

தாய்லாந்து இன்று சுற்றுலா பயணிகளின் சொர்க்கமாக இருந்தாலும், பழங்காலத்தில் அது ஒரு ஆன்மிக பூமியாகத்தான் இருந்துள்ளது. தாய்லாந்து அதன் கலாசாரத்தின் வேர்களில் இந்து மதத்தின் தாக்கத்தை ஆழமாகக் கொண்டுள்ளது. தாய்லாந்தில் பல இந்து கோயில்கள் உள்ளன. அங்குள்ள பழைமையான கோயில்கள் கலாசார சின்னமாகத்தான் இருக்கின்றன. ஆயினும், அங்கு பக்தர்கள் வழிபடும் வகையில் ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில் மிகவும் பிரபலமான கோயிலாக உள்ளது. இந்தக் கோயில் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ளது. ஶ்ரீ மகாமாரியம்மன் பங்காங்கில் குடியேறி அந்த ஊர் மக்களை தனது அருட்பார்வையால் செழிப்பாக்குகிறாள்.
இந்தியாவில் பிரிட்டிஷ் கொடுங்கோல் ஆட்சி நடைபெற்றபோது பலரும் அடிமைத் தனத்திற்கு பயந்து பல நாடுகளுக்கு குடியேறினர். அவ்வாறு இந்தியர்கள் குடிபுகுந்த நாடுகளில் ஒன்றுதான் தாய்லாந்து. 1800களில் குஜராத்தி இரத்தின வியாபாரிகள் பாங்காங் வந்து குடியேறி, இப்பகுதியை இரத்தின விற்பனை மையமாக மாற்றினர். அவர்களைத் தொடர்ந்து, பின்னர் இங்கு தமிழர்களும் வந்து சேர்ந்தனர்.
பாங்காக்கில் குடியேறிய தமிழர்கள் வைத்தி என்பவரின் தலைமையில், சிலோம் சாலை மற்றும் பான் சாலை சந்திப்பில்,1879ம் ஆண்டு ஸ்ரீ மகாமாரியம்மன் கோயிலைக் கட்டி குடமுழுக்கு நடத்தினர். உள்ளூர் மக்கள் இந்தக் கோயிலை 'வாட் கீக்' என்ற பெயரில் அழைக்கின்றனர். இந்தக் கோயில் முழுக்கவும் தமிழகக் கட்டட பாணியை பின்பற்றி கட்டப்பட்டுள்ளது. இங்குள்ள தெய்வம் 'மகா உமா தேவி' என்று அழைக்கப்படுகிறது.
தாய்லாந்தில் பாரம்பரியமிக்க இந்து கோயில்கள் இருந்தாலும் நவீன முறையில் கட்டப்பட்ட 'வாட் கீக்' கோயில் தனித்துவம் வாய்ந்தது. தாய்லாந்து மொழியில் 'வாட் கீக்' என்றால் இந்து மதக் கோயில் என்று அர்த்தமாம். தாய் கலாசாரத்தை பொறுத்தவரையில் அவர்கள் இந்து மதக் கடவுள்களை எப்போதும் வழிபாட்டில் வைத்துள்ளனர். இந்தக் கோயிலுக்கு இந்தியர்கள் மட்டுமின்றி, தாய் மக்கள், சீனர்கள், மலாய் மக்கள் ஆகியோர் வந்தும் வழிபட்டுச் செல்கின்றனர்.
இந்த நாட்டில் ஏராளமான கோயில்கள் இல்லாததால், ஒரே கோயிலில் ஏராளமான கடவுள்களின் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இந்தக் கோயில் வளாகத்தில் பிரதானமாக மகாமாரியம்மனுக்கும், விநாயகருக்கும், முருகனுக்கும் சன்னிதிகள் உள்ளன. அடுத்து சிவன், மகாவிஷ்ணு, பிரம்மா, மகாலக்ஷ்மி, சரஸ்வதி, நவகிரகங்கள், நடராஜர், சிவகாமி, அனுமன் ஆகிய தெய்வங்களும் உள்ளன. மேலும், இந்தக் கோயிலில் மதுரை வீரன், ஐயனார், காத்தவராயன், சப்த கன்னிகள், பெரியாச்சி போன்ற தமிழக வழிபாட்டு தெய்வங்களும் உள்ளன. கோயிலின் நுழைவாயிலில் உயரமான கோபுரம் கட்டப்பட்டுள்ளது.
இந்தக் கோயிலின் கட்டடக் கலையைப் பார்க்கும்போது, தமிழ்நாட்டில் உள்ள ஏதோ ஒரு கோயிலுக்குள் புகுந்து விட்ட உணர்வுதான் ஏற்படுகிறது. இந்தக் கோயிலின் ஒவ்வொரு சிற்பமும், கட்டட நுட்பமும் நவீன தமிழக கோயில் கட்டுமானங்களை நினைவூட்டுகின்றன. இந்த அழகியக் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். வரும் பக்தர்களில் பெரும்பாலும் தாய்லாந்து புத்த மத மக்களாக உள்ளனர். அவர்கள் இந்து கலாசார முறையை பின்பற்றி பூ, பழம், ஊதுபத்தி உள்ளிட்ட பொருட்களுடன் கோயிலுக்கு வருகின்றனர். இங்குள்ள தெய்வத்தை பக்தியுடன் வழிபட்டால் அன்னை மகாமாரியம்மன் பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் செழிப்பை வழங்குவதாக ஐதீகம்.
இந்தியாவில் கொண்டாடப்படும் அனைத்து இந்து பண்டிகைகளும் இந்தக் கோயிலில் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகின்றன. நவராத்திரி, தீபாவளி, தைப்பூசம், கார்த்திகை, சஷ்டி உள்ளிட்டவை கோயிலில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்தக் கோயிலுக்கு செல்ல சென்னையில் இருந்து பாங்காங்கிற்கு நேரடி விமான சேவை உள்ளது. அங்கிருந்து கார் மூலம் சிலோம் சாலை வரை சென்று இக்கோயிலை அடையலாம்.