

ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் பிறந்த தினம் இன்று. அவரது நூற்றாண்டு விழா நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில், அவர் இன்றும் கோடிக்கணக்கான பக்தர்களின் உள்ளத்திலும் இல்லத்திலும் வாழ்ந்து வழிகாட்டிக் கொண்டிருக்கிறார். இத்தினத்தில் அவரது சில நல்லுரைகள் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
* இல்வாழ்வு உங்களுக்கு ஏன் கொடுக்கப்பட்டுள்ளது என்று நீங்கள் அறிவீர்களா? வாழ்நாள் முழுவதும் உணவைத் தேடி வாழ்வை நடத்துவதற்கு மட்டுமல்ல, கடவுளை தேடுவதற்கு உங்களுக்கு உதவி செய்யவே வாழ்க்கை அமைந்துள்ளது.
* உங்களுக்கு கண் பார்வையும் கண்களும் ஏன் கொடுக்கப்பட்டிருக்கின்றன என்பதை நீங்கள் அறிவீர்களா? உங்களைச் சுற்றி உள்ள அனைத்தையும் பார்ப்பதற்காக மட்டுமல்ல, சகல வல்லமை வாய்ந்த பரம்பொருளை பார்ப்பதற்கு உதவவே கண்கள் உங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளன.
* பிரார்த்தனை என்பது உதட்டிலிருந்து வரக் கூடாது. நெஞ்சில் இருந்து வர வேண்டும். அது தனக்காக செய்யப்படக் கூடாது. பிறருக்காக செய்யப்பட வேண்டும்.
* வேகமாக போவது முக்கியமில்லை, சரியான பாதையில் போவதுதான் முக்கியம். அப்போதுதான் நாம் போய் சேர வேண்டிய இடத்துக்கு போய் சேருவோம். முக்தி அடைவதற்குரிய சாதனைக்கும் இது பொருந்தும்.
* நல்லொழுக்கம், நற்செயல், நற்செய்தி இவையே கடவுள் நெறியாகும்.
* சூரியனை பார்க்க நாம் விளக்கை எடுத்துக் கொண்டு போவதில்லை. அதன் ஒளியிலேயே நாம் சூரியனை பார்க்கிறோம். அதேபோல, நாம் கடவுளைக் காண பிற சாதனங்கள் தேவையில்லை. கடவுளைக் காண நமக்குக் கடவுளின் அருள்தான் தேவை.
* மேகங்கள் கலையும் வரை பொறுத்து இருந்தால்தான் சூரிய ஒளியைப் பார்க்க இயலும். அதேபோல அஞ்ஞானம் அகலும் வரையில் பொறுமையாக பிரார்த்தனை செய்தால்தான் இறையருள் கிட்டும்.
* சொர்க்கத்தைத் தேடி நாம் எங்கும் போக வேண்டியது இல்லை. கட்டுப்பாடான வாழ்க்கை, நல்லொழுக்கம், பிறரிடம் நாம் காட்டும் அன்பு, மற்ற ஜீவன்களிடம் நாம் காட்டும் கருணை இவற்றினால் நம்முடைய மனத்துக்கு கிடைக்கும் நிறைவே சொர்க்கமாகும்.
* தன்னுடைய முயற்சியால் ஒருவன் செல்வத்தைத் தேடி சேகரித்துக்கொள்ள முடியும். அதேபோல, நாம் செய்யும் நற்காரியங்களால் புண்ணியத்தைத் தேடிக்கொள்ள முடியும். அதன் பலனையும் அடைய முடியும். செல்வம் நமது வறுமை காலத்தில் உதவுகிறது. அதேபோல, புண்ணியம் நமக்கு ஏற்படும் துன்பங்களில் இருந்து நம்மைக் காக்கும்.
* ஒரு குறிப்பிட்ட ஊரை சென்றடைய சரியான டிக்கெட்டும் சரியான ரயிலும் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு தூரம் வாழ்வில் குறிப்பிட்ட இலக்கை அடைய சரியான சாஸ்திர அறிவும் சரியான சாதனை வழிகளும் மிகவும் முக்கியம்.
* தீய பண்புகளும் நல்ல பண்புகளும் நமது உடலை மாறி மாறி வசப்படுத்தினாலும் இறுதியில் நல்லவை மட்டுமே நம்மை ஆள வேண்டும்.
* நமது வாழ்க்கை ஒரு மரத்தை போன்றது. பண்பை வளர்க்கும் கல்விதான் அதன் வேர். எண்ணங்கள் மலர்கள். அவற்றால் விளையும் மகிழ்ச்சி தரும் முடிவுகளே பழங்கள்.
* கொஞ்ச நாளைக்கு எளிய உணவை சாப்பிட்டுப் பாருங்கள். உங்கள் உடலும் உள்ளமும் வழிக்கு வந்து விடும். உங்கள் நாக்கும் கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டுப்பட்டு விடும். அதேபோல, அளவோடு பேசவும் கற்றுக் கொள்ளுங்கள்.
* நல்ல காரியங்கள் சத்வ குணத்தின் மூலமாக வரக்கூடியவை. தீய சிந்தனைகளும் செயல்களும் ரஜோ குணத்தால் தூண்டப்படுபவை. பயனற்ற செயல்களுக்கு தமோ குணம் அடிப்படையாக அமையும்.
* அன்பு வழியில் ஆண்டவனின் பக்தியில் ஈடுபடுங்கள். உங்கள் குழப்பம் யாவும் மறைந்து விடும்.
* நல்ல விஷயங்கள் விலை மதிப்பற்றவை. எனவே, அது எண்ணிக்கையில் குறைவாகத்தான் இருக்கும். அவற்றை வாங்குவோருக்கு தகுதி வேண்டும்.
* அகங்காரத்தால் குருடாகி தன்னைச் சுற்றி உள்ள எதையும் பார்க்க இயலாதவருக்கு வாழ்வு ஒருபோதும் இனிமை தராது. எந்த நன்மையையும் எப்போதும் யாருக்கும் செய்யாதவன் எளிதாக வாழ இயலாது. பாவகரமான வாழ்க்கை நடத்துபவனுக்கு மகிழ்ச்சி நீடிக்காது.
* வாழ்க்கையில் நாம் ஆசைப்பட்டு தேடும் பணம், அதிகாரம், பெருமை எல்லாமே நாம் இறந்துபோன பின் நம்முடன் வரக்கூடியவை அல்ல. ஆனால், இவை எதுவானாலும் அது இறைவனுக்கே அர்ப்பணம் என்று நினைத்து விடும்போது அவை அழிவில்லாத தன்மையை பெற்று விடுகின்றன.
* பயம், பக்தி, நம்பிக்கை மூன்றும்தான் உண்மையான கல்வி அறிவு கிடைக்க அடிப்படை.
* நல்ல உடல் ஆரோக்கியமும் உள்ள வலிமையும் கிடைத்து ஆன்மிக ஞானத்தை நாடுபவர்கள் அதை ஏழை எளியவர்களின் சேவைக்குப் பயன்படுத்தினால்தான் முழு பயனும் கிடைக்கும்.