விதவிதமான கோலத்தில் அருளும் சிவலிங்க அருட்தலங்கள்!

Sivalingam
Sivalingam
Published on

‘லிங்கம்’ எனும் சொல் சிவனின் அருவுருவ நிலையைக் குறிப்பதாகும்.'லிம்' என்பது உயிர்களின் தோற்றத்தைக் குறிக்கும். 'கம்' என்பது அவற்றின் ஒடுக்கத்தைக் குறிக்கும் சொல்லாகும். உயிர்கள் தோன்றவும், ஒடுங்கவும் உரிய இடமாக சிவன் உள்ளதால் இப்பெயர் ஆகும். சில வித்தியாசமான சிவலிங்கங்கள் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

கருடன் கால் பட்ட லிங்கம்: திருவாரூர் மாவட்டம், குடவாசலில் உள்ள ஸ்ரீ கோணேஸ்வரரை கருடன் வழிபட்டாராம். அவர் வழிபட்டபோது ஏற்பட்ட கருடனின் கால் சுவடுகளை இத்தல சிவலிங்கத்தின் மீது இன்றும் தரிசிக்கலாம்.

தாமரை மேல் லிங்கம்: நாகப்பட்டினம் மாவட்டம், செம்பனார்கோவிலில் உள்ள சிவலிங்கம் 32 இதழ்களை உடைய தாமரை வடிவ ஆவுடையாரில் சுயம்பு லிங்கமாக எழுந்தருளி இருக்கிறார்.

இதையும் படியுங்கள்:
சிவ மகாபுராணம் படிப்பதால் கிடைக்கும் பயன்கள் என்னென்ன தெரியுமா?
Sivalingam

வண்டு துளைத்த லிங்கம்: பிருங்கி முனிவர் வண்டு வடிவம் எடுத்து சிவபெருமானை வழிபட்டதால் சிவலிங்கத்தின் வண்டு துளைத்த குறி காணப்படுகிறது. இந்த அரிய காட்சியை நாம் தஞ்சாவூர் மாவட்டம், திருநல்லூரில் காணலாம். இங்கு இறைவன் ஸ்ரீ பஞ்சவர்ணேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

வடபுறம் சாய்ந்த லிங்கம்: கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் சிவலிங்கம் வடபுறம் சாய்ந்த நிலையில் இருக்கும் காட்சியைக் காணலாம்.

கோடரி தழும்பு உள்ள லிங்கம்: செங்கல்பட்டு மாவட்டம், பொன்னேரிக்கு அருகில் உள்ள திருப்பாலைவனம் கோயிலில் திருப்பாலீஸ்வரர் மீது கோடரி தழும்பைக் காணலாம்.

வாளால் வெட்டுப்பட்ட லிங்கம்: ரத்தினம் வேண்டிய ஓர் அரசனை இறைவன சோதித்தபோது அவனுடைய வாளால் வெட்டுப்பட்ட லிங்கத்தை குளித்தலை அய்யர் மலையில் காணலாம். இங்கு இறைவன் ரத்தினகிரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

நண்டு வளையுடன் லிங்கம்: மயிலாடுதுறை மாவட்டம், நீடூரில் உள்ள சிவன் கோயிலில் நண்டு ஒன்று சிவபெருமானை வணங்கியதால், லிங்கத்தின் உச்சியில் நண்டு வளை உள்ளது. இவர் பெயர் அருட்சோமநாதர்.

இதையும் படியுங்கள்:
மனதில் தோன்றும் சந்தேகங்களும் மகத்தான ஆன்மிக பதில்களும்!
Sivalingam

அனுமனின் வால் பட்ட லிங்கம்: ஆந்திர மாநிலம், ராமகிரியில் உள்ள சிவன் கோயில் லிங்கத்தில் அனுமனின் வால் பட்ட தழும்பைக் காணலாம்.

அம்பாள் தழுவிய லிங்கம்: தஞ்சாவூர் மாவட்டம், பட்டீஸ்வரர் திருச்சக்திமுற்றம் கோயிலில், அம்பாள் சிவலிங்கத்தை தழுவிய  நிலையில் இருக்கும் அரிய காட்சியைக் காணலாம்.

காலனின் பாசக்கயிறு தழும்பு பட்ட லிங்கம்: திருக்கடையூரில் காலசம்ஹார மூர்த்தி லிங்கத்தின் மீது, காலன் வீசிய பாசக் கயிற்றின் தழும்பு தெரிகிறது.

அம்பு பட்ட லிங்கம்: அர்ஜுனனின் அம்பு பட்ட லிங்கத்தை, தஞ்சாவூர் மாவட்டம், திருவிஜயமங்கையில் தரிசிக்கலாம். இங்கு இறைவன் விஜயநாதேஸ்வரர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இங்குள்ள லிங்கத்தின் மீது அர்ஜுனன் அம்பு எய்ததால் ஏற்பட்ட தழும்பைக் காணலாம்.

மீன் வழிபடும் லிங்கம்: பாபநாசத்திற்கு அருகில் உள்ள திருச்சேலூர் எனும் ஊர் தேவராயன்பட்டை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஊரிலுள்ள சிவன் கோயிலில் மீன் ஒன்று சிவலிங்கத்தை வழிபடும் சிற்பம் ஒன்று உள்ளது.

குங்கும லிங்கம்: மகாராஷ்டிரா மாநில எல்லோரா குகைகளுக்கு அடுத்து உள்ள ‘குஸ்மேசம்’ என்னும் ஊரில் உள்ள சிவலிங்கம் முழுக்க முழுக்க குங்குமத்தால் ஆனது.

இதையும் படியுங்கள்:
தம்மை கல்லால் அடித்தவருக்கு கோயில் அதிகாரியாக பதவி தந்த நாய்!
Sivalingam

இரு வண்ண லிங்கம்: சென்னை அருகே திருவிற்கோலத்திலுள்ள லிங்கம் வெண்ணிறமாகத் தோன்றும் சமயத்தில் பெருமழை பெய்யும் என்றும், செந்நிறமாகக் காட்சியளித்தால் போர் வரும் என்றும் கூறுவர்.

ஒரே லிங்கத்தில் 1008 லிங்கங்கள்: காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில் ஒரே லிங்கத்தில் 1008 லிங்கங்கள் இருக்கும் அரிய லிங்கத்தைக் காணலாம்.

பசுவின் கொம்பு குத்திய லிங்கம்: திருவாரூர் மாவட்டம், திருக்கொண்டீஸ்வரம்  பசுபதீஸ்வரர் ஒரு சுயம்புலிங்கம். அந்த சிறிய லிங்கத்தில் பசுவின் கொம்பால் ஏற்படுத்தப்பட்ட பிளவு காணப்படுகிறது.

லிங்கத்தின் மேல் முருகன்: திருப்பூர் மாவட்டம், குடியமங்கலத்தில் உள்ள லிங்கத்தின் மேற்புறம், முருகன் வேலுடன் நின்று கொண்டிருக்கிறார்.

சிரசாசனம் செய்யும் கோலத்தில் சிவலிங்கம்: ஆந்திர மாநிலத்திலுள்ள, பீமாவரத்தில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் யனமதுரு சக்தீஸ்வரர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில், மூலவராக விளங்கும் சிவலிங்கபிரான், சிரசாசனம் செய்யும் கோலத்தில் இருப்பது அரிய காட்சி ஆகும்.

பலாப்பழ லிங்கம்: தஞ்சை மாவட்டம், குடவாசல் அருகே உள்ள நாலூர் திருமயானம் தற்போது திருமெய்ஞானம் என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள லிங்கத்தின் மேற்பகுதி பலாப்பழம் போன்று உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com