

தானங்களில் சிறந்தது அன்னதானம் என்பது ஆன்றோர் வாக்கு. எவ்வளவு பெரிய பெரிய தானங்களைச் செய்திருந்தாலும் அது பசி என்று நம்மை நாடி வரும் ஒருவருக்கு நாம் செய்யும் அன்னதானத்திற்கு ஈடாகாது. பஞ்ச பூதங்களின் கலவையே அன்னம். ஐப்பசி மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தன்று சாயரட்சை பூஜை நேரத்தில் ஈசனை அன்னத்தால் அலங்கரித்து வழிபடுவது அன்னாபிஷேகம் என்று அழைக்கப்படுகிறது.
ஐப்பசி அன்னாபிஷேகம் என்பது உணவளித்து நாளும் நம்மைக் காக்கும் ஈசனுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடன் ஆகும். அபிஷேகப் பிரியரான சிவபெருமானுக்கு நடைபெறும் அபிஷேகங்களில் மிகவும் சிறப்பாகக் கருதப்படுவது ஐப்பசியில் நடைபெறும் அன்னாபிஷேகமாகும். இது பற்றிய ஒரு புராண நிகழ்வினை இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளுவோம்.
தட்சன், அஸ்வினி முதல் ரேவதி வரை இருபத்தியேழு நட்சத்திரப் பெண்களை சந்திரனுக்கு திருமணம் செய்து கொடுத்தான். சந்திரன் தனது இருபத்தி ஏழு மனைவியரில் கார்த்திகை மற்றும் ரோஹிணி ஆகியோர் மீது மட்டும் அதிக அன்பு காட்டினார். இதனால் வருத்தமுற்ற மற்ற நட்சத்திரப் பெண்கள் தனது தந்தையிடம் இது பற்றிக் கூறி முறையிட்டனர். இதனால் சந்திரன் மீது கோபம் கொண்ட தட்சன், ‘ஒளி பொருந்திய கலைகளைப் பெற்றிருக்கும் கர்வத்தினால்தான் நீ இப்படி நடந்து கொள்ளுகிறாய். உனது கலைகள் ஒவ்வொன்றும் தேய்ந்து போகட்டும்’ என்று சாபமிட்டார்.
இந்த சாபத்தின் விளைவாக தினமும் ஒன்றாக சந்திரனின் கலைகள் தேயத் தொடங்கின. தனது ஒளி நீங்கப்பெற்று களையிழந்த சந்திரன் சாப விமோசனம் தேடி கடைசியில் ஈசனை சரணடைந்தார். அன்றைய தினம் பல கலைகள் தேயப்பெற்று சந்திரன் மூன்றாம் பிறையாகக் காட்சியளித்தார்.
சந்திரனைக் காக்க திருவுளம் கொண்ட ஈசன் மூன்றாம் பிறையை தனது தலையில் சூடிக் கொண்டார். ‘நீ உனது தவறை உணருவதன் பொருட்டு இன்று முதல் உனது கலைகள் ஒவ்வொன்றும் தேயவும் பின்பு வளரவும் அருள்புரிகிறோம். ஐப்பசி மாதப் பௌர்ணமி தினத்தன்று மட்டும் நீ உனது அனைத்துக் கலைகளுடன் பிரகாசமாய் ஒளிர்வாய்’ என்று அருள்புரிந்தார்.
இதனாலேயே சந்திரன் ஐப்பசி மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தன்று மட்டும் மற்ற மாத பௌர்ணமிகளைக் காட்டிலும் மிகப் பிரகாசமாக ஒளிர்வார். இதன் காரணமாகவே ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தன்று ஈசனுக்கு அன்னாபிஷேக நிகழ்வு நடைபெறுகிறது. சந்திரனுக்குரிய தானியம் அரிசியாகும். தனக்கு சாப விமோசனம் அளித்த ஈசனுக்கு ஐப்பசி பௌர்ணமி தினத்தன்று சந்திரன் அன்னத்தால் அபிஷேகம் செய்து நன்றிக்கடன் செலுத்துவதாக ஐதீகம்.
ஐப்பசி மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தன்று சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடைபெறும். காலையில் ஈசனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்படும். இந்த நன்னாளில் மாலை வேளையில் லிங்கத் திருமேனியை அன்னத்தால் அலங்கரித்து வழிபடுவார்கள். மாலையில் சாயரட்சை பூஜை நேரத்தில் லிங்கத் திருமேனி முழுவதையும், சமைத்து ஆற வைக்கப்பட்ட அன்னத்தால் மறைப்பார்கள். இதன் பின்னர் ஈசன் தனது பக்தர்களுக்கு தரிசனம் தருவார். இதன்பின்னர் அன்னாபிஷேக அலங்காரம் கலைக்கப்படும். லிங்கத் திருமேனியின் மீது சாத்தப்பட்ட அன்னத்தை பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகிப்பார்கள்.
இந்த பிரசாதம் நோய் நொடிகள் அண்டாது நம்மைப் பாதுகாக்கும் சக்தி நிறைந்தது. மனிதர்களுக்கு மட்டுமின்றி, அன்னத்தை திருக்குளம் மற்றும் நீர் நிலைகளில் வாழும் உயிரினங்களுக்கு உணவாக வேண்டும் என்ற நோக்கத்தில் கரைப்பார்கள். இன்று (5.11.2025) மாலை அனைத்து சிவன் கோயில்களிலும் அன்னாபிஷேகம் நடைபெற இருக்கிறது. இத்தினத்தில் ஈசனை தரிசித்து வாழ்வில் வளம் பெறுவோம்.