
தேசீய மந்திரம் காயத்ரி
காயத்ரி மந்திரம் நமது தேசீய மந்திரம்.
மந்திர ராஜம் என்று அழைக்கப்படும் இது மந்திரங்களில் எல்லாம் மிக உயர்ந்த மந்திரம்.
காயத்ரி மந்திரம்
ஓம் பூர் புவ: ஸுவ: தத்ஸவிதுர்வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோந: ப்ரசோதயாத்.
ஒம். செங்கதிர் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம். அவன் எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக – இது மகாகவி பாரதியாரின் காயத்ரி மந்திரத்திற்கான மொழி பெயர்ப்பாகும்.
காயந்தம் த்ராயதே இதி காயத்ரி!
தன்னை ஜபிப்பவனைக் காப்பதே காயத்ரி மந்திரம் ஆகும்.
இதில் 24 அக்ஷரங்கள் உண்டு. ஒவ்வொரு அக்ஷரத்திற்கும் ஒரு நற்பலன் உண்டு.
ஒவ்வொரு அக்ஷரத்திற்கும் ஒரு ரிஷி உண்டு. ஒவ்வொரு அக்ஷரத்திற்கும் ஒரு ஸ்தலம் உண்டு. இது போலவே ஒவ்வொரு அக்ஷரத்திற்கும் தனி சந்தஸ், தேவதை, சக்தி, நிறம், தத்துவம் உண்டு.
சிவரகசியம்
சிவரகசியம் என்பது பரமேதிகாசம் எனப்படும். அதாவது ராமாயண மஹாபாரத இதிஹாஸங்களுக்கும் மேற்பட்ட இதிகாசம் எனப் பொருள்.
சிவபிரான் உமாதேவிக்கு அருளிய உபதேசமே இந்த சிவரகசியம்.
கந்த புராணத்துள் சிவரகசியம் என்று ஒரு பகுதி உள்ளது. அதற்கு சிவரகசிய காண்டம் என்று பெயர். சிவரகசியம் என்பது பன்னிரண்டு பிரிவுகளைக் கொண்டது.
அவற்றுள் மூன்றாவது பிரிவைத் தமிழில் திருவாரூர் ஒப்பிலாமணிப் புலவர் இயற்றினார். 4090 பாடல்களைக் கொண்ட இந்த நூலை தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னர் அவையில் அவர் அரங்கேற்றினார்.
அநேக ரகசியங்களை அற்புதமாக விளக்கும் இந்த சிவரகசியம் நூலில் காயத்ரி மந்திரம் பற்றிய ஒரு ரகசியம் உண்டு.
இந்த நூலில் இரண்டாவது சர்க்கம் 'காயத்ரி வரம் பெற்ற சர்க்கம்‘ என்ற சர்க்கமாகும்.
பெரும்பாலும் யாரும் அறியாத ரகசியத்தை இதில் காணலாம்.
காயத்ரி தவம்!
காயத்ரி தேவியானவள் சிவபிரானைக் குறித்துக் கடும் தவத்தை மேற்கொண்டாள்.
அவளது தவத்தை மெச்சிய சிவபிரான் அவளுக்கு நேரில் காட்சியளித்து, “நீ உனக்கு வேண்டிய வரத்தைக் கேட்டுப் பெறுவாயாக!” என்றார்.
இதனால் மகிழ்ந்த காயத்ரி தேவியானவள், “கருணைக்கடலே! என்னால் விரும்பப்படும் வரம் ஒன்று உள்ளது. உன்னைப் போற்றத் தக்கதும் தொழுவதற்குமான மந்திரம் சுருதியே ஆகும். அது மந்திரம் என்றாலும் அதில் சிவபதம் இருப்பதாலன்றோ அது சித்தியடைய ஏதுவாக உள்ளது.
மந்திரம் என்னும் தினங்களுக்குப் பர்க்கவனே சூரியன் தான். அவன் இல்லாவிடில் தினங்களும் இல்லை. பகலின் தன்மையும் இல்லை. சிவ மந்திரம் இன்றி எனது மந்திரம் ஜபிக்கக் கூடாது. ஆகவே எனது மந்திரத்தில் பர்க்க என்னும் சொல் வரும்படி அருள் புரிவாயாக!” என்று வேண்டினாள்.
“அவ்வாறே ஆகுக” என்று அருள் புரிந்த சிவபிரான் காயத்ரியால் வழிபட்ட சிவலிங்கத்தில் கணங்களோடு புகுந்தார்.
ராம-ராவண யுத்தத்தின் போது அகஸ்திய முனிவர் ராமருக்கு ஆதித்ய ஹ்ருதயம் உபதேசிக்கும் போது இதோ இந்த சூரியனே, ப்ரம்மா, விஷ்ணு, சிவன், ஸகந்தன், ப்ரஜாபதி என்று கூறுவதை இங்கு நினைவு கொள்ளலாம்.
பர்க்க என்னும் சொல்லின் மகத்துவம்
‘பர்க்க’ என்ற மந்திரச் சொல்லுக்கு அர்த்தம் தானே பிரகாசிப்பவன் என்பதாகும். இது சூரியனைக் குறிக்கும் சொல்.
பர்கோ என்பது 33 செல்வங்களைக் குறிக்கும். இதற்கு 33 தேவதைகள் உண்டு. யக்ஞத்தால் பெறப்படும் பலவற்றை அருள்வது பர்கோ என்ற சொல்.
வீர்யம், ஒளி, பொறுமை, வலிமை, வாக்கு, மனம், செல்வங்கள், நேர்மை, ப்ரஹ்மண்யம், க்ஷத்ரம், குடிமை, அரசன், கடமையுடன் கூடிய குடிமக்கள், மரியாதை, தெய்வ ஒளி, உலகப் பொருள்கள், வயது, முகத்தோற்றம், பெயர், புகழ், மூச்சு, அபானம், கண்கள், காதுகள், பால், சாறுகள், உணவு தானியங்கள், பருவம், சாரம், வேண்டிய பொருள்கள், ஊட்டச்சத்து, வேலையாட்கள், கால்நடை ஆகியவையே 33 செல்வங்கள் ஆகும்.
இந்த அனைத்தையும் பர்க்கோ என்ற ஒரு சொல் தருகிறது.
சிவ ரகசியம் விளக்கும் இந்த ரகசியம் மகத்தான ரகசியம் என்பதால் காயத்ரி மந்திரத்தை அனைவரும் ஜபித்து அனைத்து நலன்களையும் பெறுவோமாக!
குறிப்பு: சிவரகசியம் என்னும் இந்த அரிய நூல் 1967ம் ஆண்டு திருவாவடுதுறை ஆதீனகர்த்தரின் ஆணையின் படி வெளியீடு எண் 33 ஆக வெளியிடப்பட்டது.