
தஞ்சாவூர் - கும்பகோணம் சாலையில் சுவாமிமலை என்னும் புனைப்பெயரில் ‘திருவலஞ்சுழி’ என்னும் அழகிய சிற்றூர் ஒன்று அமைந்துள்ளது. இத்தலத்தில் அமைந்துள்ளது அருள்மிகு வலஞ்சுழி விநாயகர் ஆலயம். சுவாமிமலை திருக்கோயிலுக்கு இணையான திருக்கோயிலாகும் இது.
தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடலில் அமிர்தம் கடைந்தபோது, ஆலகால விஷம் தோன்றியது. ஆனால், அமிர்தம் கிடைக்கவில்லை. தேவர்கள் பரமேஸ்வரனிடம் சென்று வேண்டினர். அதற்கு பரமேஸ்வரன், ‘எந்தக் காரியத்தைத் தொடங்கினாலும், அதற்கு விநாயகர் வழிபாடு முக்கியம். ஆனால், தேவர்களோ, அமிர்தம் கிடைக்கப்போகிறதே என்கிற சந்தோஷத்தில் பிள்ளையாரை வழிபட மறந்து விட்டார்கள். இதனால்தான் ஆலகால விஷம் வந்தது. எனவே, விநாயகர் வழிபாடு செய்தால் அமிர்தம் உண்டாகும்' என்றார்.
சமுத்திரத்தில் போய் பிள்ளையாரை எங்கு தேடுவது? எனவே, அனைவரும் அந்த கடல் நுரையிலேயே பிள்ளையாரை உண்டுபண்ணினார்கள். அதன் பிறகு அவரை வழிபட்டு, மீண்டும் பாற்கடலைக் கடைய, அமிர்தம் கிடைத்திருக்கிறது.
பாற்கடல் நுரையிலிருந்து உருவானதால் இவருக்கு ‘வெள்ளை விநாயகர்’ என்ற பெயர் ஏற்பட்டிருக்கிறது. அத்தகைய பெருமைக்குரியவர்தான் திருவலஞ்சுழி வெள்ளை விநாயகர். இந்த வழக்கத்தை ஒட்டித்தான் சாணம், மஞ்சள் இவற்றை பிடித்து வைத்து பிள்ளையாரை வழிபடும் வழக்கம் ஏற்பட்டிருக்கிறது. பாற்கடல் நுரையில் தோன்றி, தேவர்களால் பூஜிக்கப்பட்டு தேவேந்திரன் பூஜை பண்ணிய அமிர்த சொரூபமான மூர்த்தியாவார் இந்த பிள்ளையார்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த திருவலஞ்சுழி வெள்ளை விநாயகரை, விநாயகர் சதுர்த்தி அன்று வணங்கினால் வருடம் முழுவதும் பூஜித்த பலன் கிடைப்பதாக ஐதீகம். விநாயகர் சதுர்த்தி அன்று தேவேந்திரனே இங்கு வந்து பூஜை செய்யும் பாவனாபிஷேகம் இன்றும் இத்தலத்தில் நடைபெற்றுக் கொண்டிருப்பது சிறப்பாகும்.
வெள்ளை விநாயகருக்கு இங்கே அபிஷேகம் செய்யப்படுவதில்லை. அதற்கு பதிலாக பச்சை கற்பூரம் என்னும் வாசனை திரவியத்தை மேலே சாத்துவது வழக்கமாக இருந்து வருகிறது. இதுவே அபிஷேகமாகவும் கருதப்படுகிறது. பால் மற்றும் திரவியங்கள் அபிஷேகம் செய்வதற்காகவே பின்புறம் உள்ள ஈஸ்வரன் சன்னிதி பிராகாரத்தில் நிருதி மூலையில் ஒரு விநாயகரை ஸ்தாபித்து அவருக்கு அபிஷேகங்கள், ஹோமங்கள் போன்ற வழிபாடுகளைச் செய்து வருகின்றனர்.
இக்கோயில் 3000 வருடங்கள் பழமையானது என்றும் ராஜராஜ சோழனின் தமக்கை குந்தவை பிராட்டியாரால் பராமரிக்கப்பட்டதாகவும் கல்வெட்டு ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன.
இத்திருத்தலம் திருஞானசம்பந்த பெருமானால், ‘என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே’ எனும் மிக அற்புதப் பதிகங்களால் போற்றப்பட்டது. திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோராலும் இத்திருத்தலம் பாடல் பெற்றதாகப் புராணங்கள் கூறுகின்றன.