
மாதந்தோறும் வரும் அமாவாசை இந்து மதத்தில் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மாதந்தோறும் அமாவாசை வந்தாலும் ஆடி, புரட்டாசி, தை, மாசி மாதங்களில் வரும் அமாவாசை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசைக்கு ஒரு தனிச்சிறப்பு இருப்பது போல மாசி மாத அமாவாசைக்கு என்றும் தனியான மகத்துவம் உண்டு. அந்த வகையில் இந்தாண்டு மாசி மாத அமாவாசை திதி பிப்ரவரி 27ம்தேதி வியாழக்கிழமை காலை 09.02 மணிக்கு தொடங்கி, 28ம்தேதி காலை 07.17 வரை உள்ளது.
மாதந்தோறும் வரும் அமாவாசை நாளில் சிரத்தையுடன் விரதம் இருந்து நம் முன்னோர்களை மனமுருகி வழிபட்டால் அனைத்து விதமான தோஷங்களும் நீங்கி, சுபகாரிய தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும் என்பது ஐதீகம். மாசி மாத அமாவாசை எந்த நட்சத்திரத்துடன் வருகிறது என்பதை பொறுத்து நாம் செய்யும் விரதம், தெய்வ வழிபாடு, பித்ரு தர்ப்பணம், பித்ரு பூஜை, சிரார்த்தம், மந்திரங்கள் உச்சரித்தல், புனித நீராடல், முன்னோர் வழிபாடு, தான தர்மங்கள் ஆகியவற்றிற்கான பலன்கள் மாறுபடும்.
இந்த நாளில் நாம் முன்னோர்களை போற்றுவதன் மூலம் பித்ரு தோஷத்தை தீர்க்க இந்த புனித நாள் வாய்ப்பளிக்கிறது. மாசி அமாவாசை அன்று புனித நதிகளான கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகளில் நீராடுவது தனிமனிதர்களையும் அவர்களின் முன்னோர்களையும் பாவங்களிலிருந்து விடுவிப்பதாகவும், முக்தியை வழங்குவதாகவும் நம்பப்படுகிறது. புராணத்தின் படி, மாசி அமாவாசை அன்று இந்த நதிகளின் கரையில் தெய்வங்களும் வசிக்கின்றனர். சங்கமம் என்று அழைக்கப்படும் மூன்று நதிகள் சங்கமிக்கும் இடத்தில் நீராடுவது அனைத்து பாவங்களையும் போக்குவதாக கூறப்படுகிறது.
இந்த அமாவாசைக்கு நம் முன்னோர்களை வழிபாடு செய்தால் மகிழ்ச்சி, செல்வம் மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தைத் தருவதாக நம்பப்படுகிறது. ஆன்மீகக் கண்ணோட்டத்தில், இந்த நாளில் உண்ணாவிரதம் மற்றும் சடங்குகளைச் செய்வது விரும்பத்தக்க பலனைத் தரும்.
இந்தாண்டு மாசி மாத அமாவாசை அவிட்டம் நட்சத்திரத்துடன் இணைந்து வருவதால் அன்றைய தினம் தர்ப்பணம் கொடுப்பது பித்ருக்களுக்கு அளவற்ற மன மகிழ்ச்சியை தருவதோடு தானதர்மம், உணவு தானம், தண்ணீர் ஆகியவற்றை தானம் செய்தால், 16000 ஆண்டுகள் பித்ருக்களுக்கு சிரார்த்தம் செய்த பலன் கிடைக்கும்.
மாசி அமாவாசைக்கு முந்தைய நாள் சிவன் மற்றும் அன்னை பார்வதியை போற்றும் மஹாசிவராத்திரி கொண்டாட்டங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. சிவ வழிபாடு செய்து, சிவனின் அருளை பெற்ற கையோடு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து அவர்களின் ஆசியை பெற்றால் பித்ருதோஷங்களில் இருந்து விடுபட முடியும்.
இந்த மாசி அமாவாசை அன்று அதிகாலையில் எழுந்து ஒரு புனித நதியிலோ அல்லது வீட்டிலோ புனித நீராடுவதன் மூலம் நாளைத் தொடங்குங்கள். நீங்கள் குளித்த பிறகு, சூரியக் கடவுளான சூர்யதேவருக்கு அர்க்யாவைச் சமர்ப்பித்து, நாள் முழுவதும் விரதம் இருக்க வேண்டும்.
அன்றைய நாள் முழுவதும், உங்கள் முன்னோர்களை போற்றவும், அவர்களின் ஆசிகளைப் பெறவும் பல்வேறு சடங்குகளைச் செய்ய வேண்டும். உங்கள் வீட்டைச் சுற்றி கோமியத்தை தெளிக்கவும், ஆற்றங்கரையில் உங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த பின்னர், பிராமணர்களுக்கு உணவு வழங்கவும். இந்த சடங்குகள் உங்கள் முன்னோர்களுடன் தொடர்பு கொள்ளவும், அவர்களின் ஆசியை பெறவும் உதவும்.
இந்த நாளில் பிராமணர்களுக்கு பசு தானம் செய்வது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இது முடியாவிட்டால், பசுவிற்கு தீவனம் கொடுப்பது பொருத்தமான மாற்றாகும். இந்த சடங்குகளை பின்பற்றுவதன் மூலம், ஜாதகத்தில் பித்ரு தோஷம் உள்ள நபர்கள் அந்த பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.
அமாவாசை நாட்கள் கிரக பிரவேசம், மொட்டை அடிப்பது, திருமணங்கள் மற்றும் நிச்சயதார்த்தம் உட்பட எந்த மங்களகரமான சடங்குகளை செய்யக்கூடாது. இருப்பினும், அமாவாசை நாட்களில் புனித கங்கையில் நீராடுதல், பிராமணர்களுக்கு உணவளித்தல், தான தர்மங்கள், பித்ரு தர்ப்பணம், பித்ரு பூஜை, பிண்ட தானம் செய்து முன்னோர்களுக்கு பிரார்த்தனை செய்தல் உள்ளிட்ட சமய சடங்குகளை மேற்கொள்வதோடு, சனியுடன் தொடர்புடைய பரிகாரங்களையும் செய்ய வேண்டும்.