செயல்படுத்துகிறது.
சமூக ஒற்றுமை: குழுவாக கோயிலுக்குச் செல்லுதல், பாடல்கள் பாடுதல், ஒன்றாக நோன்பு இவற்றால் Oxytocin அதிகரிப்பு, தனிமை, மனச்சோர்வு குறையும்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அனுபவ அறிவால் உருவான இந்த மரபு, இன்று நவீன மருத்துவத்தாலும் உறுதிப்படுத்தப்படுகிறது.