காற்றின் வேகத்தை மிஞ்சும் ஆடல்மா குதிரை…பயன்படுத்திய மகான் யார் தெரியுமா?


Thirumangai Azhwar
Thirumangai Azhwar
Published on

திருமங்கையாழ்வார் நாலாயிரதிவ்யப் ப்ரபந்தத்தில் அதிகம் அளவிலான பாசுரங்களைப் பாடியுள்ளவர் எனவும் மற்ற ஆழ்வார்களைக் காட்டிலும் அதிக அளவிலான வைணவத் தலங்களுக்குச் சென்று பெருமாளை தரிசித்தவர் என்ற பெருமையையும் பெற்றார். போக்குவரத்து வசதிகள் இல்லாத அக்காலத்தில் திருமங்கையாழ்வார் எப்படி வடநாடு வரை சென்று வைணவத்தலங்களை தரிசித்தார் என்ற கேள்வி எழுகிறது அல்லவா?

திருமங்கையாழ்வாரின் இயற்பெயர் நீலன். நீலநிறத்தில் இருந்ததால் இவருக்கு இப்பெயர் சூட்டப்பட்டது. சீர்காழி திருநாங்கூருக்கு அருகில் திருக்குறையலூரில் மறவர் குலத்தில் பிறந்தவர். ஒரு கார்த்திகைத் திங்களில் கார்த்திகைத் திருநாளில் திருமாலின் சார்ங்கத்தின் அம்சமாக அவதரித்தவர். தந்தை ஆலிநாடார். தாய் வல்லித்திரு. கல்வி கலைகளில் சிறந்த விளங்கிய இவர் ஒரு சிறந்த வீரனாகவும் திகழ்ந்தார். சோழநாட்டில் குறுநிலமன்னராக விளங்கியவர். இவருடைய வீரத்திற்குப் பரிசாக சோழமன்னர் திருமங்கை எனும் சிற்றரவை இவருக்கு வழங்கி சிறப்பித்தார்.

குமுதவல்லி எனும் பெண்மீது காதல் கொள்ள அவளோ "பஞ்ச ஸம்ஸ்காரமும், ஆண்டு முழுவதும் ஆயிரத்தெட்டு வைணவ அடியார்களுக்கு அமுதூட்டினால் மட்டுமே மணந்து கொள்ளுவேன்” என்ற ஒரு நிபந்தனையை விதித்தாள். இந்த நிபந்தனையை ஏற்ற திருமங்கையாழ்வார் வைணவ அடியவராகி திருமாலடியவர்களுக்குத் தொண்டு செய்து குமுதவல்லியின் அன்பிற்குப் பாத்திரமாகி பெருமாளால் ஆட்கொள்ளப்பட்டு அவரால் திருமந்திர உபதேசம் உபதேசிக்கப்பட்டு உலகபந்தங்களையெல்லாம் விட்டொழித்து வைணவத்திற்குத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு தொண்டாற்றினார்.

இதையும் படியுங்கள்:
சென்னையில் ஒரு சூரிய தலம்: கொளப்பாக்கம் அகத்தீஸ்வரர் கோவில் சிறப்புகள்!

Thirumangai Azhwar

பெரியதிருமொழி (1084 பாசுரங்கள்), திருக்குறுந்தாண்டகம் (20), திருஎழுக்கூற்றிருக்கை (1), சிறிய திருமடல் (40), பெரிய திருமடல் (7), திருநெடுந்தாண்டகம் (30) என ஆறு திவ்ய பிரபந்தங்களை இயற்றினார். இவை ஆறங்கம் என்று அழைக்கப்படுகின்றன. திருமங்கையாழ்வார் ஆசு, மதுரம், சித்திரம், விஸ்தரம் என நான்கு பாரம்பரியமான கவிதை பாணிகளைப் பின்பற்றி பாசுரங்களை இயற்றியுள்ளார். இதனால் இவர் “நாலுகவிப் பெருமாள்” எனவும் அழைத்து சிறப்பிக்கப்படுகிறார்.

திருமங்கையாழ்வாரிடம் “ஆடல்மா” என்ற பேராற்றல்மிக்க ஒரு குதிரை இருந்தது. ஆடல்மா காற்றைக் கிழித்துக் கொண்டு அசுர வேகத்தில் செல்லும் தன்மை வாய்ந்தது. திருமங்கையாழ்வார் இந்த குதிரையில் பயணித்தே எண்பத்தியாறு திவ்யதேசங்களுக்கும் யாத்திரை மேற்கொண்டு மொத்தம் 1253 பாசுரங்களைப் பாடியுள்ளார். ஆடல்மாவில் பலமாதங்கள் பயணித்து தேவப்பிரயாகை, நைமிசாரண்யம், திருப்பிரிதி, பத்ரிநாத் முதலான பல வைணவஸ்தலங்களையும் தரிசித்து பாசுரங்களை இயற்றினார். இதனால் திருமங்கையாழ்வார் “ஆடல்மா வளவன்” என்றும் அழைத்துச் சிறப்பிக்கப்பட்டுள்ளார்.

ஆடல்மா குதிரையில் பயணித்தே ஆஹோபிலம் சென்று அங்கு நவநரசிம்மர்களை தரிசித்து நரசிம்மரின் வீரதீர பாராக்கிரம செயல்களையும் அஹோபிலம் காட்டைப் பற்றிய தகவல்களையும் பத்து பாசுரங்களில் பாடியுள்ளார். இந்த பத்து பாசுரங்களும் “சிங்கவேள்குன்றம்” என்று முடிவடையும் வண்ணம் அமைந்திருக்கிறது. திருமங்கையாழ்வார் அஹோபிலத்தை சிங்கவேள்குன்றம் என்று வர்ணிக்கிறார்.

இதையும் படியுங்கள்:
ராமாயண தத்துவத்தை உணர்ந்து கொள்ளுங்கள்! பகவான் ஶ்ரீ சத்ய சாயிபாபா அருளுரை!

Thirumangai Azhwar

திருமங்கையாழ்வார் பக்திப்பரவசத்தோடு சாகசங்கள் நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்தவர். இவர் பரகாலன், கலியன், தூயோன், சதுஷ்கவி சிகாமணி, மங்கையர்கோன், ஆலிநாடன், கொற்றவேல் பரகாலன், வாள் கலியன் என பலவிதமான சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படுகிறார். திருமங்கையாழ்வாரிடம் 'அமரிற் கடமா களியானை' என்ற ஒரு யானையும் இருந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com