முப்பெரும் மன்னர் காலத்தில் வழிபாட்டில் இருந்த ஜேஷ்டா தேவி வழிபாட்டின் ரகசியம்!

jyeshta devi with Family
jyeshta devi
Published on

பாற்கடலைக் கடைந்தபோது முதலில் தோன்றியவள் ஜேஷ்டா தேவி. தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை அமிர்தம் வேண்டிக் கடைந்தபோது மந்தார மரம், பாரிஜாதம், கற்பக விருட்சம், காமதேனு, லட்சுமி தேவி, சந்திரன், அமிர்தம், ஐராவதம், சங்க நிதி, பத்ம நிதி, தன்வந்திரி இவர்களுக்கு முன்னால் தோன்றியவள் ஜேஷ்டா தேவி என்பது ஐதீகம். இவள் கையில் துடைப்பத்தை ஏந்தி காட்சி தருவாள். இவளுக்குப் பின்னரே லட்சுமி தேவி தோன்றியதாக ஐதீகம்.

மகாலட்சுமிக்கு முன்பு தோன்றியவள் என்பதால் ‘மூத்த தேவி’ என்றும் ‘மூத்தாள்’ என்றும் இவள் குறிப்பிடப்படுகிறாள். இப்பெயரே பிற்காலத்தில் மருவி, ‘மூதேவி’ என்றாயிற்று. ஜேஷ்டா தேவி என்பது வடமொழிச் சொல். ‘ஜேஷ்டா’ என்றால் முதல் என்று பொருள். மேலும், பழையோள், காக்கைக் கொடியோள் என்றும் இவளை அழைக்கின்றனர். காகத்தைக் கொடியாகவும், கழுதையை வாகனமாகவும், துடைப்பத்தை ஆயுதமாகவும் கொண்டவள்.

இதையும் படியுங்கள்:
குடும்ப ஒற்றுமையை ஏற்படுத்தும் மீனாட்சி அம்மன் கோயில் பள்ளியறை பூஜை தரிசனம்!
jyeshta devi with Family

செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமியின் மூத்த சகோதரி ஜேஷ்டா தேவி. ‘தவ்வை’ என்றால் தமக்கை என்று பொருள். இதனால் இவள், ‘தவ்வை’ என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறாள். பெருத்த உடலுடன் மகன் மாந்தன், மகள் மாந்தி இருவருடன் அமர்ந்து காட்சி தருவாள். மகன் மாந்தனின் முகம் ரிஷப வடிவத்தில் அமைந்திருக்கும்.

பல்லவ மன்னர்களின் காலத்தில் சிறப்பாக இருந்த ஜேஷ்டா தேவி வழிபாடு, பிற்கால சோழ மன்னர்கள் காலத்தில் குறையத் தொடங்கியது. முற்கால பாண்டிய மன்னர்களின் காலத்திலும் தவ்வை வழிபாடு வழக்கத்தில் இருந்துள்ளது. பல்லவ மன்னர்கள் செல்வச் செழிப்பிற்காக ஜேஷ்டா தேவி எனும் தவ்வையை வணங்கும் வழக்கத்தை வைத்திருந்தனர். சோழர்களின் காலத்தில் படையெடுப்பிற்குச் செல்லும் முன்னர் ஆயுதங்களை ஜேஷ்டா தேவியின் முன்பு வைத்து வணங்கிச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.

இதையும் படியுங்கள்:
பணப் பற்றாக்குறையை நீக்கும் பூசணிக்காய் பரிகாரம்: அமாவாசையில் மட்டும் இதை செய்யுங்கள்!
jyeshta devi with Family

தொண்டை மண்டலத்தில் அமைந்துள்ள பல்லவர் மற்றும் சோழர்களின் கால சிவத் தலங்களில் ஜேஷ்டா தேவியின் புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன. செங்கற்பட்டு மாவட்டத்தில் அமைந்த திருக்கழுக்குன்றத்திற்கும் மதுராந்தகத்திற்கும் இடையில் அமைந்த அரையப்பாக்கம் என்ற கிராமத்தில் உள்ள ஸ்ரீ அருணாதீஸ்வரர் கோயிலில் வடமேற்கு திசையில் ஜேஷ்டா தேவிக்கு ஒரு சன்னிதி அமைந்துள்ளது. புடைப்புச் சிற்ப வகையைச் சேர்ந்த இந்த சிற்பத்தின் இரு புறங்களிலும் சேடிப்பெண்கள் நின்ற கோலத்தில் காணப்படுகின்றனர். ஏர் கலப்பை ஒருபுறமும் கழுகுக் கொடி மற்றொரு புறமும் அமையப்பெற்றுள்ளன.

செங்கற்பட்டு மாவட்டம், ஆனூர் என்ற சிற்றூரில் அமைந்துள்ள சிவன் கோயிலில் ஜேஷ்டா தேவியின் புடைப்புச் சிற்பம் காணப்படுகிறது. மேலும், செங்கற்பட்டிற்கு அருகில் ஆத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீ தர்மசம்வர்தினி அம்பாள் சமேத ஸ்ரீ முக்தீஸ்வரர் ஆலயத்தில் அருள்பாலிக்கும் ஜேஷ்டா தேவி விவசாயத்தின் காவல் தெய்வமாகவும், வளமைக்கு அதிபதியாகவும் திகழ்கிறாள். தன்னை வணங்குவோரை இவள் விபத்திலிருந்து காப்பாள் என்பது ஐதீகம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com