

சிவபெருமானுக்குரிய மிக முக்கியமான விரத நாட்களில் திருக்கார்த்திகை திருநாளும் ஒன்று. கார்த்திகை மாதத்தில் கிருத்திகை நட்சத்திரத்தன்று ஈசனை வழிபட பாவங்கள் நீங்கும். இந்நாளில் அவல் பொரி, நெல் பொரி கொண்டு நிவேதனம் செய்வது வழக்கம். இதற்குக் கார்த்திகைப் பொரி என்றே பெயர். இது ஈசனுக்கு முக்கியமான நைவேத்தியப் பொருளாகக் கருதப்படுகிறது. மற்ற எந்த நாட்களிலும் இல்லாத தனிச்சிறப்பாக திருக்கார்த்திகை அன்று மட்டும் சிவபெருமானுக்கு நெல் பொரி, அவல்பொரி உருண்டைகள் செய்து நைவேத்தியமாகப் படைத்து வழிபடும் வழக்கம் உள்ளது.
புராணக் கதைகளின்படி பிரகலாதனின் பேரனான மகாபலி சக்கரவர்த்தி வெப்ப நோயால் பாதிக்கப்பட்டு கடும் துன்பங்களை அனுபவித்ததாகவும், அப்போது அதன் தாக்கத்திலிருந்து விடுபடுவதற்காக கார்த்திகை விரதம் இருந்து சிவபெருமானுக்கு பொரி படைத்து வழிபட்டதாகவும் கூறப்படுகிறது.
அதன் பலனாக அவர் தன்னுடைய வெப்ப நோயிலிருந்து விடுபட்டதாகவும், இதனால்தான் கார்த்திகை தீபத்திருநாள் அன்று நெல் பொரி, அவல் பொரி ஆகியவற்றுடன் வெல்லம் கலந்து ஈசனுக்கு படைத்து வழிபடும் வழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு நட்சத்திரம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. கார்த்திகை மாதத்தில் கிருத்திகை நட்சத்திரம் மிகவும் விசேஷம். செவ்வாய் ஆதிக்கம் மிகுந்த இந்த நாளில் முருகப்பெருமானையும் ஈசனையும் வழிபடுவது சிறந்த பலனைத் தரும். மேன்மையான கார்த்திகைப் பண்டிகையை மன மகிழ்ச்சியுடன் விளக்கேற்றி, பொரி பொரித்து வழிபடுவது சிறப்பு. அன்புக்கு வசப்படும் இறைவன் பொரிக்குள்ளும் தோன்றுவான் என்பதே இதன் தத்துவம். நெல் பொரி படைப்பது பிறவியை நீக்கும், பிறவாமையை குறிக்கும்.
திருக்கார்த்திகையில் பொரி படைப்பதற்கு முக்கியக் காரணம் சிவபெருமான் ஜோதி வடிவில் காட்சி தந்ததை நினைவு கூறும் விதமாக பொரி படையல் அளிப்பதாகும். கார்த்திகை பொரி என்பது வெண்மையான நெற்பொரி, தேங்காய்த் துருவல், வெல்லம் ஆகியவற்றை சேர்த்து செய்யப்படும் இனிப்பு உருண்டையாகும். நெற்பொரி வெண்ணீறு பூசிய சிவபெருமானை குறிக்கிறது.
வள்ளல் தன்மை கொண்ட மாவலியை குறிக்கும் தேங்காயும், தூய்மையின் அடையாளமான வெல்லமும் சேர்த்து செய்யப்படும் கார்த்திகை பொரியை தூய பக்தியுடன் இறைவனுக்கு சமர்ப்பிக்கும்பொழுது வாழ்வில் ஒளிமயம் ஏற்படும் என்று நம்பப்படுகிறது.
கார்த்திகைப் பொரி படைக்கக் கூறப்படும் மற்றொரு காரணம் சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளிப்பட்ட தீப்பொறியிலிருந்து தோன்றியவர்தான் முருகப்பெருமான். இந்த தீப்பொறிகள் ஆறு தாமரை மலர்களில் விழுந்து ஆறு குழந்தைகளாக தவழ்ந்தன. அவற்றை வளர்க்கும் பொறுப்பை கார்த்திகைப் பெண்கள் செய்தனர். தீப்பொரியிலிருந்து தோன்றிய முருகப்பெருமானின் அவதாரத்தை போற்றிக் கொண்டாடும் வகையிலேயே, அவர் அவதரித்த கார்த்திகை மாதத்தில் கார்த்திகை பொரி செய்து படைக்கும் வழக்கம் ஏற்பட்டது.