தீபாவளியன்று எண்ணெய் வைத்து வெந்நீரில் குளிப்பதன் தாத்பர்யம் தெரியுமா?

Oil bathing
Oil bathing
Published on

தீபாவளி அன்று அதிகாலையிலேயே அதாவது சூரிய உதயத்திற்கு ஒன்றை நாழிகை முன்பே எண்ணெய் (Oil bathing) தேய்த்து குளிக்க வேண்டும் என்பது ஐதீகம். அதாவது அதிகாலை மூன்று மணியிலிருந்து ஐந்து மணிக்குள் எண்ணெய் தேய்த்து நீராட வேண்டும் தீபாவளி நன்னாளில் எண்ணெய் தேய்த்து நீராடல் என்பது மிகவும் புனிதமானதாகும்.

பொதுவாக அதிகாலையில் எண்ணெய் (Oil bathing) தேய்த்து குளிக்க கூடாது. ஆனால், தீபாவளி அன்று மட்டும் ஏன் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள் தெரியுமா? அன்றைய தினத்தில் அதிகாலை குளியல் எண்ணெயில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். வென்னீரில் சகல பாவங்களையும் போக்கும் கங்கை பிரசன்னமாகி விடுகிறார்கள். ஆனால், அன்று வெந்நீரில் தான் குளிக்க வேண்டும் தண்ணீரில் குளிக்க கூடாது. அன்று எந்த நதியில் வந்த தண்ணீராக இருந்தாலும் அதை வென்னீராக்கி குளித்தால் அது புனித நதியான கங்கையில் நீராடியதற்கு சமமாகும்.

அதனால் தான் தீபாவளி அன்று 'கங்காஸ்தானம் ஆச்சா?' என்று கேட்கும் பழக்கம் உருவானது. நம் ஒவ்வொரு வீட்டிலும் தீபாவளி நாளில் கங்கை நதியே வாசம் செய்கிறாள். தைலத்தில் விளங்கும் லட்சுமி தேவிக்கும், வெந்நீரில் வாசம் செய்யும் கங்கா தேவிக்கும் மானசீகமாக நன்றி தெரிவித்து தீபாவளி நாளில் எண்ணெய் வைத்து நீராடினால் நம் பாவங்கள் அகன்று விடுகிறது.

எண்ணெயில் மகாலட்சுமியும், அரப்பு தூளில் சரஸ்வதி தேவியும், சந்தனத்தில் பூமாதேவியும், குங்குமத்தில் கௌரியும், புஷ்பத்தில் மோகினியும், தண்ணீரில் கங்கையும், புத்தாடையில் மகாவிஷ்ணுவும், இனிப்பு பட்சணங்களில் அமிர்தமும், இனிப்பு மருந்தில் தன்வந்திரி பகவானும், தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பு பொரியில் ஜீவாத்மாவும் இருப்பதாக ஐதீகம்.

தீபாவளி தினத்தில் வெந்நீரில் எண்ணெய் தேய்த்து குளித்தால் பீடைகள் விலகி புண்ணியம் உண்டாகும். தீபாவளி அன்று அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து ஆல்அரசு, அத்தி புரசு, மாவிலங்கை ஆகிய மரங்களின் இலைகள் போட்டு காய்ச்சிய நீரில் கங்கா ஸ்நானம் செய்த பின் புத்தாடை உடுத்தி பலவகையான பலகாரங்கள் செய்து விஷ்ணுவுக்கும், மகாலட்சுமிக்கும் படைத்து பூஜிக்க வேண்டும்.

தீபாவளி அன்று எண்ணைய் தேய்த்து குளித்ததும் புதிய ஆடைகளையும் புதிய பலகாரங்களை வைத்து வணங்குவது வழக்கம் இது முன்னோர்களுக்கு படைக்கும் படையல் ஆகும்.

தீபாவளிக்கு காரணமான நரகாசுரன் நடத்திய போரில் கிருஷ்ணர் மயக்கம் அடைந்ததால், சத்தியபாமாவின் உதவியால் கொல்லப்பட்டான். ஆனால், கங்கையோ சிவனின் தலையிலிருந்து வந்த நதி. எனவே, தீபாவளியன்று அநியாயத்தை அழித்த கிருஷ்ணனையும், சத்யபாமாவையும் வழிபடுவது சரி.

இதையும் படியுங்கள்:
ஸ்ரீராமர் பாதங்களை சீதா தேவி பிடித்து விட மறுத்தது ஏன்?
Oil bathing

ஆனாலும் சிவனுடன் சம்மந்தப்படுத்தி கங்கையில் ஸ்தானம் செய்யவேண்டியது ஏன் என்ற கேள்வி எழுகிறது அல்லவா? பகவான் விஷ்ணு வாமன அவதாரம் எடுத்து மகாபலியை ஆட்கொள்வதற்காக உலகை அளந்தார். அவர் தன் பாதத்தை மேலோகத்திற்கு தூக்கியவுடன் பிரம்மா அந்த பாதங்களுக்கு தன் கமண்டல நீரால் அபிஷேகம் செய்தார். அது ஆகாய கங்கையாக கொட்டியது. அது அப்படியே பூமியில் விழுந்தால் உலகம் தாங்காது என்பதால் சிவன் அதை தலையில் தாங்கினார்.

பின்னர் பகீரதனின் கோரிக்கைக்கு இணங்க பூமி தாங்கும் வேகத்தில் இங்கு அனுப்பி வைத்தார். புனித நீர் எதுவாயினும் அது கங்கையே ஆகும். நம் வீட்டுக்குடத்தில் புனித நீரிட்டு நூல் சுற்றி மந்திரங்கள் ஓதும்போது கங்கை அதற்குள் ஆவாகனம் ஆகிவிடுகிறது.

இதையும் படியுங்கள்:
ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரர் இருக்க சந்திராஷ்டமத்தை கண்டு பயம் ஏன்?
Oil bathing

எனவே விஷ்ணுவுக்கும், சிவனுக்கும் கங்கை தீர்த்தம் சம்பந்தப்படுகிறது. ஆக, பிரம்மா, சிவன், விஷ்ணு என்ற முப்பெறும் தெய்வங்களுக்கும் சம்பந்தப்பட்ட கங்கை நதியை நம் வீட்டு நீரில் ஆவாகனம் செய்து தீபாவளியன்று நாம் கங்கா ஸ்நானம் செய்கிறோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com