
முழுமுதற் கடவுளான பிள்ளையாருக்கு உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் மோதகத்தை தான் பிரதான பிரசாதமாக படைக்கிறார்கள். சில மாநிலங்களில் அரிசி மாவில் சொப்பு செய்து அதில் பூரணம் வைத்து வேக வைத்து மோதகம் செய்கிறார்கள். இன்னும் சில மாநிலங்களில் மைதா மாவில் சொப்பு செய்து அதில் பூரணம் வைத்து எண்ணெயில் பொரித்து எடுக்கிறார்கள். எந்த முறையில் செய்தாலும் சொப்பு செய்து பூரணத்தை வைத்து ஒரே மாதிரியான ஷேப்பில் தான் மோதகத்தை செய்கிறார்கள்.
ஆனால், மற்ற கடவுள்களுக்கும் இதைப் போல ஒரே மாதிரியான பிரசாதத்தையே அனைவரும் படைப்பதில்லை. உதாரணத்திற்கு கிருஷ்ண ஜெயந்தி அன்று தமிழர்கள் சீடை, முறுக்கு, தடடை மற்றும் இனிப்பு அவலையும் வெண்ணெயையும் கிருஷ்ணருக்கு படைப்பது வழக்கம். ஆனால், வட மாநிலங்களில் இது போல் செய்வதில்லை. அவர்கள் அந்தந்த மாநிலத்திற்குரிய இனிப்புகளை வைத்து படைக்கிறார்கள்.
அப்படி இருக்கும் பட்சத்தில், ஏன் பிள்ளையாருக்கு மட்டும் அனைவரும் பிரசாதமாக மோதகத்தை செய்கிறார்கள்? காரணத்தை பார்க்கலாமா?
வசிஷ்ட முனிவரின் மனைவி அருந்ததி தான் விநாயகருக்கு முதன் முதலில் மோதகம் படைத்து, அவரது அருளைப் பெற்றார்.
ஒருமுறை வசிஷ்ட மகரிஷியின் வேண்டுகோளை ஏற்று அவரது ஆசிரமத்திற்கு விநாயகப் பெருமான் எழுந்தருளினார்.
அவருக்கு புதியதாக ஒரு நிவேதனத்தை செய்ய அருந்ததி ஆசைப்பட்டார்.
விநாயகர் அண்டத்தின் உள்ளே எங்கும் பரிபூரணமாய் நிறைந்திருப்பதை உணர வைக்கும் வகையில் ஒரு நிவேதனத்தை செய்ய அருந்ததி முயற்சி செய்தார். அண்டத்தை உணர்த்த மாவால் 'சொப்பு' என்ற மேல் பகுதியை செய்தார்.
அண்டத்தில் உள்ளே பூரணமாய் நிறைந்திருக்கும் பிள்ளையாரைக் குறிக்கும் வகையில் இனிப்பான பூரணத்தை மாவுக்குள்ளே வைத்தார். அதுதான் அன்றிலிருந்து இன்று வரை மோதகம் என்றும் கொழுக்கட்டை என்றும் அழைக்கப்படுகிறது.
அருந்ததி உருவாக்கிய புதிய மோதகத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்ட விநாயகர் அவருக்கு தன்னுடைய அருளையும் ஆசியையும் வாரி வழங்கினார்.
இக் காரணத்தினால் தான் விநாயகரை மோதகப் பிரியன் என்றும் நாம் அழைக்கிறோம்.
மேலும் அன்று முதல் பிள்ளையார் அருந்ததி படைத்த கொழுக்கட்டையை எப்போதும் கைகளில் ஏந்தி கொண்டிருக்கிறார். அதாவது நாமும் நம்முடைய அகம் என்கிற சொப்பில் பூரணம் என்கிற இனிய சிந்தனைகளையும் எண்ணங்களையும் நிரப்பி எல்லோருக்கும் நல்ல செயல்களை செய்தால், நிச்சயமாக அந்த விநாயகப் பெருமான் நம்மையும் அவருடைய உள்ளங்கையில் வைத்து தாங்குவார்.
ஆகவே நாமும் தூய உள்ளத்தோடு விநாயகரை வழிபட்டு அவருக்கு பிடித்த மோதகத்தை படைத்து அவருடைய பரிபூரண ஆசிகளையும் அருளையும் பெறுவோமாக!