

நாம் ஒவ்வொருவரும் பிரச்னைகள் தீருவதற்காக பல வழிகளிலும் தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவோம். எந்த முயற்சியும் பலன் தராதபோது, ‘தெய்வமே துணை’ என்று அவரிடம் சரணாகதி அடைவோம். அப்படிப்பட்ட ஒரு நல்ல பரிகாரமாக விநாயகருக்கு மஞ்சளாக தேங்காய் வைக்கும் வழிபாடு கருதப்படுகிறது. இதை எப்படிச் செய்ய வேண்டும் என்பது குறித்து இப்பதிவில் காண்போம்.
எந்த ஒரு காரியமும் தடைகள் ஏதுமின்றி நடைபெற வேண்டும் என்றால் நாம் முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானை வழிபட வேண்டும். அவரின் அருள் இருந்தால் எந்த முயற்சியும் வெற்றி பெறும். குடும்பத்தில் பிரச்னையா? காரியத் தடைகள் விலக வேண்டுமா? பிள்ளைகள் சொல் பேச்சு கேட்பதில்லையா? இப்படி அனைத்துக்கும் விநாயகரை வழிபாடு செய்ய பிரச்னைகள் நீங்கும்.
இந்த வழிபாட்டை எந்த நாளில் வேண்டுமானாலும் செய்யலாம். அன்று உங்களின் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் இல்லாமல் பார்த்துக் கொள்வது மட்டும் முக்கியம். வழிபாட்டிற்கு முதல் நாளே நல்ல தேங்காய் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அதன் குடுமியை நீக்கிவிட்டு சுத்தமான நீரில் கழுவுங்கள். சுத்தமான மஞ்சளில் பன்னீரை ஊற்றி அதை தேங்காய் முழுவதும் நன்கு தடவ வேண்டும். பிறகு அதை அப்படியே பூஜை அறையில் வைத்து விடுங்கள்.
மறுநாள் காலை எழுந்து குளித்துவிட்டு பூஜை அறையில் குலதெய்வத்தை நினைத்து தீபமேற்றி, அந்த மஞ்சள் தேங்காயை உங்கள் வீட்டருகில் உள்ள விநாயகர் ஆலயத்திற்கு எடுத்துச் செல்லுங்கள். அவ்வாறு செல்லும்போது விநாயகருக்கு மலர்களோ அல்லது அருகம்புல் மாலையோ சாத்தி அவருக்கு இரண்டு நெய் அல்லது தேங்காய் எண்ணெய் தீபம் ஏற்றலாம். கற்பூரம் ஏற்றிய பிறகு இரண்டு கைகளாலும் மஞ்சள் தேங்காயை வைத்துக் கொண்டு விநாயகப் பெருமானை மூன்று முறை வலம் வர வேண்டும்.
இப்படி வலம் வந்த பிறகு நீங்கள் மனதில் உங்கள் வேண்டுதலை நினைத்து தேங்காயை விநாயகரின் பாதத்தில் வைக்க வேண்டும். ஒரு வேண்டுதலுக்கு ஒரு தேங்காய் வைக்க வேண்டும். பிறகு அதை சிதறு தேங்காய் விட வேண்டும். பல வேண்டுதல்களை ஒரே சமயத்தில் வைத்து வேண்டிக்கொள்ளக் கூடாது. அப்படிச் செய்தால் பரிகாரம் முழுமையாக ஆகாது.
தேங்காயில் முக்கண் இருப்பதால் அது சிவ அம்சமாகக் கருதப்படுகிறது. மேலும், அதற்கு மஞ்சள் பூசி, குங்குமம் இட, அம்பாளாகி அர்த்தநாரீஸ்வர ஸ்வருபம் பெறுகிறது. தேங்காயை சிதறு தேங்காயாக உடைப்பதன் மூலம் நமது அனைத்து பிரச்னைகளும் நீங்கும். புதன்கிழமை மாலை 6 மணியிலிருந்து 9 மணிக்குள் தேங்காய் வாங்கி அதை ஈசானிய மூலையில் வைக்க வேண்டும்.
மறுநாள் காலை குளித்துவிட்டு அதிகாலை 3 மணியிலிருந்து 5 மணிக்குள் அருகில் உள்ள விநாயகர் கோயில் சென்று அவரிடம் வேண்டுதலை வைத்து சிதறு தேங்காயாக உடைக்க வேண்டும். இப்படித் தொடர்ந்து 14 வாரங்கள் செய்ய, நம் அனைத்துப் பிரச்னைகளும் தீர்ந்து விடும்.