
ஒன்பது வகை விஷத்தன்மை கொண்ட பொருட்களை, அதாவது சாதி லிங்கம், மனோ சிலை, காந்தம், காரம், கந்தகம், பூரம், வெள்ளை பாஷாணம், கௌரி பாஷாணம், தொட்டி பாஷாணம் ஆகிய 9 வகையான விஷத்தன்மை கொண்ட பொருட்களையே நவபாஷாணம் என்று அழைக்கிறோம். இவற்றில் உள்ள அணுக்களை முறைப்படி பிரித்து மீண்டும் சேர்ப்பதை ‘நவபாஷாணம்’ கட்டுதல் என சொல்லப்படுவது உண்டு.
இவை முறையாகக் கட்டப்பட்டு செய்த சிலைகளில் படும் அபிஷேக நீர், அபிஷேகப் பொருட்கள் தீராத நோய்களைத் தீர்க்கும் மருந்தாக மாறுகின்றன என்பது உண்மையாகும். அவ்வகையில் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி மலையில் அமைந்துள்ள தண்டாயுதபாணி சிலை, கொடைக்கானலில் உள்ள குழந்தை வேலப்பர் சிலை, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சுகந்தவனேஸ்வரர் கோயிலில் உள்ள இரட்டை முக பைரவர் சிலை, சிவகாசியில் உள்ள லட்சுமி நாராயணர் கோயிலில் உள்ள பெருமாள் சிலை, தேவிப்பட்டினத்தில் உள்ள நவகிரக சிலைகள் ஆகிய ஆறும் நவ பாஷாணத்தால் ஆனவையாகும்.
முருகனின் அறுபடை வீடுகளில் பழனி முருகன் கோயில் தவிர, மற்ற 5 தலங்களிலும் சுப்ரமணியன் என்ற பெயருடன் அருள்பாலிக்கும் முருகன், பழனியில் மட்டுமே கையில் தண்டத்துடன் தண்டாயுதபாணி என்ற திருநாமம் கொண்டு அழைக்கப்படுகிறார். இக்கோயில் நவபாஷாண மூலவர் சிலை போகர் உள்ளிட்ட 81 சித்தர்களால் உருவாக்கப்பட்டதாகும்.
பழனி முருகன் கோயில் மூலவர் சிலை, பலவிதமான மூலிகைகளைக் கொண்டு போகர் தனது கையால் தெய்வ உத்தரவின் பேரில் 9 ஆண்டுகள் செய்த சிலையாகும். ஆனால், முருகனின் தலையில் இருக்கும் ருத்ராட்ச மாலை, கண், மூக்கு, வாய், கை விரல்கள் என அனைத்தும் உளி கொண்டு செதுக்கியதை போல் காட்சி தருவது இச்சிலையின் மற்றொரு தனிச்சிறப்பாகும்.
சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட ஒரு சிலை இன்று வரை மருத்துவ குணம் மாறாமல் இருப்பது பழனி முருகன் சிலையின் அதிசயமாகும். பழனி முருகன் சிலையில் சேர்க்கப்பட்டுள்ள 9 பாஷாண பொருட்கள் ஒவ்வொன்றும் நவகிரகங்களுடன் தொடர்புடையதால் பழனி முருகனை வழிபட்டால் நவகிரகங்களையும் வழிபட்ட பலனை பெறுவதோடு நவகிரக தோஷங்களும் நிவர்த்தியாகும்.
பழனி முருகன் சிலை எப்போதும் உஷ்ணத்துடன் காணப்படுவதால் காலையில் நடை திறக்கப்படும்போது முருகனின் சிலையில் வியர்வைத் துளிகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. முருகனின் சிலையில் வியர்த்த நீர் கலந்த தீர்த்தம், முருகனின் திருமார்பில் இரவில் சாத்தப்படும் சந்தனம் ஆகியன அனைத்து விதமான நோய்களையும் தீர்க்கக்கூடிய அருமருந்தாக அமைக்கிறது. விஷம் என குறிப்பிடப்படும் பொருட்களால் செய்யப்பட்ட சிலை மீது இரவில் வைக்கப்படும் பொருள், காலையில் மருந்தாக மாறுவது இன்றும் பழனியில் நடைபெறும் அதிசயமாகும்.