
இந்தியாவில் இருந்து சுமார் 6000 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு விஷ்ணு கோயில், இன்றும் ஒரு மிகச் சிறந்த ஆன்மிக மையமாக மக்களின் வழிபாட்டில் உள்ளது. இந்தியாவை தாண்டி கம்போடியா, வியட்நாம், தாய்லாந்து, லாவோஸ் ஆகிய நாடுகளில் மிகப் பழைமையான இந்து கோயில்கள் இருந்தாலும் அங்கு கோயில்கள் காட்சிப் பொருளாகவே உள்ளன. ஆனால், இந்தோனேசியாவின் பாலி தீவில், பல பழைமையான கோயில்கள் இருந்தாலும் அங்கு தினசரி வழிபாடு, கோயில் திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. அதோடு, இந்தியாவை போன்றே இக்கோயில்களுக்கு தல புராணமும் உள்ளன. பாலியில் உள்ள டம்பக்சிரிங் மாவட்டத்தில் பசுமையான மலைகள் மற்றும் வயல்களுக்கு நடுவே அழகிய மனுகாயா கிராமத்தில் தீர்த்த எம்புல் கோயில் அமைந்துள்ளது. பாலி தீவின் முக்கிய ஆன்மிகத் தலமாக தீர்த்த எம்புல் விஷ்ணு கோயில் உள்ளது.
பாலி புராணங்களின்படி அசுர மன்னனான மாயதேனவா, இந்திரனுக்கும் இந்தத் தீவில் உள்ள மக்களுக்கும் தொந்தரவு செய்து வந்தான். இந்திரனும் மற்ற தேவர்களும் மாயதேனவாவைத் தாக்கி அவனை அரியணையிலிருந்து இறக்கினர். மாயதேனவாவும் அவனது படைகளும் 'டம்பக் சிரிங்' கிராமத்திற்கு தப்பி ஓடினர். இரவில் இந்திரனின் படை உறக்கத்தில் இருந்தபோது, மாயதேனவா அங்கு நுழைந்து ஒரு அழகிய விஷ ஊற்றை உருவாக்கினான். காலையில் இந்திரன் விழித்துக் பார்த்தபோது, தனது படை வீரர்கள் விஷத் தண்ணீரை குடித்து இறந்ததைக் கண்டார்.
இந்திரன் உடனே தனது கை வாளால் தரையில் துளைத்து ஒரு புனித ஊற்றை உருவாக்கினர். அதிலிருந்து வரும் தண்ணீரை தனது வீரர்கள் மீது தெளித்து மீண்டும் உயிர்பித்தார். அந்தத் தண்ணீர் உயிர் தரும் அமிர்தமாக இருந்தது. அதைத்தான் ‘எம்புல தீர்த்தம்’ என்று அழைத்தனர். இந்திரன் மாயதேனவாவை பழி வாங்க தேடி அலைந்தார். அவனோ பல விலங்குகள் தோற்றம் எடுத்து பதுங்கிக் கொண்டான். இறுதியில் அவன் பாறை வடிவம் எடுத்தபோது, இந்திரன் அவனைக் கண்டுபிடித்து அம்பெய்தி கொன்றார். அப்போது பீரிட்ட மாயதேனவாவின் இரத்தம் பெட்டானு நதியை உருவாக்கியது. அந்த சபிக்கப்பட்ட நதி நீரில் விளையும் அரிசி இரத்த வாடையை கொண்டுள்ளன.
கி.பி. 962ம் ஆண்டில் வர்மதேவா மன்னர் வம்ச ஆட்சியில் இங்கு ஒரு விஷ்ணு கோயில் கட்டப்பட்டது. இந்தக் கோயில் உள்ள தீர்த்தத்தில் குளித்தால் உடலில் உள்ள நோய்கள் மறையும், உடல் புத்துணர்ச்சி பெறும், பாவங்கள் அனைத்தும் விலகும். இதனால் ஆயிரக்கணக்கான வருடங்களாக பக்தர்கள் இங்கு வந்து நீராடி விட்டுச் செல்கின்றனர். இந்தக் கோயில் வளாகம் மிகப் பிரம்மாண்டமாக பாலி இந்து பாரம்பரிய கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.
இந்தக் கோயிலில் விஷ்ணு முதன்மை கடவுளாக இருந்தாலும், சிவன், பிரம்மா, இந்திரனுக்கு தனி சன்னிதிகள் உள்ளன. இந்தக் கோயிலில் வெளிப்புற முற்றம் (ஜபா புரா), நடுத்தர முற்றம் (ஜபா தெங்கா) மற்றும் உள் கருவறை (ஜெரோன்) ஆகியவை உள்ளன. உள்கருவறையில் புனித நீரூற்று உள்ளது. குளங்களில் பாய்கிறது. ஒவ்வொரு குளமும் குறிப்பிட்ட சடங்குகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. பக்தர்கள் அருவி நீரின் கீழ் பிரார்த்தனைகள் மற்றும் சடங்குகளைச் செய்கிறார்கள்.
தீர்த்த எம்புல் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மெலுகட் விழா என்னும் நீராடும் விழா நடைபெறுகிறது. இது உடல் மற்றும் மனதை துய்மைப்படுத்தும் ஒரு நிகழ்வாக இருக்கிறது. இந்த நீராடுதல் மூலம் உடலில் இருக்கும் தீய சக்திகள், எதிர்மறை எண்ணங்கள், நோய்கள் அனைத்தும் நீங்கி நல்ல எண்ணங்கள், புத்துணர்ச்சி, மகிழ்ச்சி கிடைக்கிறது.
இந்த தீர்த்த நீர் ஏராளமான மருத்துவ குணங்கள் கொண்டது. இறந்தவர்களை உயிர்பித்த அமிர்தம் இது. இந்தியாவில் நாம் காசி, ராமேஸ்வரத்தில் நீராடுவதை போன்றது இது. இங்கு நீராடும் சடங்குகளைச் செய்ய பூசாரி வழிகாட்டுவார். இந்த கோயிலில் நீராட ஆண்டு தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள். பாலி இந்து மக்கள் மட்டுமின்றி , ஏராளமான ஐரோப்பிய மக்களும் பக்தி கொண்டு இங்கு புனித சடங்குகளை மேற்கொண்டு நல்வழி அடைகின்றனர்.
சென்னையில் இருந்து பாலிக்கு விமான சேவைகள் உள்ளன. அங்கிருந்து சாலை வழியாக மனுகாயா சென்று கோயிலை அடையலாம். கோயிலின் அழகைப் பராமரிக்கவும் அதன் பாதுகாப்பை உறுதி செய்யவும் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பெரியவர்களுக்கு 75,000 ரூபியாவும் (₹399), சிறியவர்களுக்கு 50,000 ரூபியாவும் (₹265), 5 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இலவச நுழைவும் வழங்கப்படுகிறது.