சிவன் பிறப்பு இறப்பற்ற பெருந்தகை. அவரை யார்யார் பூசித்து என்னென்ன பயன் பெற்றார்கள் என்பதை பார்ப்போம்.
விஷ்ணு காசி தலத்தில் பதினாயிரம் வருடம் தவம்செய்து சிவலிங்கப்பெருமானைப் பூசித்துத் தமது உத்தமமான பதவியையும், சமஸ்த உலகங்களை ரக்ஷிக்கும் உரிமையையும் அடையப்பெற்றார்.
பிரம்மா காஞ்சிபுரம் சென்று சிவலிங்கப்பெருமானைப் பூசித்துச் சிருஷ்டிக்கும் அதிகாரத்தையும், சரசுவதிக்கு நாயகராயிருக்கும் தன்மையையும் அன்னவாகனம் முதலியவற்றையும் பெற்றார்.
இங்ஙனம் இந்திரன், அக்கினி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானர் என்னும், அஷ்டதிக்பாலர்களும் முறையே ஸ்ரீசைலத்திலும், திருவண்ணாமலையிலும், கேதாரத்திலும், கோகர்ணத்திலும், ஜம்புகேசுவரத்திலும், திருக்காளத்தியிலும், சித்தவடத்திலும், திருவாரூரிலும் சிவலிங்கப் பெருமானைப் பூசித்துத் தத்தம் திசையின் ஆதிபத்தியத்தையும், வாகனங்களையும், ஆயுதங்களையும் சிவபெருமானிடத்திற் பெற்றார்கள்.
திக்குபாலர்கள் மாத்திரமா! சிவலிங்க பூஜா விசேஷத்தினாற் சூரிய சந்திரர்கள் சிவபெருமானுடைய நிவாசஸ்தானமாகிய மகாமேருவைப் பிரதக்ஷிணஞ் செய்கின்றார்கள்;
செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகியோர் முறையே திருவிடைமருதூர், மதுரை, சேது, திருவெண்காடு, வேதாரண்யம் என்னும் தலங்களிலே சிவலிங்கப்பெருமானைப் பூசித்து வேண்டிய வரங்களைப் பெற்றுத் துன்பம் நீங்கி இன்பம் வரப்பெற்றார்கள்.
சப்தரிஷிகள் சிதம்பரத்தில் சபாநாயகரைப் பூசித்துக் கிரகங்களுக்கெல்லாம் மேலே தங்கள் இருப்பிடத்தைப் பெற்றுத் தேகாவசானத்தில் மோட்சத்தை அடைதற்குறிய திருவருளையும் பெற்றார்கள்.
துருவன் ஸ்ரீகாசிவிசுவநாதப் பெருமானைப் பூசித்து நவக்கிரக மண்டலம், நக்ஷத்திரமண்டலம், சப்தரிஷி மண்டலம் என்பவற்றுக் கெல்லாம் மேலே நிற்கும் அருளைப்பெற்றான்.
ஆதிசேஷன் கும்பகோணத்திற் சிவபெருமானைப் பூசித்துப் பூமிபாரத்தைத் தாங்குகின்றான்.
ஆதாரம் 'சிவலிங்க மகத்துவம்' என்னும் நூல் (வெளியீடு 1913).