

ராவணனை அழித்த பிறகு, போர்க் களத்தில் ராமர் ஓய்வாக தரையை நோக்கியபடி அமர்ந்திருந்தார். அப்போது ஒரு பெண்ணின் நிழல் தெரிந்தது. அந்த நிழலுக்குச் சொந்தக்காரியான பெண், அவரது திருப்பாதங்களை தொட முயற்சிப்பதை ராமன் நிழலின் நடவடிக்கை மூலம் புரிந்து கொண்டார். உடனே தனது காலை உள்ளிழுத்து கொண்டார்.
"நீ யாரம்மா ?" என்றார்.
"நான் ராவணனின் மனைவி மண்டோதரி. என் கணவரை யாராலும் வெல்ல முடியாது என இறுமாந்திருந்தேன். ஆனால், அவரையே ஒருவன் கொன்றுவிட்டான் என்றால், அவனிடம் ஏதோ உயர்ந்த குணம் இருக்க வேண்டும் என நினைத்தேன். மேலும், ஷத்திரிய குல தர்மப்படி, கணவனை இழந்த பெண்ணை என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், நீ வரவில்லை. ஆச்சரியம் கொண்டேன். இங்கே நீ என் நிழல் உன் மீது பாடுவதைக் கூட விரும்பாதபோது, உன் சிறந்த குணத்தை என்னவென்பேன்!
"என் கணவரிடம் கூட" ரகு குலத்தில் உதித்த ராமன் மனிதன் அல்ல உலகை காக்கும் பரம்பொருள், விஸ்வரூபன் தன்னுடைய ஒவ்வொரு அங்கங்களிலும் உலகங்களையே தாங்கி நிற்கிறான். பாதாள லோகமே அவனது பாதங்கள், பிரம்மலோகமே அவன் சிரசு, கதிரவனே அவனது கண்கள், மேகமே அவனது கேசம். அவன் இமைப்பதே இரவு பகலாகிறது, திசைகள் அனைத்தும் அவனுக்கு செவிகள் .அவனது திருநாமம் எல்லாப் பாவங்களையும் நொடிப் பொழுதில் போக்கவல்லது.
வேதத்தின் சாரம் நீ, எனவே, ராமன் சாட்சாத் தெய்வ வடிவம் என்பதில் சந்தேகமில்லை. 'பகையை ஒழித்து, சீதையை விட்டுவிடுங்கள் ' என்று மன்றாடினேன். அவர் கேட்கவில்லை. உன் வெற்றிக்கு காரணம், என் கணவரிடம் இல்லாத எல்லாம் இருந்தது. ஆனால், அவரிடம் இல்லாத ஒரு நற்குணம் உன்னிடம் இருக்கிறது. அதனால் தான் நீ வென்றாய் " என்றாள்.
உடனே ராமர் தன் சுய வடிவான நாராயணனாக அவளுக்கு விஸ்வரூப தரிசனம் கொடுத்தார். ராமயணத்தில் பாக்கியவதியாக திகழ்ந்தவர் மண்டோதரி. அனுமான் இலங்கை சென்று ராவணின் அந்தப்புரம் சென்ற போது மண்டோதரி ஒழுங்காக உடையணிந்திருந்ததைக் கண்டு ' இவள் சீதையாக இருப்பாளோ' என்று சந்தேகம் கொண்டான். அந்தளவுக்கு குணசீலியாக விளங்கியதால் தான், கெட்டவனுக்கு வாழ்க்கைப்பட்டும் அவளுக்கு நாராயண தரிசனம் கிடைத்தது.
தண்டனை யாருக்கு....!
ராவணன் சகோதரர் விபீஷணனை காட்டில் சில அந்தணர்கள் சிறை பிடித்ததாக ராமர் கேள்விப்பட்டார். நேரில் சென்ற ராமர், கட்டப்பட்ட நிலையில் விபீஷணன் இருப்பதைக் கண்டு அதிர்ந்தார். ராமரை கண்ட அந்தனர்கள் பணிவுடன் வணங்கினர். பழங்கள் அளித்து உபசரித்தனர். விபீஷணரை தேடியே ராமர் வந்திருப்பதை உணர்ந்து,
" சுவாமி! தர்ப்பை சேகரிக்க முதிய அந்தணர் ஒருவர் காட்டுக்கு வந்திருந்தார். எப்போதும் மவுன விரதமிருக்கும் அவரைக் கண்ட விபீஷணன் பேச முயற்சித்தபோது, அவர் பொருட்படுத்தவில்லை, கோபம் கொண்ட விபீஷணன் காலால் உதைக்க, அந்தணர் உயிர் துறந்தார். அதனால் இவனை கட்டி வைத்த சமயத்தில் உத்தமரான நீங்களே வந்து விட்டீர்கள், இவனுக்கு தண்டனை வழங்குங்கள் " என்றனர்.
ராமர் " இவன் என் பணியாளன். பணியாளனின் செயலுக்கு எஜமானனே பொறுப்பு என்பதால் இவனுக்குரிய தண்டனையை நான் ஏற்பதுதான் சரி "என்றார். அதை கேட்ட அந்தனர்களின் உள்ளம் நெகிழ்ந்தது. விபீஷணனுக்கு கொலை செய்யும் நோக்கம் இல்லை என்பதையும், அந்தணரின் மரணம் தற்செயலாக நடந்தது என்பதையும் உணர்ந்தனர். ராமருடன் விபீஷணனை அனுப்பி வைத்தனர்.