
காரைக்குடி அருகேயுள்ள பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தமிழ்நாட்டின் மிகப் பழைமையான குகைக்கோயில்களுள் ஒன்றாகும். இங்கு விநாயகப்பெருமான் பிற இடங்களில் காணப்படுவதைப் போல நான்கு கைகளுடன் இல்லாமல் இரு கைகளுடன் காணப்படுகிறார். இங்கு விநாயகர் மனித உருவில் இருப்பதனால் உச்சிகால பூஜை நேரத்தில் பலவிதமான காய்கறிகளுடன் உணவு தயாரித்து நைவேத்தியம் செய்வது விசேஷமானது. விநாயகா் சதுா்த்தி விழா மிகுந்த கோலாகலத்துடன் 10 நாட்கள் நடைபெறும். இங்கு 3 லிங்கங்கள் - திருவீசா், மருதீசா் மற்றும் செஞ்சதீஸ்வரா், 3 பெண் தெய்வங்கள் - சிவகாமி அம்மன், வடமலா் மங்கையம்மன், சௌந்திரநாயகி அம்மன் ஒருசேர அமா்ந்து பக்தா்களுக்கு தரிசனம் கொடுக்கின்றனா். இது வேறு எந்தக் கோயிலிலும் இல்லாத சிறப்பு அம்சமாகும்.
பிள்ளையாரை பல வடிவங்களில் பார்த்திருக்கலாம். ஆனால், தலையில்லாத அதிசய பிள்ளையாரை முருகனின் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள பால் சுனை கண்ட சிவபெருமான் கோயிலுக்கும், காசி விஸ்வநாதர் கோயில் செல்லும் படிக்கட்டு பாதைக்கும் இடையே தரிசிக்கலாம். பழைமையான சிறிய மண்டபத்தில் இந்த விநாயகர் உள்ளார். இவரின் வாகனமான மூஞ்சூறும் தலையில்லாதபடி இருக்கிறது. இந்தப் பிள்ளையாரை, ‘மத்தியான பிள்ளையார்’ என்கிறார்கள். பங்குனி தேரோட்டத்தின்போது இங்கு விசேஷ விழா நடைபெறும். இந்த விநாயகர் தியானத்தில் இருப்பதாக ஐதீகம்.
உலகிலேயே மிகப் பெரிய பிள்ளையார் சிலை, கோவை புளியங்குளம் ‘தேவேந்திர பிள்ளையார் கோயில்’ பிள்ளையார்தான். இங்குள்ள பிள்ளையார் சிலையின் உயரம் 16 அடி, உயரம் 11 அடி. சிலையின் எடை சுமார் 180 டன்கள். ஒரே கல்லில் ஆன சிலை. இவரை, ‘தேவேந்திரப் பிள்ளையார்’ என்கிறார்கள். இவர் வலம்புரி பிள்ளையார். சிவபெருமானைப் போல இவருக்கும் மூன்று கண்கள் உள்ளது. முக்கண்ணனான இவர் தலையில் மணிமகுடம் சூட்டி உள்ளார். வயிற்றை சுற்றி பெரிய பாம்பு உள்ளது. அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார். இந்தப் பிள்ளையார் பின்புறம் ஏணி உள்ளது. இதில் ஏறித்தான் இவருக்கு அபிஷேகம் செய்கிறார்கள்.
திண்டுக்கல் நகரின் மையப்பகுதியான மணிக்கூண்டில் அமைந்துள்ளது வெள்ளை விநாயகர் கோயில். ஆரம்ப காலத்தில் இக்கோயில் பின்புறம் உள்ள நந்தவனத்தில் வெள்ளை நிற நந்தியாவட்டை மலர்கள் பூத்துக் குலுங்கின. இந்த வெள்ளை நிற மலர்களால் அலங்கரித்து தினமும் விநாயகரை வணங்கி வந்தனர். இன்றும் அது தொடர்கிறது. இதனைக் கண்டு வணங்கிய பக்தர்கள் நாளடைவில், 'வெள்ளை விநாயகர்' என்றே அழைக்கத் தொடங்கினர். இங்கு விநாயகர் சதுர்த்தி விழா 19 நாட்கள் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டிலேயே இங்குதான் விநாயகருக்கு அதிக நாட்கள் விழா எடுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது!
புதுச்சேரி நகரின் நம்பர்-ஒன் ஆன்மிகத் தலமாக மட்டுமின்றி, நம்பர்-ஒன் சுற்றுலா தலமாகவும் மணக்குள விநாயகர் ஆலயம் திகழ்கிறது. இந்திய நாட்டிலேயே விநாயகருக்கு தங்கத்தால் ஆன மூலஸ்தான கோபுரம் இத்தலத்தில் மட்டும்தான் உள்ளது. விநாயகருக்கு இத்தலத்தில் மட்டும்தான் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. பெரும்பாலும் பிரம்மச்சாரியாக பாவிக்கப்படும் விநாயகர், இத்தலத்தில் சித்தி, புத்தி என இரு மனைவியருடன் காட்சியளிக்கிறார். பொதுவாக, எந்த ஊரிலும் விநாயகர் கோயில்களில் பள்ளியறை இருக்காது. விதிவிலக்காக இங்கு மட்டுமே விநாயகர் கோயிலில் பள்ளியறை உள்ளது.
திண்டுக்கல் மாநகராட்சியின் மையப்பகுதியில் அமைந்துள்ளது 108 விநாயகர் கோயில். இதற்கு 108 விநாயகர் கோயில் என்ற பெயர் வந்ததற்குக் காரணமே இந்த கோயிலில் 108 வகையான விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்யப்பட்டு வருவதுதான். அந்த வகையில் 108 விநாயகர் சிலைகள் வரிசையாக ஒவ்வொரு ரூபங்களிலும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றன. அது மட்டுமில்லாமல் இந்தக் கோயிலில் ஆசிய கண்டத்திலேயே எங்கேயும் இல்லாத அளவிற்கு ஒரே கல்லில் செய்யப்பட்ட 32 அடி விநாயகர் சிலை பிரம்மாண்டமான வகையில் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு செய்து வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம், ஆடுதுறைக்கு அருகில் உள்ள மருதுவாக்குடி எனுமிடத்தில் உள்ளது அருள்மிகு அபிராமி அம்பிகை உடனாய ஜராதேசுவர சுவாமி கோயில். இங்குள்ள விநாயகர் வெள்ளை மணலால் ஆன சுயம்பு மூர்த்தி. இங்குள்ள விநாயகர் தேள் வடிவில் உள்ள தும்பிக்கையைக் கொண்டு விருச்சிக விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். விருச்சிக ராசிக்காரர்கள் இங்கு வழிபாடு செய்வது நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது.
கோவை நகர், குனியமுத்தூர் பகுதியில் கோயில் கொண்டுள்ள ஸ்ரீ யோக விநாயகர் வழக்கமாக அமர்ந்திருக்கும் கோலத்தில் அல்லாமல், யோக நிஷ்டையில் இளம் சிவப்பு நிறத்தில் அருள்பாலிப்பது சிறப்பு. இவரது திருக்கரங்களில் கரும்பு, ருத்திராட்சம், கமண்டலம், யோக தண்டம் தாங்கியபடி காட்சி தரும் கணபதியைக் காணக் கண் கோடி வேண்டும்.
பெங்களூர், கோலார் தங்கவயல் அருகே ‘கோலார்பேட்டை’ எனுமிடத்தில் உள்ளது ‘கோலரம்மா’ எனப்படும் துர்கை கோயில். இந்தக் கோயில் பிராகாரத்தில் சுட்ட களி மண்ணால் ஆன விநோத விநாயகர் சிலை உள்ளது. விநாயகருக்கு இருக்க வேண்டிய எல்லா அம்சங்களையும் கொண்ட இந்த விநாயகரை சாதாரணமாக நேர்முகமாகப் பார்த்தால் விநாயகர் உருவமே தெரியும். கண்ணை இடதுபுறம் மூடிக் கொண்டு வலது பக்கம் பார்த்தால் அது ஆஞ்சனேயர் முகமாகத் தெரியும். வலது பக்கம் மூடிக் கொண்டு இடது பக்கம் பார்த்தால் கருடனின் உருவம் தெரியும்.